திடீர் குபீர் நாட்டுப்பற்றாளர்கள்… வரலாறு முக்கியம் முதலமைச்சரே : நாராயணன் திருப்பதி கடும் கண்டனம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
25 October 2023, 9:17 am

திடீர் குபீர் நாட்டுப்பற்றாளர்கள்… வரலாறு முக்கியம் முதலமைச்சரே : நாராயணன் திருப்பதி கடும் கண்டனம்!!!

திருச்சியில் உள்ள தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் சார்பில் நேற்று நடைபெற்ற மருது சகோதரர்கள் நினைவு நாள் விழாவில், கலந்து கொண்டு பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழகம் புண்ணிய பூமி, இங்கு ஆரியம், திராவிடம் கிடையாது. சுதந்திர தினத்தை கருப்பு நாள் எனக் கூறியவர்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்கள்.

சுதந்திர போராட்ட தியாகிகளை மக்கள் நினைவில் இருந்து அகற்ற தமிழக அரசு முயற்சி செய்கிறது. ஆங்கிலேய திராவிட கதையை பரப்பும் அரசியல் சதியின் காரணமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த பல தேசிய சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் தியாகிகள் சாதிய தலைவர்களாக சிறுமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று குற்றம்சாட்டினார்.

தமிழக ஆளுநரின் இந்தப் பேச்சு அரசியல் அரங்கில் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் ஆளுநரின் பேச்சுக்கு கண்டனங்களை தெரிவித்தனர்.

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, “ஆளுநர் மாளிகையே.. அடக்கிடு வாயை” எனக் காட்டமாக கண்டன அறிக்கை வெளியிட்டார்.

மருது சகோதரர்கள் நினைவு நாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், “திமுக அரசு அமையும்போதெல்லாம் விடுதலை வீரர்களின் புகழ் திக்கெட்டும் போற்றப்படுகிறது. நஞ்சு தோய்ந்த எண்ணங்களோடு நயமாகப் பேசும் திடீர் குபீர் நாட்டுப்பற்றாளர்களின் வரலாற்றைத் தேசத் தந்தை காந்தியாரின் இறுதி நாட்கள் சொல்லும்! இந்த கோட்சே கூட்டத்தைத்தான் மகாகவி பாரதியார் ‘நடிப்புச் சுதேசிகள்’ எனப் பாடினார்.” என பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், திடீர் குபீர் நாட்டுப்பற்றாளர்கள் என்று கூறிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “‘திமுக அரசு அமையும்போதெல்லாம் விடுதலை வீரர்களின் புகழ் திக்கெட்டும் போற்றப்படுகிறது. நஞ்சு தோய்ந்த எண்ணங்களோடு நயமாகப் பேசும் திடீர் குபீர் நாட்டுப்பற்றாளர்களின் வரலாற்றைத் தேசத் தந்தை காந்தியாரின் இறுதி நாட்கள் சொல்லும்’ – என்று நீங்கள் சொல்லலாமா முதல்வர் அவர்களே?

“காந்தி பொம்மையை உடையுங்கள், ஆளுக்கொரு காந்தி பொம்மையை உடையுங்கள். வீட்டில் மாட்டியுள்ள படத்தை ரோட்டில் வீசி எறியுங்கள். இப்படி செய்தால் நம் உணர்ச்சியை கண்டு துரோகம் செய்யப் பயப்படுவார்களே! மந்திரிகள் நாடு பிரியக்கூடாது என்று சொல்ல மாட்டார்களே!” “காந்தி இன்னின்ன துரோகம் செய்து எங்களை அடிமையாக்கி விட்டார்” என்று விவரம் சொல்லி கொளுத்து என்கிறேன்” – சேலத்தில் 18-08-1957 அன்று ஈ.வெ.ரா. பேசியது – விடுதலை இதழில் 23-08-1957 அன்று வெளிவந்தது.

‘வெலிங்டன் சிலை இருக்கக்கூடாது; விக்டோரியா ராணி சிலை இருக்கக்கூடாது; நீலன் சிலை கூடாது; அதுபோல காந்தி சிலை எங்கள் நாட்டில் இருக்கக் கூடாது என்று சொல்ல எனக்கும் உரிமையுண்டு. ஒரு வெலிங்டனும், நீலனும் செய்யாத அக்கிரமத்தை எங்களுக்கு காந்தி செய்துள்ளார். காந்தி தான் வருணாசிரம தர்மம் காப்பாற்றப்பட வேண்டும் என்றார்.

1927-லேயே காந்தி மகாத்மா பட்டத்தை காப்பாற்றிக் கொள்ள பார்ப்பன அடிமையாகி விட்டார் என்று எழுதினேன். அது முதலே தோழர் காந்தி என்று தான் போடுவேன். மகாத்மா என்று போடுவதில்லை. அவர் செய்த அடுத்த துரோகம், நம்மை வடநாட்டானுக்கு அடிமையாக்கி விட்டு போனது. சுயராஜ்யம் பேசி, வெள்ளைக்காரன் வெளியே போனதும் நம்மை வடநாட்டு அடிமைகளாக்கி விட்டார்” – இது தருமபுரியில் ஈ.வெ.ரா 19/09/1957 அன்று ஆற்றிய சொற்பொழிவின் ஒரு பகுதியாக 09/10/1957 விடுதலை நாளிதழில் வெளியானது.

வார்த்தைக்கு வார்த்தை இது பெரியார் மண், திராவிட மாடல் என்றெல்லாம் சொல்கிறீர்களே ஸ்டாலின் அவர்களே! மேலே சொன்னது ஒரு மாதிரி தான். ஈ.வெ.ரா சொன்னதை ஏற்கிறீர்களா? மறுக்கிறீர்களா? இது போல் காந்தியார் குறித்து தி.க.வும், திமுகவினரும் பேசிய பேச்சுக்கள் எண்ணிலடங்காதவை.

நஞ்சு தோய்ந்த எண்ணங்களோடு நயமாகப் பேசும் திடீர் குபீர் காந்தி பற்றாளர்களின் வரலாற்றை காந்தியாரின் இறுதி நாட்கள் மட்டுமல்ல, அவரின் மறைவுக்கு பின்னரும் பேசியவர்களின் வரலாறு இருக்கும் வரை சொல்லும்! வரலாறு முக்கியம் முதலமைச்சரே!!” எனப் பதிவிட்டுள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 412

    0

    0