தலித் மாணவி சித்ரவதை.. மன்னிக்க முடியாதது ; குற்றவாளிகளை தப்பிக்க வைக்க திரைமறைவு செயல்கள் வேண்டாம் ; எச்சரிக்கும் ராமதாஸ்..!!

Author: Babu Lakshmanan
20 January 2024, 11:50 am

திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மகன் வீட்டில் தலித் மாணவியை சித்திரவதை செய்த பின்னணியில் உள்ள அனைவரையும் கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- பல்லாவரம் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் இ.கருணாநிதி என்பவரின் மகன் ஆண்டோ மதிவாணன் வீட்டில் வீட்டு வேலை செய்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநருங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த ரேகா என்ற பட்டியல் சமுதாய சிறுமி, கடந்த 8 மாதங்களாக தாங்க முடியாத வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்.

ஆண்டோ மதிவாணனின் மனைவி மெர்லின் என்பவர், ரேகாவின் உடலில் சூடு வைத்து கொடுமைப்படுத்தியதாகவும், அதனால் மாணவி ரேகாவின் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்திருக்கிறது. சிறுமி என்றும் பாராமல் ரேகாவுக்கு இழைக்கப்பட்ட கொடுமை கண்டிக்கத்தக்கது; மன்னிக்க முடியாதது.

மாணவி ரேகா மிகவும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். மருத்துவம் படிக்க வேண்டும் என்பது அவரது கனவு. அதை நனவாக்கும் நோக்குடன் 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அவர், மேற்படிப்புக்கு நிதி திரட்டும் நோக்குடன் தான் ஆண்டோ மதிவாணன் வீட்டில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார். ஆனால், அங்கு மனித உரிமைகளை மதிக்காமல் 16 மணி நேரம் வரை ரேகா வேலை வாங்கப்பட்டிருக்கிறார்; அதற்காக அவருக்கு எந்த ஊதியமும் வழங்கப்படவில்லை என்பதுடன் அடிக்கடி அடித்தும், உதைத்தும் துன்புறுத்தப்பட்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் மாணவிக்கு கடுமையாக காயங்கள் ஏற்பட்ட நிலையில், அதற்காக அவருக்கு மருத்துவம் கூட அளிக்காத திமுக சட்டப்பேரவை உறுப்பினரின் குடும்பம், அவரை உளுந்தூர்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கச் செய்து விட்டு தப்பி விட்டது.

மாணவி ரேகாவை மனிதராகக் கூட மதிக்காமல் கொடுமைகளுக்கு உள்ளாக்கிய ஆண்டோ மதிவாணன் – மெர்லின் ஆகியோர் மீது நீண்ட இழுபறிக்குப் பிறகு தான் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அதன் மீது தொடர் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. மாறாக, வழக்கை நீர்த்துப் போகச் செய்ய அனைத்து திரைமறைவு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன. இந்த வழக்கில் குற்றவாளிகள் தப்புவதற்கு தமிழக அரசும், காவல்துறையும் அனுமதிக்கக்கூடாது.

மாணவி ரேகாவை கொடுமைப்படுத்தியவர்கள் மட்டுமின்றி, அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக திகழ்பவர்கள் மீதும் வழக்கு நீட்டிக்கப்பட வேண்டும். அனைவரிடமும் விசாரணை நடத்தி, முகாந்திரம் இருக்கும்பட்சத்தில் கைது செய்யப்பட வேண்டும். வழக்கு விசாரணையை விரைவுபடுத்தி குற்றம் இழைத்தவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவி ரேகாவுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட வேண்டும், என வலியுறுத்தியுள்ளார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்