நான் சனாதனவாதி.. என்னை விமர்சிப்பவர்களை ஒதுக்க மாட்டேன் : ஆளுநர் ஆர்என் ரவி பேச்சு!!!

Author: Udayachandran RadhaKrishnan
5 October 2023, 9:56 pm

நான் சனாதனவாதி.. என்னை விமர்சிப்பவர்களை ஒதுக்க மாட்டேன் : ஆளுநர் ஆர்என் ரவி பேச்சு!!!

ஆளுநர் ஆர்.என்.ரவியும், தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எல்லாம் தொடர்ந்து திமுகவின் கொள்கைகள் பற்றி விமர்சனங்கள் முன்வைத்து வருகிறார்.

முதல்வர் ஸ்டாலின் சொல்லும் ‘திராவிட மாடல்’ ஆட்சி என்பதனையும் விமர்சித்து வருகிறார் ஆளுநர். திமுகவினர் தொடர்ச்சியாக எதிர்த்து வரும் ‘சனாதனம்’ தொடர்பாக தொடர்ந்து உயர்வாகப் பேசி வருகிறார் ஆளுநர். நேற்று கூட கடலூர் மாவட்டம் ஆதனூரில் நடந்த நந்தனார் குருபூஜை விழாவில் 100 பட்டியலினத்தோருக்கு பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.

இந்நிலையில் இன்று சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகையில் வள்ளலார் திருவருவுச்சிலை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

இதனை ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று திறந்து வைத்தார். பின்னர் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றினார் ஆளுநர் ரவி. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியும் காணொளிக் காட்சி வாயிலாக உரையாற்றினார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பேசுகையில், “என்னை விமர்சிப்பவர்களை நான் ஒதுக்க மாட்டேன். ஏனெனில் நான் ஒரு சனாதனவாதி. சமூகத்தில் உள்ள வேற்றுமைகளை சனாதனம் எனக் கூறும் நபர்களை என்ன சொல்வது என தெரியவில்லை. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என வள்ளலார் கூறியது, சனாதனத்தின் வெளிப்பாடு.” எனத் தெரிவித்துள்ளார்.

சனாதன தர்மம், மனித குலத்துக்கே விரோதமானது என திமுகவினர் விமர்சித்து வருகின்றனர். அண்மையில் கூட திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்று பேசினார். இப்படியான அரசியல் சூழலில் ஆளுநர் ரவி தன்னை ஒரு சனாதனவாதி என வெளிப்படுத்தியுள்ளது விவாதங்களைக் கிளப்பி விட்டுள்ளது.

  • ajith kumar next movie directed by sukumar அய்யோ; இது சுத்த பொய்- பதறிப்போய் ஓடி வந்த அஜித்தின் மேனேஜர்? அப்படி என்ன நடந்திருக்கும்?