இதுதான் உங்க சமூகநீதியா…? பஸ், ரயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு அனுமதி மறுப்பு… ‘திமுக அரசு’ பதில் சொல்லியே ஆகனும் : அண்ணாமலை!!

Author: Babu Lakshmanan
22 March 2022, 11:43 am

பல கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராட்டம் அறிவித்த மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்து மற்றும் ரயில்களில் அனுமதி மறுக்கப்பட்டதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர பாதுகாப்பு சமூகப் பாதுகாப்பு உதவித் தொகை, புதுச்சேரி (ரூ.3,800), தெலுங்கானா ( ரூ.3,016), ஆந்திரா (3,000) ஆகிய அண்டை மாநிலங்களில் வழங்கப்படுவதைப் போன்று, தமிழகத்திலும் உயர்த்தி வழங்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

அதேவேளையில், மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகை ரூ.1,000ல் இருந்து ரூ.1,500ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தது. ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு முடிவடைய உள்ள நிலையில், இன்னமும் தேர்தல் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றவில்லை. 3.50 லட்சம் பயனாளிகள் இருந்து வரும் நிலையில், வெறும் 2 வலட்சம் பேருக்கு மட்டுமே இந்த உதவித் தொகை உயர்வு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்தும், தங்களின் கோரிக்கையை வலியுறுத்தியும் 10,000 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் சென்னை கோட்டை தலைமைச் செயலகத்தில் குடியேறும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்தப் போராட்டத்தை முடக்கும் விதமாக, தமிழகம் முழுவதும், ரயில் மற்றும் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், தமிழக அரசின் இந்த செயலைக் கண்டித்து பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது :- மாற்றுத் திறனாளிகள் உதவி தொகை உயர்த்த கோரும் போராட்டத்தை தடுக்க தமிழகம் முழுவதும் ரயில் & பஸ் நிலையங்களில் சென்னை நோக்கி செல்லவிடாமல் மாநில அரசு தடுத்துக் கொண்டிருக்கிறது.

அனைவருக்குமான சமூக நீதி என்பது வெறும் பெயரளவில்தானா என்பதை இந்த ‘அறிவிப்பு திமுக அரசு’ விளக்கவேண்டும். காவல்துறை, தமிழக அரசின் நிர்பந்தத்தால், ரயில் டிக்கட் வழங்க கூடாது என ரயில்வே ஊழியர்களை தடுக்கிறது, என தெரிவித்துள்ளார்.

  • Missed to act with Rajini.. Famous actress Felt! ரஜினிக்கு மகளாக நடிக்க வேண்டிய சான்ஸ்.. மண்ணை அள்ளி போட்டுட்டாங்க.. புலம்பும் நடிகை!