இபிஎஸ்க்கு க்ரீன் சிக்னல் : கெடு விதித்து அமைச்சர் உதயநிதிக்கு நீதிமன்றம் வைத்த குட்டு..!!!
Author: Udayachandran RadhaKrishnan21 September 2023, 1:37 pm
இபிஎஸ்க்கு க்ரீன் சிக்னல் : கெடு விதித்து அமைச்சர் உதயநிதிக்கு நீதிமன்றம் வைத்த குட்டு..!!!
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புப்படுத்தி பேச அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன்னை பற்றி அவதூறு கருத்துக்களை பேச தடை விதிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தனிப்பட்ட முறையில் அவதூறாக இருந்தால், மேற்கொண்டு பேச தடை விதிக்க முகாந்திரம் உள்ளது என நீதிபதி மஞ்சுளா தெரிவித்துள்ளார். மேலும், இபிஎஸ் தொடர்ந்து வழக்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரு வாரங்களுக்கு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தன்னை தொடர்புப்படுத்தி பேசியதாக கூறி ரூ.1.10 கோடி மான நஷ்ட ஈடு வழங்கக்கோரி இபிஎஸ் மனுவில் கோரிக்கை வைத்திருந்தார். கோடநாடு வழக்கில் தன்னிடம் ஒருமுறை கூட விசாரணை நடத்தியதில்லை என்றும் இபிஎஸ் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, சனாதன சர்ச்சை விவகாரம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் பாஜக அரசை விமர்சித்து அறிக்கை வெளியிட்டார். அதில் அதிமுகவையும் கடுமையாக விமர்சித்து வெளியிட்டிருந்தார்.
சனாதனம் என்றால் என்ன என்பதை வீட்டினுள் பத்திரமாக அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்களில் இருந்து தேடிக்கொண்டிருக்கும் எடப்பாடி அவர்களே, கோடநாடு கொலை, கொள்ளை வழக்குகளிலும், ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்க, நீங்கள் ஆட்டுத் தாடிக்குப்பின் நீண்டநாள் ஒழிந்திருக்க முடியாது.
ஆடு ஒருநாள் காணாமல் போகும்போது, நீங்கள் என்ன ஆகப்போகிறீர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்” என்று கூறியிருந்தார்.
இதனைத்தொடர்ந்து, கோடநாடு வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேசிய அமைச்சர் உதயநிதிக்கு எதிராக ரூ.1.10 கோடி இழப்பீடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த நிலையில், கோடநாடு வழக்கில் இபிஎஸ்-ஐ தொடர்புபடுத்தி பேச அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.