25 வருஷமா கட்சியில் இருக்கேன்.. மதிக்கவே இல்ல : சொத்துக்களை அபகரிச்சுட்டாங்க.. பாஜகவில் இருந்து கவுதமி விலகல்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 October 2023, 10:29 am

25 வருஷமா கட்சியில் இருக்கேன்.. மதிக்கவே இல்ல : சொத்துக்களை அபகரிச்சுட்டாங்க.. பாஜகவில் இருந்து கவுதமி விலகல்!!

நடிகை கவுதமி பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கடுமையான விமர்சனங்களை வைத்துவிட்டு அவர் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார்.

இன்று நான் என் வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க முடியாத நெருக்கடியான கட்டத்தில் இருக்கிறேன், என் நம்பிக்கைக்கு துரோகம் செய்து, என் வாழ்நாள் சேமிப்பை ஏமாற்றி விட்டார்கள், கட்சி மற்றும் தலைவர்களிடமிருந்து எனக்கு எந்த ஆதரவும் இல்லை, என்று கூறி கவுதமி கட்சியில் இருந்து விலகி உள்ளார்.

மிகவும் கனத்த இதயத்துடனும், ஏமாற்றத்துடனும் நான் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவை எடுத்துள்ளேன். தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான எனது முயற்சிகளுக்கு பங்களிப்பதற்காக 25 ஆண்டுகளுக்கு முன்பு நான் கட்சியில் சேர்ந்தேன்.

என் வாழ்க்கையில் நான் எதிர்கொண்ட அனைத்து சவால்களிலும் கூட, நான் உறுதியாக இருந்தேன். இன்று நான் என் வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு நெருக்கடியான கட்டத்தில் நிற்கிறேன், கட்சி மற்றும் தலைவர்களிடமிருந்து எனக்கு எந்த ஆதரவும் இல்லை. அதுமட்டுமல்லாமல், என் நம்பிக்கைக்கு துரோகம் செய்து என் வாழ்நாள் சம்பாத்தியத்தை ஏமாற்றியவன் ஒருவனுக்கு கட்சியில் பலர் தீவிரமாக உதவுகிறார்கள், அந்த ஏமாற்று காரனுக்கு நெருங்கிய நண்பனாக இருக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும்.

நான் 17 வயதிலிருந்தே பல்வேறு வேளைகளில் பணிபுரிந்து வருகிறேன், சினிமா, தொலைக்காட்சி, வானொலி மற்றும் டிஜிட்டல் மீடியா என 37 வருடங்களாக எனது தொழில் வாழ்க்கை நீடித்து வருகிறது.

எனது வாழ்நாள் முழுவதும் உழைத்தேன், இந்த வயதில் நான் பொருளாதார ரீதியாக பாதுகாப்பாக இருக்கவும், என் மகளின் எதிர்காலத்தை வழங்கவும் முடியும் என்றால் அதற்கு என் உழைப்பே காரணம். ஆனால் சி.அழகப்பன் எனது பணம், சொத்து மற்றும் ஆவணங்களை மோசடி செய்து என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளார்.

அழகப்பன் 20 ஆண்டுகளுக்கு முன்பு, எனது தனிமையை கண்டு என்னை அணுகினார், ஏனெனில் நான் என் பெற்றோர் இருவரையும் இழந்த ஒரு அனாதை மட்டுமல்ல, ஒரு கைக்குழந்தையுடன் கணவர் இன்றி ஒரு தாயாகவும் இருந்தேன்.

அக்கறையுள்ள ஆண் என்ற போர்வையில் அவர் என்னையும் எனது குடும்பத்தையும் ஆதரிப்பது போல வந்தார். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்தச் சூழ்நிலையில்தான் எனது பல நிலங்களின் விற்பனை மற்றும் ஆவணங்களை அவரிடம் ஒப்படைத்தேன், சமீபத்தில்தான் அவர் என்னிடம் மோசடி செய்ததைக் கண்டுபிடித்தேன். என்னையும் என் மகளையும் அவரது குடும்பத்தில் ஒரு அங்கமாக வரவேற்பது போல் பாசாங்கு செய்து அவர் நன்றாக ஏமாற்றிவிட்டார். .

நான் உழைத்து சம்பாதித்த பணம், சொத்துக்கள் மற்றும் ஆவணங்களை மீட்டெடுப்பதற்காக, கடுமையாக போராடி வருகிறேன் . இந்த நாட்டின் சட்டங்கள், விதிகள் மற்றும் செயல்முறைகளை நான் பின்பற்றுகிறேன், எனக்கு நீதி கிடைக்கும் என்ற முழு மரியாதையுடனும் நம்பிக்கையுடனும் இருக்கிறேன்.

எனது முதலமைச்சர் மீதும், எனது காவல் துறை மீதும், எனது நீதித்துறை மீதும் முழு நம்பிக்கை வைத்து, தொடர் புகார்களை அளித்துள்ளேன், ஆனால் அந்த செயல்முறை விவரிக்க முடியாத அளவுக்கு இழுத்தடித்து வருவதைக் காண்கிறேன். 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின்போது, ​​ராஜபாளையம் தொகுதியின் வளர்ச்சியை உறுதி செய்ய பாடுபென்டன்.

பாஜக சார்பாக தொகுதியில் போட்டியிட உறுதியளித்தேன். ராஜபாளையம் மக்களுக்காகவும், அடிமட்ட அளவில் பாஜகவை வலுப்படுத்துவதற்காகவும் என்னை அர்ப்பணித்தேன். எனினும், கடைசி நிமிடத்தில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டது.

ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாமல், கட்சி மீதான எனது உறுதிப்பாட்டைக் காப்பாற்றினேன். இருப்பினும் 25 வருடங்கள் கட்சிக்கு உறுதியான விசுவாசம் இருந்தும், எனக்கு அழகப்பன் விவகாரத்தில் முழு ஆதரவு இல்லாததையும், மேலும் பாஜகவின் பல மூத்த உறுப்பினர்கள் அழகப்பனுக்கு உதவி செய்து வருவதையும் உணரும்போது உடைந்து போய் கட்சியில் இருந்து வெளியேறுகிறேன் என்று , கவுதமி குறிப்பிட்டுள்ளார்.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 611

    2

    0