தலையில் பலத்த அடி… காலில் கட்டு : மருத்துவமனையில் கேஎஸ் அழகிரி… என்னாச்சு? பதறிய காங்., நிர்வாகிகள்!!
Author: Udayachandran RadhaKrishnan28 ஜூலை 2023, 10:05 மணி
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் மறைந்த தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் இளையபெருமாள் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் இன்று மாலை நடைபெறுவதாக இருந்தது.
இதற்காக நேற்றே கடலூர் மாவட்டம் சிதம்பரம் சென்றுவிட்ட கே.எஸ்.அழகிரி, அங்கிருக்கும் கீரப்பாளையத்தில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்தார்.
இன்று காலை தனது கீரப்பாளையம் இல்லத்திலிருந்து வழக்கம் போல் நடைபயிற்சி மேற்கொள்ளச் சென்றார் கே.எஸ்.அழகிரி. அப்போது கல் தடுக்கியதா அல்லது காலணி தடுக்கியதா எனத் தெரியவில்லை, எதிர்பாராதவிதமாக கால் இடறி தலைகுப்புற விழுந்திருக்கிறார் கே.எஸ்.அழகிரி.
இதில் அவரது முழங்கால் மற்றும் நெற்றியில் பலத்த அடிபட்டு ரத்தம் கொட்டியிருக்கிறது. இதையடுத்து அவருடன் சென்றவர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று டிரெஸ்ஸிங் செய்து முதலுதவி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்.
இதையடுத்து முழங்காலில் கடும் வலி ஏற்பட்டதால் இன்று நாள் முழுவதும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கே.எஸ்.அழகிரிக்கு எக்ஸ்ரே உள்ளிட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
இன்னும் ஓரிரு நாட்கள் மருத்துவமனையில் ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் கேட்டுக்கொண்ட நிலையில், வீட்டில் ஓய்வெடுப்பதாக கூறி மருந்துகளை வாங்கிக்கொண்டு டிஸ்சார்ஜ் ஆனார் அழகிரி.
தற்போது கடலூர் கீரப்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் தங்கியிருக்கிறார் கே.எஸ்.அழகிரி. இதனால் இன்று மாலை நடைபெறவிருந்த இளையபெருமாள் நூற்றாண்டு தொடக்க விழாவில் கே.எஸ்.அழகிரி பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
0
0