எடப்பாடி பழனிசாமியுடன் நேருக்கு நேர் விவாதிக்க நான் தயார் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் சவால்!!
Author: Udayachandran RadhaKrishnan15 August 2023, 4:21 pm
தமிழகத்தின் மருத்துவத்துறை குறித்து அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையை படித்து பார்க்கும்போது, இவர் எப்படி 4 ஆண்டு முதலமைச்சராக இருந்தார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காரணம், கன்னியாகுமரியில் இருக்கும் 3 வயது குழந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
பிறகு அந்த சிகிச்சை திருப்தி அளிக்காத சூழலில் அவரது பெற்றோர் கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது அந்த குழந்தை நலமுடன் இருக்கிறது.
இதற்கு எடப்பாடி பழனிச்சாமி அறிக்கையில், தமிழக மருத்துவத்துறையில் அந்த குழந்தைக்கு இங்கு சிகிச்சை அளிக்கவில்லை, கேரளாவுக்கு சென்று சிகிச்சை அளித்திருக்கிறார்கள் என புகாராக கூறியிருக்கிறார்.
ஆனால், கேரளா, கர்நாடகா, உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வந்து பலர் சிகிச்சை பெற்று வருவது எடப்பாடி பழனிசாமிக்கு தெரியுமா என்று தெரியவில்லை.
இப்படி ஒரு சூழலில் மூன்று வயது குழந்தை கேரளாவுக்கு சென்று சிகிச்சை பெற்றதால், தமிழக மருத்துவத்துறையில் மோசடி இருப்பதாக பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துள்ளார். முதலமைச்சராக 4 ஆண்டு இருந்தவர், ஒரு சிறிய விஷயத்தை கூட சரியாக பார்க்கும் தன்மை கூட இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சித்தார். இதுபோன்று, மருத்துவத்துறை குறித்தும் என் நடைப்பயிற்சி குறித்தும் எடப்பாடி விமர்சனம் செய்துள்ளதாகவும் கூறினார்.
மேலும் அமைச்சர் கூறுகையில், பாம்பு, நாய்கடிக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்துகள் இருப்பதாகவும் இபிஎஸ் கேள்விக்கும் பதிலளித்தார்.
கடந்த 10 ஆண்டுகளில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்ததை நான் இரண்டரை ஆண்டுகளில் செய்திருக்கிறேன். இதயம் காப்போம் திட்டத்தில் வசதிகள் உள்ளதா என இபிஎஸ் ஆய்வு செய்யலாம் என்றும் எடப்பாடியுடன் மருத்துவத்துறை சார்ந்த நேருக்கு நேர் விவாதத்திற்கு நான் தயார் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.