சசிகலாவின் ஆட்டம் ஓவர்… உற்சாக வெள்ளத்தில் அதிமுக… அடுத்து அமமுகவில் ஐக்கியமாக திட்டமா..?
Author: Babu Lakshmanan11 April 2022, 7:43 pm
அதிமுகவிற்கு கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பெரும் தலைவலியை கொடுத்து வந்த பொதுச் செயலாளர் பதவி வழக்கு ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது.
சசிகலாவின் நெருக்கடி
சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்தவாறே அதிமுகவிற்கு குடைச்சல் கொடுத்து வந்தார்.
கடந்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் விடுதலையாகி பிப்ரவரியில் சென்னை வந்தபிறகு தொடர்ந்து, “நான் அதிமுகவின் பொதுச் செயலாளர்” என்று மறைமுகமாக கூறிக்கொண்டு தான் பயணம் செய்யும் காரில் அதிமுக கொடியை பயன்படுத்தி தொண்டர்களை பெரும் குழப்பத்திற்கும் உள்ளாக்கினார்.
அதுமட்டுமின்றி தனக்கு நன்கு அறிமுகமான அதிமுக நிர்வாகிகளிடம் அடிக்கடி போனில் பேசி அதை ஊடகங்களில் ஆடியோவாக வெளியிட்டு பரபரப்பும் ஏற்படுத்தினார்.
இதன் காரணமாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சில நிர்வாகிகள் அவரை தனிப்பட்ட முறையில் சந்தித்து ஆதரவும் தெரிவித்தனர். இதனால் அதிமுகவில் அவரை மீண்டும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று சில நிர்வாகிகள் வலியுறுத்தித் தொடங்கினர்.
அதிமுக பொதுச்செயலாளர்
அதற்கு சில பின்னணி காரணங்களும் உண்டு.
அதிமுக பொதுச்செயலாளராக இருந்த தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி மரணம் அடைந்தார்.
இந்த நேரத்தில் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக அவருக்கு பணிவிடை செய்து வந்த சசிகலாவை, நெருக்கடியானதொரு சூழலில் வேறு வழியின்றி பொதுச் செயலாளராக அதிமுக தலைவர்கள் தேர்வு செய்தனர்.
சசிகலா தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவிக்க சென்றபோது, தனது அக்காள் மகன் டிடிவி தினகரனை அதிமுகவின் துணை பொதுச் செயலாளராக நியமித்தார்.
தீர்மானம் நிறைவேற்றம்
இதனைத் தொடர்ந்து 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்ந்தெடுத்ததும் அவர் டிடிவி தினகரனை துணைபொதுச் செயலாளராக நியமித்ததும் செல்லாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதை எதிர்த்து சசிகலா, தினகரன் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கின் மதிப்பு அடிப்படையில், சென்னை ஐகோர்ட்டில் இருந்து சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது.
அப்போது அமமுக என்ற பெயரில் கட்சியை தொடங்கி நடத்தி வருவதால், இந்த வழக்கில் இருந்து தான் விலகிக் கொள்வதாக டிடிவி தினகரன் தெரிவித்தார்.
பரபரப்பு தீர்ப்பு
இதற்கிடையில் சசிகலா தொடர்ந்த இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணப்பாளர் பழனிசாமி ஆகியோர் சார்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அதில், “இந்த வழக்கை தொடர்வதற்கு சசிகலாவுக்கு எந்த உரிமையும் கிடையாது. ஏற்கனவே கட்சி உரிமை கோரிய வழக்கில் மதுசூதனன் தலைமையிலான அணியே அதிமுக என அறிவித்து தேர்தல் ஆணையமும் டெல்லி ஐகோர்ட்டும் உத்தரவிட்டு உள்ளது. அதேபோல அதிமுகவின் பொதுச்செயலாளராக உரிமை கோருவதற்கு சசிகலாவிற்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை. கட்சியும் சின்னமும் எங்களிடம் தான் இருக்கிறது. தேர்தல் ஆணையமும் அதனை உறுதி செய்துள்ளது” என அவர்கள் வாதிட்டனர்.
இந்த வழக்கில் இன்று நீதிபதி ஸ்ரீதேவி தீர்ப்பு வழங்கினார்.
அதில்,”சசிகலா பொதுச் செயலாளராக ஒரு கூட்டத்தையும் கூட்டாததை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து
நீக்கியது செல்லும். இது தொடர்பாக அதிமுக செயற்குழு, பொதுக்குழுவில் எடுத்த தீர்மானமும் செல்லும்” என்று அவர் குறிப்பிட்டார்.
நீதிமன்றத்தின் தீர்ப்பால் சசிகலாவும் அவருடைய ஆதரவாளர்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதிமுகவை எப்படியும் கைப்பற்றி விட வேண்டும் என்கிற அவர்களது தீவிர முயற்சி தவிடுபொடியாகி போனது.
எல்லாமே செட்டப்
இதுகுறித்து அரசியல் பார்வையாளர்கள் கூறியதாவது:- “சசிகலா சிறையிலிருந்து விடுதலையாகி சென்னை வந்தபோது அவருக்கு தமிழக எல்லையில் இருந்து சென்னை வரை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனால் மன மகிழ்ச்சி அடைந்த அவர், நான் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்று முதலில் அறிவித்தார்.
ஆனால் அதிமுக தலைவர்கள், நிர்வாகிகள் ஒருவர்கூட அவருடைய தி.நகர் வீட்டின் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை.
அடுத்த சில வாரங்களுக்குப் பின்புதான் சிலரால் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு ‘செட்டப்’ என்பதை அவர் புரிந்து கொண்டார். அதனால் அடுத்த மாதமே நான் அரசியலில் இருந்து ஒதுங்கி கொள்கிறேன் என்று பல்டி அடித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி தோல்வி கண்டபோது நான் மட்டும் பொதுச் செயலாளராக இருந்திருந்தால் அதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றி இருக்குமென்று மீண்டும் தனது அரசியல் பயணத்தை நோக்கி நகரத் தொடங்கினார்.
அதிமுக உற்சாகம்
அவருடைய வரவை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மறைமுகமாக ஆதரித்தார். அவருடைய தம்பி ராஜா, திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்ற சசிகலாவை தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசி தனது ஆதரவையும் தெரிவித்தார். இது அதிமுகவினரிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. எனினும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் சசிகலாவை சேர்த்துக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என்று உறுதிபடக் கூறினார்.
அவருடைய தன்னம்பிக்கை, தைரியத்திற்கு உற்சாகம் தரும் விதமாக தற்போது கோர்ட் தீர்ப்பு வந்திருக்கிறது.
சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து இருந்து நீக்கியது செல்லும் என்ற கோர்ட் தீர்ப்பின் மூலம் பல கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இனி யாரும் அதிமுகவில், சசிகலாவை சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று குரல் கொடுக்க மாட்டார்கள். மற்ற கட்சி தலைவர்களும் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசமாட்டார்கள். பின்னாலிருந்து தூண்டி விடவும் மாட்டார்கள். அதிமுகவினர் பிற கட்சிகளுக்கு தாவுவது குறையும். தொண்டர்களும் கட்சிக்காக கடுமையாக உழைப்பார்கள்.
எது எப்படி இருந்தாலும் சசிகலாவின் குடும்பம் அதிமுகவில் இல்லை என்கிறபோது அது கட்சிக்கு கூடுதல் பலம்தான் சேர்க்கும்.
அமமுகதான் ஆப்சன்
தவிர உரிமையியல் கோர்ட்டு அளித்த தீர்ப்பு என்பதால் மேல்முறையீடு செய்தாலும் கூட அதில் சசிகலாவுக்கு சாதகமான முடிவு வருமா? என்பது சந்தேகம்தான்.
ஒருவேளை தற்போதைய தீர்ப்பு அப்படியே நேர்மாறாக வந்திருந்தால் அதிமுகவின் எதிர்காலமே கேள்விக்குறியாகி இருக்கும். அது திமுகவுக்குத்தான், சாதகமாக அமைந்து இருக்கும். ஏனென்றால் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலாவை ஊழல்வாதி என்று பிரசாரம் செய்தே திமுகbஎளிதில் தேர்தலில் வீழ்த்தும் நிலை ஏற்பட்டிருக்கும்.
இனிமேலாவது சசிகலா அரசியலில் ஈடுபடுவதை கைவிட்டு ஆன்மிக சுற்றுலா செல்வதை அதிகரித்து மனதை அமைதி நிலையில் வைத்துக்கொள்ளவேண்டும்.
அல்லது தீவிர அரசியலில்தான் ஈடுபடுவேன் என்று பிடிவாதம் காட்டினால்
இப்போதைக்கு சசிகலாவிற்கு ஒரேயொரு வாய்ப்பு தான் உள்ளது. டிடிவி தினகரன் நடத்தும் அமமுகவில் இணைந்து தலைவராகி விட்டால் அது நிறைவேறி விடும் “என்று அந்த அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிட்டனர்.
அடடே… இதுவும் கூட நல்ல யோசனையாகத்தான் தெரிகிறது!