ஜிப்மரில் இனி ஆட்சி மொழி இந்தியே…. நிர்வாகம் ஆணை : ஏன் இந்த கொலைவெறி? என கனிமொழி மத்திய அரசு மீது பாய்ச்சல்!!
Author: Udayachandran RadhaKrishnan8 May 2022, 10:13 am
எதிர்காலத்தில் புதுச்சேரி ஜிப்மரில் இந்தி மட்டுமே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என நிர்வாகம் ஆணை பிறப்பித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜிப்மர் மருத்துவமனையில் மற்றும் கல்லூரியில் வழங்கப்படும் அறிக்கைகள் மற்றும் சுற்றறிக்கைகள் அனைத்தும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருந்து வருகிறது.
பொது மக்களுக்கும் மற்றும் செய்தி நிறுவனங்களுக்கு மட்டும் அறிக்கை தமிழில் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜிப்மர் நிர்வாகம் சார்பில் இயக்குனர் பெயர் குறிப்பிட்டு ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அலுவலகப் பணிக்கு பயன்படுத்தப்படும் மொழி குறித்தது இந்த அறிக்கை என குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், அலுவலக மொழி 1976ம் ஆண்டு சட்ட விதியை குறிப்பிட்டு, மத்திய அரசுத் துறை மற்றும் நிறுவனங்களில் இந்தி மற்றும் ஆங்கிலம் அலுவலக மொழியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பாராளுமன்ற குழு அளித்துள்ள வாக்குறுதியின்படி ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிகளில் பயன்படுத்தப்படும் அனைத்து அலுவலக பதிவேடுகள், பணியாளர் புத்தகம், பணியாளர் பதிவுகள் அனைத்தும் இந்தி மற்றும் ஆங்கில மொழியில் மட்டுமே இருக்க வேண்டும்.
எதிர்காலத்தில் இந்தி மொழியில் மட்டுமே இவை அனைத்தும் பயன்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக திமுக எம்பி கனிமொழி, ஒன்றிய அரசுக்கு ஏன் இந்த மொழி வெறி? ஒன்றிய அரசு திணிக்க முயலும் இந்தி வேலையில்லா திண்டாட்டத்தைத் தீர்க்குமா? சமத்துவமின்மை மாறுமா? ஏதேனும் ஒரு சமூகப் பிரச்சனையையாவது திருத்துமா? விரிசல்களை ஆழப்படுத்துவது நல்லதில்லை என பதிவிட்டுள்ளார்.
அதே போல விசிக எம்பி ரவிக்குமார், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள பதிவேடுகளில் இந்தியும் ஆங்கிலமும் பயன்படுத்துவதை மாற்றி இனிமேல் முடிந்தவரை இந்தியை மட்டும் பயன்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்தியைத் திணிக்கும் இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன் #NoHindi என பதிவிட்டுள்ளார்.
0
0