குட்கா ஊழல் விவகாரம் : முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு பதிய முடிவு.. தமிழக அரசுக்கு சிபிஐ பரபரப்பு கடிதம்!!
Author: Udayachandran RadhaKrishnan20 July 2022, 9:50 am
குட்கா, பான் மசாலா போன்ற போதைப் பொருட்களை உற்பத்தி செய்யவும், விற்கவும் கடந்த 2013ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு தடை விதித்தது. ஆனாலும் குட்கா பொருட்கள் தொடர்ந்து சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்பட்டு வந்திருக்கிறது.
இந்த விற்பனைக்கு பின்னிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை டிஜிபி ஆகியோர் லஞ்சம் வாங்கி இருப்பதாக 2017ல் புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி அப்போதைய திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
40 கோடி ரூபாய் வரை இதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் வைக்கப்பட்டது. இந்த வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது ஒரு பக்கம் இருக்க, இதில் லஞ்சம் வாங்கி, நிதி மோசடி செய்ததாக கூறி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் டிஜிபி ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, உள்ளிட்ட முக்கிய புள்ளிகளின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது.
இந்த நிலையில்தான் தற்போது குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணாவிற்கு எதிராக சிபிஐ கடிதம் எழுதி உள்ளது. 12 பேர் மீது வழக்கு பதிவு செய்ய தமிழ்நாடு அரசிடம் அனுமதி கேட்டு சிபிஐ கடிதம் எழுதியுள்ளது.
முன்னாள் டிஜிபிக்கள் டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் ஆகியோர் மீது வழக்கு தொடர அனுமதி கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு அரசு முடிவு எடுக்க வேண்டும்.
முன்னாள் அமைச்சர்கள், முன்னாள், இந்நாள் ஐபிஎஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடுக்க வேண்டும் என்றால், அதற்கு தலைமை செயலாளர் அனுமதி வேண்டும். இதன் காரணமாக தற்போது அனுமதி கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
சிபிஐ அமைப்பின் ஊழல் தடுப்பு பிரிவு காரணமாக இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. வருவாய் துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் சிலரின் பெயர்களும் சிபிஐ வளையத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதில் ஏற்கனவே 6 பேருக்கு எதிராக முதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் இரண்டாவது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மீண்டும் இந்த வழக்கில் விசாரணை சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தமிழ்நாடு அரசு விரைவில் வழக்கு தொடுக்க அனுமதி கொடுக்கும் என்று கூறப்படுகிறது.
0
0