‘ரொம்ப ஓவரா பேசுறீங்க… இனி பேசாத மாதிரி ஆக்கிடுவோம்’ : ஆர்எஸ் பாரதியை வெளிப்படையாகவே மிரட்டிய எச்.ராஜா..!!

Author: Babu Lakshmanan
13 March 2023, 6:12 pm

மதுரை ; முரசொலி உள்ளிட்ட பஞ்சமி நிலம் மீட்புக்காக பாஜக நடத்தும் போராட்டத்தில் திருமாவளவன் பங்கேற்பாரா..? பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய அரசு பட்டியல் சமுதாய மக்களுக்காக ஒதுக்கக்கூடிய சிறப்பு உட்கூறு திட்ட நிதி மற்றும் பட்டியல் சமூகத்தினருக்கான துணைத்திட்ட நிதியினை முறையாக பயன்படுத்தாமல், தமிழக அரசு திரும்பி அனுப்பியதோடு, மாற்று திட்டங்களுக்கு பயன்படுத்தியதாகக் கூறி மதுரை அவுட் போஸ்ட் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலையின் கையில் பாஜக மூத்த நிர்வாகி எச் ராஜா தலைமையில் பாஜகவினர் கோரிக்கை மனு வழங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்பொழுது, கோரிக்கைகள் அடங்கிய மனுவை அம்பேத்கர் சிலையிடம் கையில் வைத்ததோடு, அம்பேத்கர் சிலையின் கையில் தாமரைப் பூவையும் வைத்து சென்றனர். இதனால், அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா :- தமிழக அரசு பட்டியலின வகுப்பினருக்கு வழங்கப்பட்ட நிதியை பயன்படுத்தி சமத்துவபுரம் கட்டியுள்ளார்கள். இதுவரை பட்டியல் இன சமூகத்திற்கு கடந்த 2 ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து 10,446 கோடி ரூபாயை செலவு செய்யாமல் திருப்பி அனுப்பி வைத்து மோசடி செய்துள்ளனர். சமூக நீதிப் பாதுகாப்பு என கூறி பட்டியலின சமுதாய மக்களுக்கு சொல்லொனா துரோகத்தை தமிழக அரசு செய்திருக்கிறார்கள்.

அதனால் சட்டமேதை அம்பேத்கர் தான் இவர்களை தட்டி கேட்க வேண்டும் என்பதற்காக, அம்பேத்கர் சிலைக்கு மனு கொடுத்துள்ளோம். மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்ட நிதி அடங்கிய பட்டியலை அம்பேத்கர் சிலையிடம் வழங்கியுள்ளோம், எனக் கூறினார்.

திராவிட கட்சிகள் பட்டியலின மக்களுக்கு எதிராக அநீதி செய்கிறது. அம்பேத்கர் தான் இவர்களை தட்டி கேட்க வேண்டும். பட்டியல் இனத்தவர் மாணவர்களுக்கான உதவித்தொகை வழங்குவது, பட்டியல் இனத்தவர்கள் மீதான தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுகளை வைக்கும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளன் திமுகவுடன் ஏன் இன்னும் இருக்கிறார் வெளியேறிவிடலாமே என கேள்வி எழுப்பினார்.

பட்டியலின சமூக மக்கள் மீது திருமாவளவனுக்கு அக்கறை இருந்தால் வேங்கை வயல் சம்பவத்தில் ஏன் திருமாவளவன் ஒரு நாள் கூட சென்று போராட்டத்தில் ஈடுபடவில்லை. குற்றவாளிகளை கைது செய்யும் வரை நகர மாட்டேனென்று கூறி காத்திருப்புப் போராட்டம் நடத்திருக்கலாமே, ஏன் செய்யவில்லை..? ஏனென்றால் அந்த சம்பவத்தில் திமுக கவுன்சிலர் ஈடுபட்டதாக கூறுகிறார்கள். திருமாவளவனுக்கு பட்டியலின மக்கள் மீதான நலன் இல்லை என்பதை பட்டியலின சமுதாய மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பட்டியிலின சமூகத்தினரை ஆதிதிராவிடர் என்ற பெயர் தவறானது. ஆதித்தமிழர் அல்லது சாம்பவர் என கூறுங்கள். 1926 அரசாணையில் தெலுங்கு பேசுகிற ஹரிஜன மக்கள் ஆதி தெலுங்கர் என்றும், தமிழ் பேசக்கூடிய ஹரிஜன மக்கள் ஆதிதிராவிடர் என்றும் அழைக்கப்படுவார் என உள்ளது. அதை எதிர்த்து போராட்டம் நடத்துங்கள்.

பாஜக தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கும் என கூறியுள்ளது. முரசொலி கட்டிடம் தொடங்கி தமிழக முழுவதிலும் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டுக் கொடுக்க பாஜக அறைகூவல் விடுகிறது. எங்கே? இதனை திருமாவளவன் ஆதரிப்பாரா? தமிழகத்தில் உள்ள பஞ்சமி நிலங்கள் அனைத்தையும் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு உண்மையான நபர்களுக்கு வழங்க வேண்டும். பஞ்சமி நிலங்களை அடாவடி செய்து ஆக்கிரமித்து வைத்துள்ளார்கள்.

முரசொலி உட்பட பஞ்சமி நிலத்தை மீட்டு தர பாரதிய ஜனதா கட்சி நடத்தும் போராட்டத்தில் திருமாவளவன் பங்கேற்பாரா என நேரடியாகவே அழைக்கிறோம். ஆர் எஸ்பாரதி பேசாமல் இருக்க வேண்டும். இல்லையென்றால் பேசாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ, அதை நாங்கள் செய்வோம், எனக் கூறினார்.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!