முதல்ல உண்டியலில் இருந்து கைய எடுங்க… விமர்சித்த நடிகை கஸ்தூரியை ட்விட்டரில் பிளாக் செய்தாரா உதயநிதி?!!
Author: Udayachandran RadhaKrishnan4 September 2023, 8:17 am
முதல்ல உண்டியலில் இருந்து கைய எடுங்க… விமர்சித்த நடிகை கஸ்தூரியை ட்விட்டரில் பிளாக் செய்தாரா உதயநிதி?!!
சென்னை தேனாம்பேட்டையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற சனாதன தர்ம ஒழிப்பு மாநாட்டில் பேசிய தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் “டெங்கு, மலேரியா, கொரோனா, கொசு போன்றவற்றை ஒழிக்கத்தான் வேண்டும், எதிர்க்க முடியாது.
அதுபோன்று சனாதனம் சமூகநீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிரானது” என சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ள நிலையில் டெல்லியை சேர்ந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் டெல்லி காவல் நிலையத்தில் அமைச்சர் உதயநிதி சனாதான தர்மத்தை இழிவுப்படுத்தியதாக இந்திய குற்றவியல் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் புகார் அளித்துள்ளார்.
பெரும் சர்ச்சைக்கு ஆளான உதயநிதி ஸ்டாலினின் இத்தகைய கருத்துக்கு நடிகை கஸ்தூரி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் “டெங்கு மலேரியா உங்க தாய்க்கும் மாப்பிள்ளைக்குமே முற்றி உள்ளதே… அவங்களை என்ன பண்ணுறதா உத்தேசம்? ஊருக்கு உபதேசம் அதுவே திராவிடிய பரம்பரை யுக்தி. அவ்வளவு சனாதனத்தின் மேல் வெறுப்பு உள்ளவர்களுக்கு இந்து கோவில் சொத்து மட்டும் கேட்குதோ ? முதல்ல உண்டியல்ல இருந்து கைய எடுங்க!” என மு.க ஸ்டாலின் குடும்பம் முதல் தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறை வரை ரவுண்டு கட்டி விமர்சனம் செய்துள்ளார்.
இந்த நிலையில் நடிகை கஸ்தூரியை ட்விட்டரில் பிளாக் செய்துள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இது குறித்து கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் 03/09/23 உதயநிதி ஸ்டாலின் என்னை பிளாக் செய்துள்ளார். இதற்கான காரணம் ஏன் என புரியவில்லை என பதிவு செய்த அவர், Afterall அவ்வளவுதானா என கிண்டலடித்தும் உள்ளார்.