ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவி… முட்டுக்கட்டை போடுவதில் எந்த வகையில் நியாயம்? முதலமைச்சர் ஸ்டாலின் பரபர!

Author: Udayachandran RadhaKrishnan
18 November 2023, 11:36 am

ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவி… முட்டுக்கட்டை போடுவதில் எந்த வகையில் நியாயம்? முதலமைச்சர் ஸ்டாலின் பரபர!

தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்;- என் உடல் நலனை விட மக்கள் நலனே முக்கியம்; தாய் தமிழ்நாட்டின் நலனே முக்கியம். இந்திய ஜனநாயகம் மிக மோசமான நிலையில் உள்ளது. கலைஞர் வழியில் நின்று ஆட்சி நடத்தி வருகிறோம். அதற்கு தடை வருமானால் பாரதிதாசன் வழியில் தடைக்கற்களை உடைப்போம்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மை அரசின் மசோதாக்களை ஆளுநர் நிறைவேற்றி தர வேண்டும் என்பது ஆளுநரின் கடமை. விளக்கம், சந்தேகம் இருந்தால் அரசிடம் கேட்கலாம். ஒருபோதும் அவர் கோரிய விளக்கங்கள் கொடுக்கப்படாமல் இருந்ததில்லை.

தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில் மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். தமிழ்நாட்டையும், மக்களையும் அவமதித்துள்ளார்.

ஒன்றிய அரசுக்கு அவருக்கு இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்தி தமிழ்நாடு அரசுக்கு நிதியை பெற்று தரலாம். ஆளுநர் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே பாலமாக செயல்படலாம். ஆனால், மாநில அரசின் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.

தினந்தோறும் யாரைவாது கூட்டி வைத்துக்கொண்டு ஆளுநர் வகுப்பு எடுக்கிறார். வகுப்பு எடுக்கட்டும், ஆனால் தவறான பாடங்களை எடுக்கிறார். அரசின் கொள்கைகள் குறித்து பொதுவெளியில் விமர்சிப்பது சரியல்ல.

இந்திய நாடு இதுவரை கண்டிராத முன்னோடி திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவி என்றாலும், இருக்கும் வரை மக்களாட்சி தத்துவத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும்.

கோப்புகளை ஆளுநர் கிடப்பில் போட்டடதால் தான் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்ற கதவுகளை தட்ட நேர்ந்தது. அரசின் வாதங்களை கேட்டு உச்சநீதிமன்றம் பதில் அளித்திருப்பது தமிழ்நாட்டு அரசுக்கு கிடைத்த முதல் வெற்றி என்றார்.

பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர் மூலம் அழுத்தம் கொடுத்து வருகிறார். உச்சநீதிமன்றம் தலையில் ஓங்கி குட்டு வைத்ததும், கோப்புகளை திருப்பி அனுப்புவதும், சிலவற்றுக்கு ஒப்புதல் அளிப்பதுமாக உள்ளார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும் பேசிய முதல்வர் ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட சட்ட மசோதாக்களை நாம் மீண்டும் நிறைவேற்றி அனுப்ப இருக்கிறோம். திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைக்கவே சட்டமன்ற சிறப்பு கூட்டம் என தெரிவித்துள்ளார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி