வெறும் ரூ.6 ஆயிரத்தை வைத்து மக்கள் எப்படி சமாளிப்பாங்க..? ரூ.12 ஆயிரம் வழங்க வேண்டும் : இபிஎஸ் வலியுறுத்தல்!

Author: Udayachandran RadhaKrishnan
10 December 2023, 4:42 pm

வெறும் ரூ.6 ஆயிரத்தை வைத்து மக்கள் எப்படி சமாளிப்பாங்க..? ரூ.12 ஆயிரம் வழங்க வேண்டும் : இபிஎஸ் வலியுறுத்தல்!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர். அத்தியாவசிய பொருட்கள் வாங்க வீட்டை விட்டு வெளியேற முடியாமல், சிலர் மீட்பு படையினரால் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரணம் அறிவித்தார் அதன்படி மக்களுக்கு ரூ.6000 ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பக்கத்தில், விடியா திமுக அரசு முன்திட்டமிடாமல், முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், ஆட்சிப் பொறுப்பேற்ற 31 மாதங்களில், முறையாக மழை நீர் வடிகால் பணிகளை செய்யாததன் காரணமாக,
மிக்ஜாம் புயல் மழையால், சென்னை மாநகரம், புறநகர் பகுதி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பொதுமக்கள், வணிகர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் என்று அனைத்துத் தரப்பு மக்களும் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

பொதுமக்கள் கடந்த ஒருவார காலமாக, தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, உடைமைகளை இழந்து, வாகனங்களை இழந்து, தொழிலை இழந்து, இந்த அவல ஆட்சியாளர்கள் மீது தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வந்த நிலையில், நிவாரணத் தொகை என்று ஒரு சொற்ப தொகையை அறிவித்திருப்பது, பாதிக்கப்பட்ட மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத் தொகையான 6,000/- ரூபாயை உயர்த்தி 12,000/- ரூபாயாக வழங்குவதுடன், மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்காக, மேற்கண்ட நிவாரணங்களை போர்க்கால அடிப்படையில் உடனடியாக வழங்கிட இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்.

  • Rashmika Mandanna injury update வீல் சேரில் பரிதாபமாக வந்த நடிகை ராஷ்மிகா…பீலிங்ஸ் ஆன ரசிகர்கள்…!