செந்தில் பாலாஜி சிக்கியது எப்படி…? ஐடி அதிகாரிகள் போட்டுக் கொடுத்தார்களா…? அமைச்சர் கைதால் CM ஸ்டாலின் ‘அப்செட்’!

Author: Babu Lakshmanan
14 June 2023, 7:57 pm

சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியால் அவருடைய அரசியல் எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ள நிலையில் இந்த வழக்கில் அவர் எப்படி சிக்கிக் கொண்டார்?…என்பதுதான் தற்போது தமிழக அரசியல் களத்தில் விவாதப் பொருளாக மாறி உள்ளது.

கடந்த 26-ம் தேதி கரூர், கோவை ஈரோடு, நாமக்கல், சென்னை நகரங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் அவருடைய நண்பர்கள், உறவினர்களின் வீடுகள் அலுவலகங்கள், தொழில் நிறுவனங்களில் நுழைந்து வருமானவரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது 200க்கும் மேற்பட்ட இடங்களில் எட்டு நாட்கள் நீடித்த இந்த ரெய்டால் அமைச்சர் செந்தில் பாலாஜி எந்த அதிர்ச்சியும் அடையவில்லை. மாறாக சோதனை நடந்த முதல் நாளே, என் வீட்டில் சோதனை நடத்தினால் கூட அதற்கு நான் எப்போதும் தயாராகவே இருக்கிறேன் என்றுதான் குறிப்பிட்டார்.

ஆனால் வருமானவரித் துறை ரெய்ட் நடந்து முடிந்த அடுத்த ஒரு வாரத்திலேயே சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அவருடைய அரசு இல்லத்திலும், சென்னை தலைமைச் செயலகத்தில் அவருடைய அறையிலும் அமலாக்கத்துறை தீவிர சோதனையில் இறங்கியது. 13ம் தேதி காலை எட்டு மணிக்கு அவருடைய வீட்டில் தொடங்கிய சோதனை சுமார் 17 மணி நேரம் நீடித்தது.

இதேபோல் கரூரில் உள்ள அவருடைய தம்பியின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட எட்டு இடங்களிலும் 60க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் துணை ராணுவத்தின் அதிரடிப்படை வீரர்களின் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டனர்.

பொதுவாக வருமானவரித் துறை அதிகாரிகள், சோதனை நடத்திய இடங்களில் மத்திய அமலாக்கத்துறையினர் உடனடியாக களம் இறங்க மாட்டார்கள். ஓரிரு மாதங்கள் கழித்தே மெதுவாக வருவார்கள். அதுவும் ஐடி அதிகாரிகள், தாங்கள் கைப்பற்றிய ஆவணங்களில் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்திருப்பதாக சந்தேகித்து அதுபற்றி உறுதியாக தெரிவித்தால் மட்டுமே அந்தத் தகவல்கள் உண்மையா? என்பதை நன்கு ஆய்வு செய்து அமலாக்கத்துறை ஒரு முடிவுக்கு வரும். மற்றபடி வரி ஏய்ப்பு நடந்திருந்தால் அதை வருமான வரி இலாகா அதிகாரிகளே கையாண்டு விடுவார்கள்.

இந்த நிலையில்தான், 17 மணிநேர சோதனைக்கு பின்பு செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

இந்த திடீர் கைதுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜியின் வசம் இருக்கும் மதுவிலக்கு துறையில் பெரிய அளவில் ஊழல் நடக்கிறது, அதன் மீது விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும் என்று கூறி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும்,
அவரை அமைச்சர் பதவியில் இருந்தே நீக்கவேண்டும் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலையும், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும் கடந்த மாதம் அடுத்தடுத்து தமிழக ஆளுநர் ரவியிடம் மனு அளித்ததோடு அதற்குரிய ஆதாரங்களையும் இணைத்திருந்ததுதான், முக்கிய காரணம் என்கிறார்கள்.

என்றபோதிலும் அமைச்சரை நீக்குவதற்குரிய அதிகாரம் தனக்கு இல்லை என்பதால் ஆளுநர் ரவி, மத்திய உள்துறையின் மூலம் செந்தில் பாலாஜிக்கு எதிரான ஆதாரங்களை அமலாக்கத்துறையிடம் கொண்டு போய் சேர்த்து விட்டார். அதன் பின்னணியில்தான் அமலக்கத்துறை அதிகாரிகள் இந்த அதிரடி சோதனையில் இறங்கினர் என்று கூறப்படுகிறது.

இது எந்த அளவிற்கு உண்மையாக இருக்கும் என்பது உறுதியாக தெரியவில்லை.

அதேபோல கரூரில் முதல் நாள் வருமானவரித்துறை சோதனைக்கு சென்ற பெண் அதிகாரி ஒருவர் திமுகவினரால் தாக்கப்பட்டதுடன் அவர் மானபங்கம் செய்யப்பட்டதும் இன்னும் சில அதிகாரிகள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதும் நடந்தது. அவர்கள்தான், திமுகவினர் தங்களை தாக்குவதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜியின் மறைமுக தூண்டுலே காரணம் என்று கருதி அவரை பழி வாங்கும் விதமாக அமலாக்கத்துறை ரெய்டுக்கு வழி வகுத்து விட்டனர், என்று இன்னொரு தகவலையும் கூறுகின்றனர்.

இந்த இரண்டாவது காரணத்தில் நம்பகத்தன்மை இருப்பதற்கான வாய்ப்பு நிறைய காணப்படுகிறது.

ஏனென்றால் கரூரில் நடந்த ஏழாவது நாள் சோதனை நிறைவின்போது வருமானவரித்துறை அதிகாரிகள் இரண்டு பண்டல்கள் கொண்ட சொத்து ஆவணங்கள் மற்றும் ஒரு பழைய டைரி ஒன்றை திமுக பிரமுகர் ஒருவர் வீட்டில் இருந்து கைப்பற்றி இருந்தனர்.

இதில் ஆவணங்கள் அனைத்தும் நிலம் வாங்கியது, அதை கைமாற்றியது தொடர்பானவை ஆகும். ஆனால் பழைய டைரியில் 2014 காலகட்டத்தில் அரசு போக்குவரத்து துறையில் ஓட்டுநர், நடத்துனர் பணிகளில் சேர்த்து விடுவதற்காக 215க்கும் மேற்பட்டோரிடம் செந்தில் பாலாஜி 4 கோடி ரூபாய் வாங்கியதற்கான அன்றாட குறிப்புகள் நிறைய எழுதப்பட்டு இருந்தன என்கிறார்கள். அதுமட்டுமன்றி அந்தப் பணம் எந்தெந்த வங்கிகளின் மூலம் யார் யாருக்கு கைமாற்றப்பட்டது என்ற விரிவான தகவல்களும் இடம் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.

இந்தப் பழைய டைரி ஐடி அதிகாரிகளுக்கு கிடைத்த துருப்புச்சீட்டு போல ஆகிவிட்டது.
ஏற்கனவே தங்களை தாக்கியவர்கள் மீது சாதாரண பிரிவுகளில் மட்டுமே வழக்கு பதிந்து எந்த கடும் நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு மீது அதிருப்தியில் இருந்த அந்த அதிகாரிகள் இதை நல்வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டனர்.

இந்த சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான தகவல்களை உடனடியாக அவர்கள் அமலாக்கத்துறைக்கு அனுப்பி வைத்தும் உள்ளனர். ஏற்கனவே இது தொடர்பான வழக்கில், விசாரணை நடத்தி வரும் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு இது ஜாக்பாட் அடித்தது போல அமைந்துவிட்டது.

அதனால்தான் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை வீட்டில் ரெய்டு நடத்தியபோது, பண பரிமாற்றம் நடந்ததாக கூறப்படும் இரண்டு பொதுத்துறை வங்கிகளின் அதிகாரிகளையும் அமலாக்கத்துறை வரவழைத்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக செந்தில் பாலாஜியிடம் பல மணி நேரம் கிடுக்குப்பிடி கேள்விகளை எழுப்பியும் அவர் எளிதில் அசைந்து கொடுக்கவில்லை. வங்கி அதிகாரிகள் வைத்திருந்த ஆதாரங்களை காட்டியபோதுதான் அவர் அதிர்ந்து போனதாக கூறப்படுகிறது.

ஆக மொத்தத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் டாஸ்மாக் மதுபான கடைகளில் கரூர் கம்பெனிக்காக ஒரு பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக விற்பனையாளர்கள் கேட்பது, சட்டவிரோத பார்களில் மது விற்பனை செய்யப்படுவது, மது ஆலைகளில் இருந்து நேரடியாக பார்களுக்கு ரசீது இல்லாமல் மதுபானங்களை விநியோகம் செய்வது போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் எந்த சோதனையும் நடத்தியதாக தெரியவில்லை. அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கை மட்டுமே சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி அவர்கள் கையில் எடுத்திருப்பது தெரிகிறது.

இது தொடர்பாகவும் ஆதாரங்களை திரட்டி அமலாக்கத்துறை ரெய்டு நடத்தினால் திமுக அரசின் பாடு இன்னும் திண்டாட்டம் ஆகிவிடும் போலிருக்கிறது.

“2016 தேர்தலில் செந்தில் பாலாஜி மீது இதே குற்றச்சாட்டுகளை கூறித்தான் திமுக தலைவர் ஸ்டாலின் தீவிர பிரச்சாரமே செய்தார். ஆனால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவரை தனது கட்சியிலும் சேர்த்துக் கொண்டார்.

2019-ம் ஆண்டு மே மாதம் நடந்த அரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெறவும் வைத்தார். அதுமட்டுமின்றி 2021 தேர்தலில் செந்தில் பாலாஜியை கரூர் தொகுதியில் போட்டியிட வைத்து வெற்றி பெற வைத்ததுடன் மின்சாரம், மதுவிலக்கு என்னும் இரண்டு மிக முக்கிய துறைகளை முதலமைச்சர் ஸ்டாலின் அவரிடம் ஒப்படைத்தும் விட்டார்.

“இப்படி குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் தன் கட்சியில் இணைந்த பிறகு அவருக்கு ஸ்டாலின் மிகுந்த முன்னுரிமை அளித்து வருவதுதான் திமுக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துகிறது. ஆனால் இதை முதலமைச்சர் உணர்ந்து கொண்டது போல தெரியவில்லை” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

“இந்த விஷயத்தில் அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு மனதில் ஒரு வருத்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஏனென்றால் அம்பத்தூர் ஆவினில் குழந்தை தொழிலாளர்கள் பணியாற்றியது குறித்து சமூக ஊடகங்களில் வீடியோ வைரலானபோது பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜை பாதுகாக்கும் விதமாக முதலமைச்சர் ஸ்டாலின் செய்தியாளரிடம் பேசும்போது இந்த வீடியோக்கள் எல்லாம் போலியானவை என்று மறுப்பு தெரிவித்தார்.

அதேபோல அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயரைச் சொல்லி டாஸ்மாக் கடைகளில் ஒரு மது பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக விற்பனையாளர்கள் கேட்கிறார்களே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு முதலமைச்சர் அது பொய் பிரச்சாரம் என்று குறிப்பிட்டார்.

ஆனால் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ சர்ச்சை குறித்து அவர் செய்தியாளர்களிடம் எந்த கருத்தையும் மறுப்பாக தெரிவிக்கவில்லை. மாறாக அவரே கேள்வி கேட்டு பதில் அளிக்கும் உங்களில் ஒருவன் பகுதியில்தான் பதில் சொன்னார்.

அதில், “இந்த ஆடியோ குறித்து அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஏற்கனவே 2 முறை விளக்கம் அளித்துவிட்டார். இந்த மட்டமான ஆடியோ அரசியல் பற்றி நான் பேச விரும்பவில்லை. மக்களுக்கான பணிகளை செய்யவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது. மட்டமான அரசியல் செய்யும் நபர்களுக்கு நான் விளம்பரம் தேடித்தர விரும்பவில்லை” என்று ஸ்டாலின் கூறியிருந்தார்.

அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, மனோ தங்கராஜ் ஆகியோருக்கு ஆதரவாக செய்தியாளர்களிடம் பதில் சொன்னது போல பி டி ஆர் ஆடியோ போலியானது என்று ஸ்டாலின் செய்தியாளர்கள் முன்னிலையில் இதுவரை வெளிப்படையாக கூறவில்லை.
இது அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தர்ம சங்கட நிலையை ஏற்படுத்தி இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

அதே நேரம், அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்வதற்கு முன்பாகவே செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து ஸ்டாலின் நீக்கி இருந்தால் திமுக அரசுக்கு தற்போது இந்த கடும் நெருக்கடி ஏற்பட்டிருக்காது” என்றும் அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

  • 150 நடிகைகளுடன் தனுஷ்… சரமாரியாக தாக்கும் சுசித்ரா..!
  • Views: - 406

    0

    0