பழனியில் கும்பாபிஷேகம் நடத்தினால் CM ஸ்டாலினுக்கு ஆபத்து… அர்ச்சகர்கள் சொன்ன பகீர் தகவல்.. திட்டமிட்டபடி விழா நடப்பதில் சிக்கல்!!

Author: Babu Lakshmanan
21 December 2022, 2:11 pm

பழனி கோவில் கும்பாபிஷேகம் தொடர்பாக பழனி கோவில் அர்ச்சகர்களுக்கும் – அதிகாரிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி 27ம்தேதி நடைபெறும் என இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அறங்காவலர்கள் குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கும்பாபிஷேகத்திற்கான பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், பழனி கோவில் மூலவர் சிலையான நவபாஷாண முருகன் சிலைக்கு மருந்து சாத்துவதில் அதிகாரிகள் மற்றும் அர்ச்சகர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அர்ச்சக ஸ்தானிக சங்கத்தலைவரும், பழனி கோவில் மூத்த அர்ச்சகருமான கும்பேஷ்வர குருக்கள், பழனி கோவில் அர்ச்சகர்களுக்கு வாட்சப் ஆடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், பழனி கோவில் சிலையை பலப்படுத்தாமல் கும்பாபிஷேகம் நடத்த சொல்வதாகவும், ஆனால், அதை மறுத்துள்ளதாகவும்‌ தெரிவித்துள்ளார். மேலும், இதுதொடர்பாக அர்ச்சகர்களிடம் திருக்கோவில் சார்பில் கையெழுத்து கேட்டால் யாரும் போடவேண்டாம் என்றும், மீறி கையெழுத்து போட்டால் பிரச்சினைகள் வந்தால் உதவிக்கு வரமுடியாது, என்றும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அர்ச்சகர்கள் தரப்பில் தெரிவிப்பதாவது:- பழனி கோவில் மூலவர் சிலையை பலப்படுத்துவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. கோவில் கும்பாபிஷேகத்திற்கான நாள் மிகவும் குறைவாக இருப்பதால், கோவில் கருவறை மற்றும் நவபாஷாண மூலவர் சிலையை பலப்படுத்தும் பணிகளை சரியாக முடிக்க முடியாது. எனவே, கும்பாபிஷேகத்தை அவசர கதியில் நடத்த வேண்டாம் என அர்ச்சகர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர். அதை அதிகாரிகள்‌ மற்றும் அறங்காவலர்கள் ஒத்துக்கொள்ள மறுக்கின்றனர்.

எனவே, சக அர்ச்சகர்களை எச்சரிக்கும் விதமாக தலைமை குருக்கள் இந்த ஆடியோ அனுப்பியுள்ளார். மேலும், கும்பாபிஷேகம் நடைபெறும் நாளான ஜனவரி 27ம் தேதி அன்று பூரம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் எனபதால் பூரம் நட்சத்திரத்தை கொண்ட தமிழக முதலமைச்சர் ஸடாலினுக்கு கேடு தரும். நாட்டின் மன்னனின் பிறந்த நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் ஏற்படும் நாளன்று எவ்வித அரசு சார்பில் எவ்வித காரியங்களையும் நடத்தக்கூடாது என்பது விதி. அவ்வாறு விதிமீறி நடந்தால் மன்னனுக்கு கேடாக முடியும் என்பது விதி.

எனவே‌ குறிப்பிட்ட அந்த நாளில் கும்பாபிஷேகம் நடந்தால் நாட்டு மன்னர் என்ற முறையில் தமிழக முதல்வரான ஸ்டாலினுக்கும், தமிழ்நாட்டிற்கும் கேடு ஏற்படும் என்றும் தகவல் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக பழனி அர்ச்சகஸ்தானிய சங்கத் தலைவர் கும்பேஸ்வர குருக்களிடம் கேட்டபோது :- பழனி முருகன் நவபாஷாண சிலைக்கு மருந்து சாத்த வேண்டாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மருந்து சாத்தாமலேயே கும்பாபிஷேகத்தை நடத்துமாறு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது ஆகம விதிகளை மீறிய செயல். அவ்வாறு செய்தால் பக்தர்கள் பொதுமக்கள் மற்றும் நாட்டிற்கும் ஆபத்து ஏற்படும். இதற்கு முன்னதாக இதுபோன்ற செயல்களால் ஏற்பட்டுள்ள விபரீதங்களை மறந்துவிடக்கூடாது.

மூலவரின் பாதுகாப்பு முக்கியமானது. ஏற்கனவே, மூலவர் சிலைக்கு செய்து வந்த ஆறுகால அபிஷேகங்களும் எம்ஜிஆர் காலத்தில் நிறுத்தப்பட்டது. எனவே, இதுபோன்ற ஒவ்வொன்றையும் நிறுத்தினால் மூலவர் சிலை பலமில்லாமல் போகும். மருந்து சாத்தாமல் அவசரப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தினால், நாடு சுபிட்சமின்றி போகும், எனக் கூறினார்.

16 ஆண்டுகளுக்கு பிறகு பழனி கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படும் நிலையில், தற்போது, மூலவர் சிலையின் தன்மை மற்றும் அதன் பலம் குறித்து அறிந்து நடவடிக்கை எடுக்க இந்துசமய அறநிலையத்துறை சார்பில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிஅரசர் பொங்கலியப்பன் தலைமையிலான அதிகாரிகள், அர்ச்சகர்கள், ஆதீனங்கள் உள்ளிட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது மூலவர் சிலைக்கு மருந்து சாத்துவது தொடர்பாக இருதரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Allu Arjun arrest and controversy பூகம்பமாய் வெடிக்கும் அல்லு அர்ஜுன் பிரச்சனை…வீட்டின் முன்பு கலவரம்…கண்டுகொள்ளாத போலீஸார்..!
  • Views: - 552

    0

    0