அன்னூரில் ஒரு கைப்பிடி மண்ணை கூட எடுக்க விடமாட்டேன்.. மீறினால் சாகும் வரை உண்ணாவிரதம் : அண்ணாமலை எச்சரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
7 December 2022, 7:20 pm

அன்னூரில் தொழில் பூங்கா அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் ஒன்றியங்களில் உள்ள பள்ளேபாளையம், இலுப்பநத்தம், பொகளூர், குப்பனூர், அக்கரை செங்கம்பள்ளி, வடக்கலூர் உள்ளிட்ட 6 ஊராட்சிகளில் தொழில் பூங்கா அமைக்க 3731 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசாணை வெளியிட்டது.

தொழில் பூங்கா அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, நமது நிலம் நமதே என்ற பெயரில் குழு அமைத்து அப்பகுதி விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அன்னூர் – ஓதிமலை சாலையில் பாஜக சார்பில் விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய அண்ணாமலை, அன்னூர் பகுதியில் தொழில் பூங்கா அமைக்க சுமார் 3800 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த அரசாணை வெளியிட்டுள்ளனர். இதற்காக, அன்னூரில் தரிசு நிலமென சொல்லி விவசாய நிலத்தை கையகப்படுத்துகிறார்கள்.

அன்னூர் விவசாயிகள் பணக்காரர்களாக வேண்டும் என விரும்பவில்லை என்பதை முதலமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும். மத்திய அரசு கணக்குப்படி 48,195 ஏக்கர் நிலம் தொழிற்சாலைகள் அமைக்க கையக்கப்படுத்தப்பட்ட நிலங்கள் உள்ளது. ஆனால் அங்கு தொழிற்சாலைகள் அமைக்கப்படவில்லை.

நாங்குநேரியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு தொழிற்பேட்டை அமைக்க நிலம் கையகப்படுத்திய போதும், அங்கு ஒரு நிறுவனம் கூட வரவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டிற்கு 27 ஆயிரம் கோடி அந்நிய முதலீடு வந்துள்ளது.

கர்நாடக, மகாராஷ்டிரா, டெல்லியை விட தமிழ்நாட்டிற்கு வந்த அந்நிய முதலீடு குறைவு. அன்னூரில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டிய அவசியம் என்ன? நிலங்களை அபகரித்து விவசாயிகள் வாழ்வாதாரத்தை அழித்து ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு நிலத்தை எடுத்து தருகிறார்கள்.

கேரள அரசு தேனி மாவட்டத்திற்குள் சர்வே நடத்தி கொண்டிருக்கின்றனர். தமிழக அரசின் அனுமதியோடு 80 ஏக்கர் விவசாய நிலங்களை கேரள அரசு எடுத்து விட்டது.

அன்னூரில் ஒரு பிடி மண்ணை கூட எடுக்க விட மாட்டோம். அன்னூரில் விவசாய நிலங்களை எடுக்க முயன்றால், சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டம் ஆரம்பிப்பேன்’ என பேசினார்.

மேலும், ‘டெல்லியில் இருக்கும் மோடி ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டைப் பற்றி யோசிக்கிறார்.கடந்த சில தினங்களுக்கு முன்பு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி குறித்து என்னிடம் கேட்டறிந்தார்.

காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சிக்காக தமிழகத்தில் இருந்து வந்தவர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து அவர் பரிவோடு என்னிடம் கேட்டறிந்தார்.

காசி தமிழ் சங்கத்திற்கு சென்று வந்தவர்கள் இதுவரை திமுக சொல்லிய பொய்யை உணர்ந்துள்ளார்கள். மத்திய அரசுக்கு போட்டியாக மாநில அரசு காசிக்கு 200 பேரை அனுப்புகிறார்கள். அவர்களை குளிர் காலத்தில் காசிக்கு அனுப்பாமல் வெயில் காலத்தில் அனுப்புங்கள்.

பாஜக வேகமாக வளர்ந்து கொண்டிருப்பதைப் பார்த்து அனைவருக்கும் பயம் வந்து விட்டது. எத்தகைய தாக்குதலை திமுக தொடுத்தாலும் 2024 தேர்தலில் 25 எம்.பி.க்களை பெற போவது உறுதி. 70 ஆண்டுகளாக எழுதிய வரலாறை மக்கள் ஆதரவோடு சுக்குநூறாக்கி கொண்டிருக்கிறோம்’ எனத் தெரிவித்தார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 639

    0

    0