ரகசியம் கசிந்தது எப்படி?…ஸ்டாலின் அரசு மீது பாயும் விசிக!

Author: Udayachandran RadhaKrishnan
27 July 2022, 6:11 pm

திமுக அரசு மீது உள்ள கோபத்தை அதன் கூட்டணிக் கட்சியான விசிக வெளிப்படுத்துவதில் நிறையவே தயக்கம் காட்டுவது உண்டு. அப்படியே ஏதாவது சொல்ல விரும்பினால் அதன் தலைவர் திருமாவளவன், தோழமையின் சுட்டுதல் என்பதுபோல எப்போதாவது அபூர்வமாக எதிர்வினை ஆற்றுவார்.

திமுக மீது கொந்தளித்த விசிக

சில நேரங்களில் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரான வன்னியரசு, கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோல திமுக அரசை மிகவும் மென்மையாக சாடுவார்.

பெரும்பாலும் ஒரே விவகாரம் குறித்து இருவரும் அடுத்தடுத்து ஸ்டாலின் அரசு மீது கடும் விமர்சனம் எதையும் வைப்பதில்லை. ஆனால் நேற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக ஒரே நேரத்தில் திமுக அரசு மீது கொந்தளித்துப் போய் டுவிட்டரில் பதிவுகளை இருவரும் வெளியிட்டதை காணமுடிந்தது.

கள்ளக்குறிச்சி வன்முறை

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த ஒரு மாணவியின் மரணத்தை தொடர்ந்து கடந்த 17-ம் தேதி காலை அப்பள்ளிக்குள் புகுந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 20 பஸ்களையும் போலீசாரின் வேனையும் தீ வைத்துக் கொளுத்தினர். தடுக்க முயன்ற 55 போலீசாரை அவர்கள் கல்வீசி படுகாயப்படுத்தினர்.

மாணவி மரணம் அடைந்து 5 நாட்களுக்கு பின்பு இந்த வன்முறை சம்பவம் நடந்ததால், தமிழக உளவுத்துறையின் மந்தமான செயல்பாடு பற்றி அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை வைத்தன. காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் மீதும் கடும் விமர்சனம் எழுந்தது.

இதைத்தொடர்ந்து இறந்த மாணவிக்கு ஆதரவாக போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

உளவுத்துறை சொன்ன காரணம்

இந்த நிலையில் ஆங்கில நாளேடு ஒன்று கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக உளவுத்துறை தகவலை மையமாக வைத்து அதிர்ச்சி செய்தி ஒன்றை வெளியிட்டது. அதில் கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக நடைபெற்ற வன்முறையின் பின்னணியில் பட்டியலின மாணவர்களும், இளைஞர்களும், இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.  தமிழக உளவுத்துறையின் மூலம் தகவல் கிடைத்ததை போல இந்த செய்தி அமைந்தும் இருந்தது.

இதனால் கள்ளக்குறிச்சி பள்ளி வளாகம் அமைந்துள்ள பகுதிகள் மற்றும் பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்புகளில் இளைஞர்கள், மாணவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

இதுவரை கைது செய்யப்பட்ட 300-க்கும் மேற்பட்டவர்களில் 60 பேர் பட்டியலின இளைஞர்கள் என்று கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த விசிக தலைவர் திருமாவளவன், மரணமடைந்த மாணவிக்கு அஞ்சலி செலுத்துவது போன்றதொரு புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அதில் சில கேள்விகளையும் எழுப்பி உள்ளார்.

அத்துடன் பட்டியலின இளைஞர்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை தொடர்பாக தமிழக உளவுத்துறை வெளியிட்டதாக கூறப்படும் ஆங்கில நாளேட்டின் செய்தியையும் அவர் தனது பதிவுடன் இணைத்து அதில் சில குறிப்பிட்ட பகுதிகளை அடிக் கோடிட்டு காண்பித்தும் இருக்கிறார்.

கொந்தளித்த திருமாவளவன்

திருமா தனது பதிவில், “மாணவி கொல்லப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா? என்பதிலிருந்து திசை திருப்பி பள்ளியைத் தாக்கியது யார்? கொளுத்தியது யார்? என்று விவாதத்தை மடைமாற்றிவிட்டு மாணவியின் குடும்பத்திற்கு எதிராகச் சிலர் திட்டமிட்டே செயல்பட்டு வருகின்றனர். அந்தச் சதிக்கும்பலுக்குத் துணைபோகும் வகையில் தற்போது உளவுத்துறையின் நடவடிக்கைகளும் அமைவதாக உள்ளது. ஆங்கில நாளேட்டுச் செய்தி உள்நோக்கத்துடன் கூடியதாக இருக்கிறது. உளவுத் துறையிலுள்ள சாதியவாதிகளின் சதியாகவே இது தெரிகிறது. இம்மாதிரியான தகவலை ஊடகத்திற்கு அளித்த உளவுத்துறையினர் மீது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அரசுக்கு அளித்த ரகசிய தகவல்களை ஊடகத்தில் கசியவிடுவது ஏன்? இத்தகவலே தவறானது. இது ஆதிதிராவிடர் மற்றும் விசிகவுக்கு எதிரான அரசியல் சதியாகும். பள்ளியைக் கொளுத்தியதும் ஆதி திராவிடருக்கெதிராக சாதிய வன்மத்தைக் கக்குவதும் மாணவியின் சாவுக்குக் காரணமானவர்களே என்பதை அறிய முடிகிறது” என்று ஆவேசத்துடன் கொந்தளித்து இருக்கிறார்.

மனக்குமுறலை கொட்டிய விசிக பிரமுகர்

அடுத்த சில மணி நேரங்களிலேயே, விசிகவின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசும் இதுதொடர்பாக தனது மனக்குமுறலை கொட்டித் தீர்த்தார்.

அவர் தனது பதிவுகளில் “மாணவிக்கு நீதி வேண்டும் எனும் கோரிக்கையோடு நடைபெற்ற மக்கள் போராட்டத்தை சாதி போராட்டமாக மாற்ற துடிக்கிறது, கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம். ஆதிதிராவிடர்களுக்கு எதிரான மனநிலையை உருவாக்கி பள்ளியை பாதுகாக்க துடிக்கிறது. 60க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட இளைஞர்களை காவல்துறை கைது செய்துள்ளது. இன்னும் தேடுதல் வேட்டையை தொடருகிறது. பள்ளி நிர்வாகத்தின் உறவினர்கள் மூலமாக ஆதிதிராவிடர் குடியிருப்புக்குள் புகுந்து படித்த மாணவர்களை அடையாளம் காட்டி வருவதாக தம்பிகள் அச்சத்தோடு தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக போராடுவது தவறா? கைது செய்யப்பட்ட
ஆதிதிராவிடர் இளைஞர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். ஆதிதிராவிடர் குடியிருப்புக்குள் நடத்தப்படும் தேடுதல் வேட்டையை நிறுத்த வேண்டும். பள்ளி பிள்ளைகளின் மரணங்கள் பெரும் சந்தேகங்களையும் துயரத்தையும் தருகிறது. பிள்ளைகளிடையே நம்பிக்கையை உருவாக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல. அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களுக்கும் உண்டு. அதற்கான பணியை செய்யாமல் கள்ளக்குறிச்சி பள்ளியை திறப்பதிலேயே குறியாக இருப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

அரசியல் ஆர்வலர்கள் கூறுவது என்ன?

விசிக தலைவர்கள் இருவருமே கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக தமிழக போலீசார் எடுத்துவரும் நடவடிக்கை காரணமாக, ஸ்டாலின் அரசு மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

அதேநேரம் திருமாவளவனின் பதிவில் சில முரண்பாடுகள் இருப்பதையும் அறிய முடிகிறது. இம்மாதிரியான தகவலை ஊடகத்திற்கு அளித்த உளவுத்துறையினர் மீது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசுக்கு அளித்த ரகசிய தகவல்களை ஊடகத்தில் கசியவிடுவது ஏன்? என்ற கேள்வியை அவர் எழுப்புகிறார். ஆனால் அடுத்த வரியிலேயே இத்தகவலே தவறானது என்றும் சொல்கிறார்.

குழப்பத்தில் திருமா?

அதாவது ரகசியத் தகவலை முதலில் உண்மை என்று ஒப்புக் கொண்டுவிட்டு, பின்பு உடனடியாக அதை மறுக்கிறார். இதனால் அவர் பெரும் குழப்பத்தில் இருக்கிறார் என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. இது ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை பகிரங்கமாக கண்டிப்பதா?…வேண்டாமா?… என்ற மனநிலையில் அவர் இருப்பதுபோல தெரிகிறது.

ஏனென்றால் பட்டியலின மக்களின் பாதுகாவலனாக காட்டிக் கொள்ளும் தனக்கு எதிராக திமுக அரசு இருக்கிறது என்ற கவலை அவருக்கு வந்துவிட்டது போலவே தோன்றுகிறது.

காவல்துறையின் முழு கட்டுப்பாடும் முதலமைச்சர் ஸ்டாலின் வசம் இருக்கும்போது ரகசிய தகவலை வெளியிட்ட உளவுத் துறையின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திருமாவளவன் கோரிக்கை விடுப்பதும் வேடிக்கையானது.

ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும் சமூக நீதிக்காகவும் துணை நிற்பதாக தான், மேடைதோறும் முழங்கி வருவதை மக்கள் இனியும் நம்ப மாட்டார்களே என்ற பயத்தின் வெளிப்பாடாகவே அவருடைய பதிவு இருப்பதுபோல் தெரிகிறது.

பாஜகவை பார்த்து பயப்படும் வன்னியரசு

வன்னியரசோ, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுகவின் சமூகநீதி பற்றி “மேடையில் முற்போக்குத்தனமாகப் பேசுவதும் நிஜ வாழ்வில் பிற்போக்குத்தனமாக இருப்பதும் திமுக அரசுக்கு ஒன்றும் புதிதல்ல. திமுக ஆட்சியில் கலவரங்களும் புதிதல்ல. இப்படி கலவரங்கள் முடிந்த பின் அதற்குப் பட்டியலின மக்களை வஞ்சிப்பதும் புதிதல்ல. கலவரத்துக்குக் காரணமான அனைவரும் பட்டியலினத்தைச் சார்ந்தோர் என்ற முடிவுக்கு உளவுத்துறை எவ்வாறு வந்தது?” என்று கேள்வி எழுப்பிய பின்பே பட்டியலின இளைஞர்கள் கைது பற்றி கொந்தளித்து கருத்து தெரிவித்திருக்கிறார்.

எங்கே பட்டியல் இன மக்களின் முழு ஆதரவும் தமிழக பாஜக மீது திரும்பி விடுமோ என்று பயந்துபோய் வன்னியரசு, இப்படி கருத்து தெரிவித்து இருப்பதாகவே தோன்றுகிறது.

அதுவும் மாவட்ட ஆட்சி நிர்வாகத்தை வன்னியரசு விமர்சிக்கிறார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மெத்தன போக்கை கைவிட்டு
விழிப்புணர்வு பணியிலும், மாணவர்கள் நலனிலும் அக்கறை காட்டவேண்டும் என்றும் அறிவுரை கூறுகிறார்.

அமைச்சரும், மாவட்ட ஆட்சியரும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் செயல்படுபவர்கள் என்பது கூட அவருக்குத் தெரியாமல் போனது ஆச்சரியம்தான்.

அதேநேரம் தமிழகத்தில் கடந்த 4 நாட்களில் மட்டும் தேர்வுகளில் தோல்வி காரணமாகவும், ஆசிரியர்கள் திட்டியதாலும் 5 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். இது மாநிலத்தில் பெரும் அதிர்வலையையும் ஏற்படுத்தி இருக்கிறது.

அமைச்சர் தனி கவனம் செலுத்த கோரிக்கை

தங்களது பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோருக்கு இது வேதனை தருவதாகவும் அமைந்துள்ளது. எனவே இதன் மீது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தனிக்கவனம் செலுத்தவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறையை பொறுத்தவரை பட்டியலின இளைஞர்களை திமுக அரசின் காவல்துறை கைது செய்து வருவது விசிக நிர்வாகிகளிடையே கடும் அதிருப்தியையும் ஏற்படுத்தி இருக்கிறது என்கிறார்கள். அவர்களில் பலர் இனியும் திமுக கூட்டணியில் நீடிக்க வேண்டுமா?…என்ற கேள்வியை திருமாவளவனிடம் எழுப்பி இருப்பதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.

ஆனால் தமிழகத்தில் என்ன நடந்தாலும் சரி பாஜக எதிர்ப்பு என்பதே எங்கள் நிலைப்பாடு என்பதில் உறுதியாக உள்ள விசிக, திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவது சந்தேகம்தான்” என்று அந்த அரசியல் ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.

  • GOAT in Small Screens இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக… புத்தாண்டு தினத்தில் ஒளிபரப்பாகும் புதிய திரைப்படம்!!
  • Views: - 731

    0

    0