அதிமுக அலுவலகத்தில் எடுத்த பொருட்களை திருப்பி ஒப்படையுங்க : ஓபிஎஸ் தரப்புக்கு ஷாக் கொடுத்த உயர்நீதிமன்றம்?!!

Author: Udayachandran RadhaKrishnan
4 May 2023, 8:47 pm

அதிமுகவில் ஒற்றைத் தலைமையை ஏற்படுத்தும் நோக்கில் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ம் தேதி வானகரத்தில் நடைபெற்றது. அந்த நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தனர்.

பூட்டியிருந்த அலுவலகத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அப்போது ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டு கலவரமானது. இதில், 47 பேர் காயம் அடைந்தனர்.

இதையடுத்து அதிமுக அலுவலகத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. பின்னர் நீதிமன்ற உத்தரவின்பேரில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 21-ம் தேதி ‘சீல்’ அகற்றப்பட்டு அலுவலகத்தின் சாவி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதன்பின், அதிமுக அமைப்புச் செயலாளர் சி.வி.சண்முகம், கடந்த ஆண்டு ஜூலை 23-ம் தேதி ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரில், ‘அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து கட்சி தொடர்பான அசல் பத்திரங்கள், ஆவணங்கள், ரசீதுகள், 2 கம்ப்யூட்டர்கள், கட்சி பெயரில் உள்ள சொத்து ஆவணங்கள், ரூ.31 ஆயிரம் பணம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கட்சி அலுவலகத்தில் இருந்து ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர்’ என கூறியிருந்தார்.

அதுதொடர்பான வீடியோ ஆதாரங்களையும் அளித்திருந்தார்.
இந்த புகாரின்பேரில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் மீது ராயப்பேட்டை போலீசார் கடந்த வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இச்சூழலில், அ.தி.மு.க., அமைப்புச் செயலர், சி.வி.சண்முகம் சென்னை ஐகோர்ட்டில், அதிமுக அலுவலகத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்ட பொருட்களை மீண்டும் ஒப்படைக்கோரி, மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம், அலுவலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட பொருட்களை மீண்டும் அமைப்புச் செயலாளர் சி.வி.சண்முகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ