‘நிதி’க்காக ‘நீதி’யை மறந்து விட்டார்களோ? மூன்று குடும்பங்கள் சிதைந்து போன நாள் இன்று : திமுகவை சீண்டிய பாஜக நாராயணன் திருப்பதி!!
Author: Udayachandran RadhaKrishnan9 May 2023, 1:39 pm
கடந்த 2007 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலின்போது, சர்ச்சைக்குரிய கருத்துக்கணிப்பு வெளியானது என்றும், மு.க.அழகிரியை பின்னுக்குத்தள்ளி, மக்களிடையே அவரது செல்வாக்கை குறைக்கும் விதத்தில் செயல்பட்டதாகவும் கூறி, மதுரையில் உள்ள ‘தினகரன்’ நாளிதழ் அலுவலகத்தை அழகிரியின் ஆதரவாளர்கள் தீ வைத்து எரித்தனர்.
தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் ‘தினகரன்’ நாளிதழ் ஊழியர் முத்துராமலிங்கம், கோபி, வினோத் ஆகியோர் உயிரிழந்தனர்.
16 வருடங்களுக்கு முன் நடந்த இந்த சம்பவம் குறித்து இன்று தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து தனது பதிவில், 16 வருடங்களுக்கு முன் குடும்ப அரசியலால் மூன்று குடும்பங்கள் சிதைந்து போன நாள் இன்று. குடும்ப அரசின் கோர வன்முறை மூன்று உயிர்களை பறித்து சென்ற நாள் இன்று. ஆனாலும், குடும்ப அரசியல் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அன்றைய தினம் ‘இது பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல். நீதிக்காக போராடுவேன்’ என்று சொன்னவர்கள் இன்று ‘நிதி’க்காக ‘நீதி’யை மறந்து விட்டார்களோ? பாழும் குடும்ப அரசியல் என பதிவிட்டுள்ளார்.