நிறைவேற்றிய வாக்குறுதிகள் எத்தனை?…ஸ்டாலினுக்கு அதிமுக, பாஜக கிடுக்குப்பிடி!
Author: Udayachandran RadhaKrishnan25 March 2022, 5:47 pm
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கடந்த ஆண்டு மார்ச் மாதம் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன.
திமுக வாக்குறுதிகள்
அதில் மிக முக்கியமாக திமுக ஆட்சி அமைந்ததும் தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து, குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம்தோறும்1000 ரூபாய் உரிமைத்தொகை, கேஸ் சிலிண்டர் மானியம் 100 ரூபாய், ஆவின் பால் விலை லிட்டருக்கு
3 ரூபாய் குறைப்பு, பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 4 ரூபாயும் குறைப்பு, உள்ளூர் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், கொரோனா கால நிவாரண நிதி 4 ஆயிரம் ரூபாய், கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு மிகாமல் அடமானம் வைத்த அனைவருக்கும் நகைக் கடன் தள்ளுபடி, அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம், ஒரு குவிண்டால் நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை 2500 ரூபாயாகவும் ஒரு டன் கரும்புக்கு 4000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு தற்போது வழங்கப்படும் திருமண உதவித் தொகையான 50 ஆயிரம் ரூபாய் என்பது 60 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும். அத்துடன் தாலிக்கு 8 கிராம் தங்கமும் வழங்கப்படும், மாதம் ஒருமுறை மின் உபயோகம் கணக்கிடும் முறை என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் கூறப்பட்டிருந்தன.
208 வாக்குறுதிகள் நிறைவேற்றமா?
இந்த நிலையில்தான் இரண்டு நாட்களுக்கு முன்பு சட்டப்பேரவையில் 110-வது விதியின்கீழ் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தேர்தல் அறிக்கை கொடுத்த வாக்குறுதிகளில் 208 அறிவிப்புகளை ஆட்சிக்கு வந்த 10 மாதங்களில் திமுக அரசு நிறைவேற்றி இருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக செயல்படுத்துவோம்” என்று குறிப்பிட்டார்.
இது பொதுவெளியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, கொரோனா கால நிவாரண நிதி 4 ஆயிரம் ரூபாய், அரசு உள்ளூர் சாதாரண டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு இருப்பது வெளிப்படையாக தெரிகிறது.
அவ்வாறு இருக்கும்போது 208 வாக்குறுதிகளை கடந்த 10 மாதங்களில் திமுக அரசு நிறைவேற்றி இருப்பதாக எப்படி கூற முடியும்? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
வெள்ளை அறிக்கை வெளியடுவாரா ஸ்டாலின்
இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “இதற்கு ஸ்டாலின்தான் வெள்ளை அறிக்கை வெளியிட்டு பதில் சொல்ல வேண்டும். நிறைவேற்றப்பட்ட 208 வாக்குறுதிகள் என்னவென்று விளக்கமும் அளிக்க வேண்டும்” என்று கிடுக்குப்பிடி போட்டார்.
அதேநேரம் அதிமுகவின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் 97 சதவீதம் நிறைவேற்றப் பட்டிருப்பதாக திமுக அரசு சட்டப்பேரவையில் வைத்த புத்தகத்திலேயே குறிப்பிடப்பட்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்னும் ஒருபடி மேலே சென்று திமுக அரசை கிண்டலடித்துள்ளார்.
திமுக அரசை கிண்டலடித்த அண்ணாமலை
அவர் கூறும்போது “சட்டப் பேரவையில் 110-வது விதியின்கீழ் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு அறிக்கை படித்திருக்கிறார். அதில் சட்டசபையிலும், பொதுவெளியிலும் தேர்தல் நேரத்தில் திமுக மக்களிடம் கொடுத்த வாக்குறுதிகள் குறித்தும் அவற்றை நிறைவேற்றுவது குறித்தும் சில விமர்சனங்களும் எதிர்க்கட்சியினரால் வைக்கப்படுகிறது, என்று படித்துள்ளார்.
இந்த அரசு ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் தான் ஆகியிருக்கிறது. ஆக, 10 மாத குழந்தையிடம் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் என்ன என்று கேட்பது போல இருக்கிறது இந்த கேள்விகள்? என்று நகைச்சுவை உணர்வுடன் வேறு குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால் எந்த ஆட்சியும் 60 மாதங்களுக்கான ஆட்சிதான். இந்த ஆட்சி முழுமையாக நிறைவு பெற்றால் கூட அந்த ஆட்சிக் குழந்தைக்கு வயது 5 ஆகத்தான் இருக்கும். அப்போதும் வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை என்று கேட்டால் 5 வயது குழந்தையிடமா கேட்பீர்கள்? என்று கேட்பார் போலும்!
அன்னைக்கு 300.. இன்னைக்கு 208?!!
தேர்தலின்போது திமுக அறிவித்த 505 வாக்குறுதிகளும், குறிப்பிட்ட காலவரைக்குள்ளாக நிறைவேற்றப்படும் என்று புதிய வாக்குறுதியை முதல்வர் கொடுத்துள்ளார். கடந்த 10 மாதங்களில் மொத்தம் 208 தேர்தல் வாக்குறுதிகள் செயலுக்கு வந்துள்ளன. இவை அனைத்துக்கும் உரிய அரசாணைகள் வெளியிடப்பட்டு செயல்படுவதை அரசு முனைப்புடன் கண்காணித்து வருகிறது என்றும் எழுதித் தந்ததை படித்துள்ளார்.
இதன் முழுஅர்த்தம் என்னவென்றால், வாக்குறுதிகள் எல்லாம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. மாறாக அறிவிப்புக் கோப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன, அந்த கோப்புகள் மெதுவாக அரசு மட்டத்தில் ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டே இருக்கப் போகிறது, அப்படி நகர்வதை முதலமைச்சரும் அமைச்சர்களும் முனைப்புடன் கண்காணித்து வரப்போகிறார்கள். அந்த கோப்புகளைப் பார்த்து மக்கள் மகிழ்ச்சி அடையலாம் என்பதே.
இதில் இன்னொரு கூடுதலான குழப்பம் என்னவென்றால், கடந்த செப்டம்பர் 25-ம் தேதி தமிழக முதலமைச்சர் தன் உரையில் 378 வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக கூறியிருக்கிறார். கடந்த டிசம்பர் 21-ம் தேதி அவர் தன் உரையில் 300 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருப்பதாக கூறியிருக்கிறார். தற்போது மார்ச் மாதம் 23 அன்று, 208 வாக்குறுதிகளை நிறைவேற்றி கூறியிருக்கிறார். அதாவது… நாட்கள் செல்லச் செல்ல அவர்கள் செய்த பணிகள், நிறைவேற்றிய வாக்குறுதிகளின் எண்ணிக்கை கூடுமா? குறையுமா?
காற்றோடு காற்றாக கரையும் வாக்குறுதிகள்
மகளிருக்கான உரிமைத் தொகையை மாதம் ஆயிரம் ரூபாய் தருகிறேன் என்று சொன்னவர் தற்போது அது சாத்தியமில்லை என்று சொல்லிவிட்டார். அதாவது மகளிரின் உரிமையை மறுத்துவிட்டார். நகைக் கடன் தள்ளுபடி விஷயத்தில் பொதுமக்களுக்கு ஆசைக்காட்டி ஏமாற்றும் வேலையை அரசு செய்துள்ளது.
தாலிக்கு கொடுத்துக்கொண்டிருந்த தங்கத்தையும் நிறுத்திவிட்டார்கள். மேலும் கல்விக் கடன் ரத்து, விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள், என்று அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் அத்தனையும் காற்றோடு காற்றாக கரைந்து போயின.
இவற்றையெல்லாம் பார்க்கும்போது, திமுக அரசின் வாக்குறுதிகள் வரும்… ஆனா வராது… என்றே சொல்ல தோன்றுகிறது” என்று அண்ணாமலை கேலியாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அரசியல் நோக்கர்கள் கூறும்போது, “208 வாக்குறுதிகளை கடந்த 10 மாதங்களில் நிறைவேற்றி இருக்கிறோம் என்று திமுக அரசு பெருமைப்பட்டுக் கொள்வது மிகைப்படுத்தப்பட்டது போலவே தோன்றுகிறது.
பயன்பாட்டிற்கு வந்தால்தான் நிறைவேற்றம் என அர்த்தம்
பொதுவாக மக்களுக்கு நேரடி பணப் பயனளிக்கும் திட்டங்கள் குறித்துதான் அதிக எதிர்பார்ப்பு இருக்கும். அப்படிப் பார்த்தால் உள்ளூர் சாதாரண பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, மகளிர் சுய உதவி குழு கடன்கள் தள்ளுபடி, கொரோனா கால நிவாரண நிதி 4 ஆயிரம் ரூபாய் வழங்கியதுதான் வெளிப்படையாக தெரிகிறது.
புதிய தடுப்பணைகள், சூரிய ஒளி மின்சக்தி திட்டம், மேம்பாலங்கள், நெடுஞ்சாலைகள், குடிநீர் குழாய், பாதாள சாக்கடை இணைப்பு வசதி, தொழிற்சாலைகள், தொழிற்பேட்டைகள் அமைத்தல் போன்றவையெல்லாம் அவை கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த பிறகுதான் நிறைவேற்றப்பட்டதாக அர்த்தம்.
சாத்தியமில்லை என நழுவும் திமுக
6ம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து முடித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்பது தேர்தல் வாக்குறுதியில் திமுக கூறாத ஒன்று. இது வரவேற்க கூடியதுதான். என்ற போதிலும் உயர்கல்வி கற்ற பெண்களுக்கு அதிமுக ஆட்சி காலத்தில் 50 ஆயிரம் ரூபாயாக வழங்கப்பட்டு வந்த தொகையை 60 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தருவோம். அத்துடன் 22 காரட்டில் 8 கிராம் தங்கமும் கொடுப்போம் என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது.
இப்போது அதற்கு சாத்தியமில்லை என்கிறார்கள். அதற்கு பதிலாகத்தான் அரசு பள்ளியில் படித்து உயர் கல்வி கற்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் தருகிறோம் என்று சொல்கிறார்கள். அப்படியென்றால் ஜெயலலிதா தொடங்கி வைத்து ஏழை பெண்களிடம் அமோக வரவேற்பை பெற்ற தாலிக்கு தங்கம் திட்டத்தை திமுக அரசு கைவிட்டதை புரிந்துகொள்ள முடிகிறது.
எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றியது திமுக?
அதேபோல நகைக்கடன் வாங்கிய 48 லட்சம் பேரில், 13 லட்சம் பேர் மட்டுமே தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. இவர்களிலும் இன்னும் பல்லாயிரம் பேருக்கு நகைக் கடன் தள்ளுபடி ஆக வாய்ப்பு இல்லை என்றும் கூறுகிறார்கள்.
தேர்தலுக்கு முன்பு பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். அதன்மூலம் லிட்டருக்கு 25 ரூபாய் வரை விலை குறைய வாய்ப்பு உண்டு என்று கூறிவந்த திமுக ஆட்சிக்கு வந்த பின்பு அதை அப்படியே கைவிட்டு விட்டது.
மேலும் தேர்தல் அறிக்கையில் கூறியபடி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 5 ரூபாய் குறைக்கப்படவில்லை. 3 ரூபாய் மட்டும் குறைக்கப்பட்டது. டீசல் விலை குறைப்பு பற்றி இதுவரை தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் தியாகராஜன் மூச்சே காட்டவில்லை. எனவே இன்னும் 50 மாதங்கள் கழித்து ஆட்சி முடியும்போதுதான் திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியதா? என்பதை துல்லியமாக கூற முடியும்”
என்று எதார்த்த நிலையை அந்த அரசியல் நோக்கர்கள் உணர்த்தினர்.