திமுகவினரால் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்ற நினைப்புடன் தினமும் கண் விழிக்கிறேன் : திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேச்சு!!
Author: Udayachandran RadhaKrishnan9 October 2022, 6:34 pm
திமுக பொதுக்குழு சிறப்பாக நடந்தேறி, மூத்த தலைவர்கள் பலரும் பாராட்டு மழைகளைப் பொழிந்து கொண்டிருந்த நிலையில், கடைசி ஓவரில் இறங்கி கட்சியின் சீனியர்களை ஸ்டாலின் வெளுத்தெடுத்தார்.
இதைக் கண்டு மேடையில் இருந்தவர்களும் சரி, பொதுக்குழுவில் பங்கேற்றவர்களும் சரி ஆடிப்போய் விட்டனர். அதிலும், சமீபமாக சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்கள் முகத்தில் ஈயாடவில்லை. ஸ்டாலினின் இந்த சரவெடிக்குப் பின்னணி, உளவுத்துறையிடமிருந்து வந்த தகவல் தான் என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தினர்.
திமுக பொதுக்குழு மேடையில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கையோடு, சீனியர்களை சுளுக்கெடுத்துள்ளார் ஸ்டாலின். திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில், “ஒருபக்கம் திமுக தலைவர், இன்னொரு பக்கம் தமிழ்நாட்டின் முதலமைச்சர். மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பது போல் இருக்கிறது என் நிலைமை. என்னை மேலும் துன்பப்படுத்துவது போல மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் உருவாக்கினால் நான் என்ன சொல்வது? யாரிடம் சொல்வது?
காலையில் கண் விழிக்கும்போதே நம்மவர்கள் யாரும் புது பிரச்சனையை உருவாக்கி இருக்கக்கூடாது என்ற நினைப்போடுதான் நான் கண் விழிக்கிறேன். இது சில நேரங்களில் என்னை தூங்க விடாமல் கூட ஆக்கி விடுகிறது. பொது இடங்களில் சிலர் நடந்துகொண்ட செயல்கள் காரணமாக திமுகழகம் பழிகளுக்கு, ஏளனத்திற்கு ஆளானது. ஒவ்வொரு நொடியையும் கண்ணியமாக பயன்படுத்த வேண்டும்.
உங்கள் நன்மைக்காகவும் சேர்த்தே இதனைச் சொல்கிறேன். பொதுமேடைகளில் மட்டுமல்ல, அடுத்தவர்களிடம் பேசும்போது கூட எச்சரிக்கையாக பயன்படுத்துங்கள்.” எனக் கடுமையாகப் பேசியுள்ளார் ஸ்டாலின்.