வயது என்னை வாட்டினாலும், கோலூன்றி நடந்தாலும்.. இறுதி வரை மக்களுக்காக போராடுவேன் : ராமதாஸ் கடிதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 July 2023, 11:16 am

பாமக நிறுவனர் ராமதாசின் 85வது பிறந்தநாளையொட்டி தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில். என் தாயின் கருவறையிலிருந்து பூமித்தாயின் மடிக்கு நான் இடம் பெயர்ந்து இன்று (25.07.2023) 84 ஆண்டுகள் நிறைவடைந்து 85-ஆம் ஆண்டு தொடங்குகிறது.

இந்த இனிமையான தருணத்தில் என்னினும் இளையவர்களை வாழ்த்துகிறேன்… மூத்தவர்களிடமிருந்து வாழ்த்துகளைக் கோருகிறேன். பொதுவாக மாணவர்களுக்கு ஏப்ரல், மே மாதங்கள் தான் தேர்வுக் காலம். ஆனால், என்னைப் பொறுத்தவரை ஜூலை மாதம் தான் எனக்கு தேர்வுக் காலம்.

ஆம்! என்னைப் பொறுத்தவரை பிறந்தநாள் என்பது கொண்டாட்டங்களுக்கான காலம் என்பதை விட, கடந்த ஓராண்டில் என்னென்ன சாதனைகளையெல்லாம் படைத்தோம், என்னென்ன வாய்ப்புகளை எல்லாம் தவற விட்டோம் என்பதை எடை போட்டு மதிப்பிடுவதற்கான நாள் ஆகும். ஜூலை 16-ஆம் நாள் பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட நாள், ஜூலை 20-ஆம் நாள் வன்னியர் சங்கம் தொடங்கப் பட்ட நாள். ஜூலை 25-ஆம் நாள் எனது பிறந்தநாள். ஜூலை மாதத்தில் இரு அமைப்புகளின் செயல்பாடுகளையும், எனது செயல்பாட்டையும் ஆய்வு செய்ய வேண்டியிருப்பதால் அது தேர்வு மாதம்.

பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்பாடுகளையும், வன்னியர் சங்கத்தின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்யும் போது, அவற்றில் வலிகளும் நிறைந்திருக்கும், மகிழ்ச்சியும் பொங்கி வரும். ஆனால், எனது பிறந்தநாள் எனக்கு எப்போதும் மகிழ்ச்சியான தருணம் தான். என்னை அறிந்தவர்களிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எல்லையில்லா அன்பை நான் காட்டுவதும், என்னை அறிந்தவர்கள், என்னிடம் எதையும் எதிர்பார்க்காமல் தங்களையும் தருவதற்கு தயாராக இருப்பதும் தான் மகிழ்ச்சிக்கு காரணம். சிலரைப் பார்த்து, ‘‘ அவர் ரொம்ப கொடுத்து வைத்தவர்ப்பா’’ என்பார்கள்.

என்னைப் பொறுத்தவரை நான் தான் இந்த உலகில் மிகவும் கொடுத்து வைத்தவன். 84 ஆண்டுகளுக்கு முன் இந்த மண்ணில் பிறந்த போது, எனக்கு இருந்த சொந்தங்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தில் தான்.

ஆனால், இன்று உலகெங்கும் உள்ள 10 கோடி தமிழ் இதயங்களில் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அதையும் கடந்து ஒரு கோடி தமிழ் இதயங்கள் எனக்காகவே துடித்துக் கொண்டிருக்கின்றன.

பாசமிக்கத் தமிழ்ச் சொந்தங்களும், பாட்டாளி சொந்தங்களும் என்னை அய்யா என்று அழைப்பதற்கு, உலகில் உள்ள எந்த அதிகார பதவியும் ஈடு இணை அல்ல. அதிகார பதவிகளையும், பணத்தையும் கொண்டிருப்பவர்களைச் சுற்றிலும் கூட்டம் இருக்கும்.

அது அவர்களுக்கான கூட்டம் அல்ல… அவர்களிடம் உள்ள பணம் மற்றும் பதவிக்கான கூட்டம். என்னிடம் பணமும் இல்லை… பதவியும் இல்லை. ஆனால், என்னிடம் பெரும் கூட்டம் இருக்கிறது. அந்தக் கூட்டம் என்னிடமிருந்து எதையும் எதிர்பார்க்கும் கூட்டம் அல்ல… மாறாக, எனக்காக எதையும் தியாகம் செய்யும் கூட்டம்.

நான் பார்த்து வளர்ந்த மக்களை அந்தச் சூழலில் இருந்து மீட்க வேண்டும்; கல்வியும், வேலையும் பெற்று வாழ்வில் முன்னேறுவதை உறுதி செய்ய வேண்டும் என்ற வேட்கை எனக்குள் பிறந்தது. அதன் பயன் தான் எனது பொதுவாழ்வுப் பயணம் ஆகும்.

எனது பொதுவாழ்வுப் பயணத்தில் அரசியல், சமூக நீதி, இனம், மொழி, இயற்கை, சுற்றுச்சூழல் சார்ந்து என்னென்ன இலக்குகளையெல்லாம் நான் வரித்துக் கொண்டேனோ, அந்த இலக்குகளை எனது 44 ஆண்டுகளாக பொதுவாழ்க்கையில் இன்னும் முழுமையாக என்னால் அடைய முடியவில்லை.

இலக்குகளை இதுவரை முழுமையாக அடைய முடியவில்லை என்றாலும் கூட, அதை நோக்கிய பயணத்தில் பெருந்தொலைவை அடைந்து விட்டோம்.ஆனால், தமிழ்நாட்டில் ஆட்சி என்ற இலக்கை எட்டுவதற்கு இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்? இந்த வினா தான் என்னை வாட்டிக் கொண்டிருக்கிறது.

1989-ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட போது, அடுத்தத் தேர்தலில் வெற்றி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. 1991-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி அவர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்காவிட்டால், அந்தத் தேர்தலில் குறைந்தது 50 இடங்களில் நாம் வெற்றி பெற்றிருப்போம். அவ்வாறு வென்றிருந்தால், அந்த ஆண்டு நாம் தான் ஆட்சி அமைத்திருப்போம்.

1996-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக அரசியலில் ஆளுங்கட்சிக்கு எதிராக வீசிய அலையையும் மீறி, நான்கு இடங்களில் வென்றோம். 2001-ஆம் ஆண்டில் 20 இடங்கள், 2006-ஆம் ஆண்டில் 18 இடங்கள் என பாட்டாளி மக்கள் கட்சி வெற்றிப்பாதையில் தான் வலம் வந்து கொண்டிருந்தது.

ஆனால், அதன் பின் வெற்றிகள் நமக்கு வசமாகவில்லை. 1996-ஆம் ஆண்டில் தனித்து 4 இடங்களை வென்ற நாம் கூட்டணி அமைத்தும் 5 இடங்களில் மட்டும் தான் வெற்றி பெற முடிந்திருக்கிறது. இதற்கான காரணம் என்னவென்று கண்டறிய வேண்டும்… உடனடியாக சரி செய்யப்பட வேண்டும்.

பாட்டாளிகள் இல்லாமல் என் வாழ்க்கை இல்லை, தமிழ்ச்சொந்தங்கள் இல்லாமல் நான் இல்லை. என் வாழ்நாள் முழுவதும் அவர்களுக்காக உழைப்பதே எனது விருப்பமும், மகிழ்ச்சியும் ஆகும்.

இந்த பணியை நான் என்றும் தொடர்வேன் என்று எனது முத்துவிழாவில் நான் அளித்த வாக்குறுதியை மீண்டும் ஒருமுறை தமிழ்ச்சொந்தங்களுக்கு புதுப்பித்துக் கொள்கிறேன். ‘‘ முதுமை எவ்வளவு தான் என்னை வாட்டினாலும், கோலூன்றி நடந்தாலும், நான் இறுதி வரை இந்த ஊமை சனங்களுக்காக, இந்த மக்களுக்காக நான் போராடிக் கொண்டே இருப்பேன்! என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!