இன்பநிதி முதல்வராவதை பார்த்துவிட்டுதான் நான் சாகணும் : திமுக முன்னாள் எம்எல்ஏ பரபரப்பு பேச்சு!!
Author: Udayachandran RadhaKrishnan18 December 2022, 11:03 am
தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற போதே அவரது அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக இடம்பெறுவர் என்று எதிர்பார்க்கப்பட்டது.
முதல் அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் இடம்பெறாதது அவரது ஆதரவாளர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. அதே நேரத்தில் உதயநிதியின் நண்பர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்தது.
உதயநிதி ஸ்டாலின் விரைவில் அமைச்சராக பொறுப்பேற்பார் என்று பலமுறை அமைச்சர்கள் கூறி வந்தனர். இந்த நிலையில் கடந்த 14ஆம் தேதியன்று அமைச்சராக பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின். தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் இதனை கோலாகலமாக கொண்டாடினர். பேராசிரியர் அன்பழகன் பிறந்த நாளை முன்னிட்டு திமுக சார்பில் நூற்றாண்டு நிறைவு பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கடலூர் புதுப்பாளையத்தில் திமுக கிழக்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வி.பி ராஜன் பேசும்போது, திமுகவில் வாரிசு தான். அதை சட்டமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்கிறோம். நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அதை ஏன் கேட்கிறீர்கள் அண்ணாமலை என கேள்வி எழுப்பினார்
மேலும் கலைஞர், ஸ்டாலின், உதயநிதி, வரிசையில் இன்ப நிதி முதல்வராக வேண்டும் அதுவே எனது ஆசை திமுகவினரின் எண்ணம் அதுதான். இன்ப நிதி முதல்வர் ஆவதை பார்க்க வேண்டும் என்பதே எனது ஆசை. அதை பார்த்துவிட்டு தான் சாக வேண்டும் என்று கூறினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.