காவல்துறை மீது கைவைக்கும் தைரியம் எப்படி வந்தது? திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது : இபிஎஸ் காட்டம்!
Author: Udayachandran RadhaKrishnan3 September 2024, 4:46 pm
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் போராட்டத்தின் போது கலவரம் ஏற்படாமல் தடுக்க முற்பட்ட பெண் துணை கண்காணிப்பாளர் காயத்ரி அவர்களை போராட்டக்காரர்கள் தலை முடியை இழுத்து தாக்க முயன்றதாக செய்திகளில் வரும் காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன.
விடியா திமுக ஆட்சியில் சட்டத்தின் மீது எந்தவித பயமும் இன்றி யாரை வேண்டுமானாலும் தாக்கலாம் என்ற அச்சமற்ற அவலநிலையில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது!
மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினருக்கே, தங்கள் பணியின்போது தாக்கப்படும் அளவு பாதுகாப்பில்லாத சூழலை உருவாக்கியுள்ள இந்த விடியா திமுக அரசுக்கும், பொம்மை முதல்வருக்கும் கடும் கண்டனம்.
அருப்புக்கோட்டை பெண் டிஎஸ்பி காயத்ரி அவர்களை தாக்கிய சம்பவத்தில் ஈடுபட்டோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், இனி சீருடையில் உள்ள காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தும் தைரியம் யாருக்கும் வராத அளவிற்கு தண்டனை கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்யுமாறும்,
காவல்துறையினர் உட்பட தமிழ்நாட்டில் அனைவருக்குமான பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துமாறும் விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.