நீட்டை ஒழித்துக் கட்டும் தைரியம்.. அவருக்கு இருக்கு : இதெல்லாம் பாஜக சாபம் : அமைச்சர் துரைமுருகன் ஆவேசப் பேச்சு!
Author: Udayachandran RadhaKrishnan20 August 2023, 2:09 pm
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரி திமுக சார்பாக உண்ணாவிரத போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அந்த அந்த மாவட்டங்களில் அமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர்கள் உதயநிதி, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த போரட்டத்தை அமைச்சர் துரைமுருகன் தொடங்கிவைத்தார்.
அப்போது பேசிய அவர், நீட் தேர்வால் மருத்துவராக முடியாமல் மாணவர்கள் பலர் தங்களது உயிரை மாய்த்து கொண்டுள்ளனர். நீட் தேர்வை எதிர்த்து நீதிக்காக ஒரு போராட்டம் நடைபெற்று வருகிறது. அதிலே ஒரு அறப்போராட்டம் தான் உண்ணாவிரதப் போராட்டம்.
நீட் தேர்வு என்ற கொடிய சட்டத்தை மாணவர்கள் முதுகில் சுமத்தி அவர்களை நிமிரவிடாமல் செய்வதன் மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் டாக்டர் ஆகும் வாய்ப்பை இழந்துள்ளதாக விமர்சித்தார். ஆதிக்ககாரர்களால் அமல்படுத்தப்பட்டது நீட் தேர்வு. இதனால் பிற்படுத்தப்பட்ட மாணவ-மாணவிகள் மருத்துவராகும் வாய்ப்பை நீட் தேர்வால் இழந்து உள்ளனர்.
இன்று நீட் தேர்வை ரத்து செய்ய அரசியல்வாதிகள் மட்டுமல்ல கல்வியாளர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதற்கு முன்பு தி.மு.க.வில் பல பேர் இந்தி திணிப்பை எதிர்த்து போராடி உயிர் விட்டனர். பல மாணவர்களும் இந்தி திணிப்பை எதிர்த்து உயிர் இழந்துள்ளனர்.
அந்த வழியில் இன்று நீட் தேர்வை எதிர்த்து மாணவர்களாகிய இளம் சிட்டுகள் தங்கள் உயிரை மாய்த்து வருகின்றனர். ஆனால் அதைப் பற்றி மத்தியில் ஆட்சியில் உள்ளவர்கள் கவலைப்படவில்லை. வரலாற்றை பார்த்தால் இந்தியை திணித்த ஆட்சி ஒழிந்தது. அதை போல் நீட்டை எதிர்த்து பலர் விடுகிற சாபம் மத்தியில் உள்ள ஆட்சியை ஒழித்துவிடும் என தெரிவித்தார்.
அமைச்சர் உதயநிதி நீட்டை ஒழித்துகட்டும் வரை இளைய சமுதாயம் ஓயாது என சபதம் எடுத்துள்ளார். அவர் தாத்தா கலைஞரை போல் வேகமாக செயல்படும் ஆற்றல் படைத்தவர்.
இந்த அறப்போராட்டத்தை பொறுத்தவரை ஏதோ ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தோம் என்று இல்லாமல் பல தொடர் போராட்டங்களை அமைச்சர் உதயா அறிவிப்பார். நீட் தேர்வு ஒழிந்தது அதற்கு காரணம் உதயநிதிதான் என சரித்திரத்தில் ஒருநாள் இடம்பெறும் என துரைமுருகன் உறுதி பட தெரிவித்தார்.