பள்ளிக்கு பக்கத்தில் மதுவிற்பனை… புகார் அளித்த பார்வையற்ற நபரை கொடூரமாக தாக்கிய போலீஸ்… வீடியோ வைரலான நிலையில் டிஜிபி அதிரடி ..!!

Author: Babu Lakshmanan
19 March 2022, 7:06 pm

புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே பள்ளிக்கு அருகே மது விற்பனை தொடர்பாக புகார் அளித்த மாற்றுத்திறனாளி நபரை போலீசார் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் அரசு மதுபானக் கடைகள் மூலைக்கு மூலை செயல்பட்டு வருகின்றன. அதில், ஒரு குடியிருப்பு பகுதிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சில டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்தக் கடைகளில் மது அருந்தும் குடிமகன்கள், போதை தலைக்கேறிய நிலையில், சாலையில் தகாத செயல்களில் ஈடுபடுவதும், பொதுமக்கள் முகம் சுழிக்கும் விதத்தில் நடந்து கொள்வதும் நிகழ்ந்து வருவது தொடர்கதையாகி உள்ளது.

இதுபோன்ற இடையூறு ஏற்படுத்தும் டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டுமெனில், பொதுமக்கள் புகார் மூலமாகவோ அல்லது போராட்டத்தின் மூலமாகவோ அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பனர்.

இந்த நிலையில், பள்ளிக்கு அருகே மதுவிற்பனை செய்வதாக புகார் அளித்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவரை போலீசார் கொடூரமாக தாக்கியதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், புதுக்கோட்டையில் பள்ளிக்கு அருகே மது விற்பனை நடந்து வந்ததை சங்கர் என்ற பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவர் அவசர புகார் எண் 100-ஐ தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். அவர்கள் சம்பந்தப்பட்ட பகுதி காவல்நிலையத்திற்கு இந்த புகாரை திருப்பி விட்ட நிலையில், அங்குள்ள காவலர்கள் தொலைபேசி மூலம் மாற்றுத்திறனாளியை தொடர்பு கொண்டுள்ளனர்.

அப்போது, அந்த நபரிடம் பேசிய போலீசார், பின்னர் அவரது இடத்திற்கு நேரில் சென்று அவரை அழைத்துக் கொண்டு காவல்நிலையம் சென்றுள்ளனர். அங்கு அவரை கடுமையாக திட்டி, கொடூரமாகத் தாக்கியதாக அந்த நபர் கூறுகிறார். மேலும், கட்டை போன்ற பயங்கர ஆயுதத்தில் தாக்கியதாக பரிதாபமாக தெரிவித்தார்.

எந்தப் போலீஸ்காரர் என்ற அடையாளம் தெரியாது எனக் கூறிய அவர், குரலை வைத்து பார்க்கையில் ஒரு பெண் காவலர் உள்பட 4 காவலர்கள் அடித்ததாகக் கூறியுள்ளார். அதோடு, நீ வேண்டுமானால் மதுவை விற்பனை செய்து கொள் என்று ஏளனமாகக் கூறியதாகவும், அதனால் அவர் கோபமடைந்ததாகவும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், விராலிமலை காவல் ஆய்வாளர் பத்மாவை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், விராலிமலை காவல்நிலையத்தில் பணியாற்றிய 3 காவலர்களை பணி இடைநீக்கம் செய்து அவர்கள் மீது வழக்குப்பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!