முடிஞ்சா என்னை மாதிரி பேசி காட்டுங்க… பிடிஆருக்கு சவால்… ஆளுநரை நேரில் சந்திக்கும் அண்ணாமலை!!

Author: Udayachandran RadhaKrishnan
23 April 2023, 10:31 am

அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், தமிழக நிதியமைச்சர் திரு. பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான திரு. மு.க.ஸ்டாலினின் மகன் திரு. உதயநிதி ஸ்டாலின் மற்றும் மருமகன் திரு. சபரீசன் ஆகியோர் ஊழல் மூலம், ஒரே ஆண்டில், 30,000 கோடி ரூபாய் பணத்தை முறைகேடாக சம்பாதித்ததாகப் பேசியிருந்த ஒலி நாடாவின் உண்மைத் தன்மையை, சுதந்திரமான, நியாயமான தடயவியல் தணிக்கை செய்யக் வேண்டும்.

இதற்காக தமிழக பாஜக தலைவர்கள் குழு ஒன்று, மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு ஆர்.என்.ரவி அவர்களை இன்று சந்திக்கவுள்ளது. தமிழக நிதியமைச்சர் திரு. பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், இந்த ஒலி நாடா பொய்யானது, யார் குரலில் வேண்டுமானாலும் இப்படிப் பேசி வெளியிட முடியும் என்று சமாளித்துக் கொண்டிருப்பதால், அவர் அந்த ஒலி நாடாவில் பேசிய அதே கருத்துக்களை நான் பேசுவதைப் போல ஒரு ஒலி நாடாவை வெளியிடுமாறு சவால் விடுகிறேன்.

என்னுடைய குரல் மாதிரியை ஆய்வுக்கு நான் வழங்க தயார். தமிழக நிதி அமைச்சரும் தனது குரல் மாதிரியை வழங்கவேண்டும். இரண்டு ஒலி மாதிரிகளையும் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடக்கும் விசாரணை ஆணையத்திடம் சமர்ப்பிக்கலாம். இரண்டு ஒலி நாடாக்களின் உண்மைத் தன்மையை, நீதிமன்றம் விசாரித்துக் கூறட்டும்.

காலாகாலமாக பதவிகளை எல்லாம் வாரிசுகள் அனுபவித்துக் கொண்டு, தனது கட்சித் தொண்டர்களை போஸ்டர் மட்டுமே ஒட்ட வைத்து ஏமாற்றுவது போல, இது அத்தனை எளிதானதல்ல என்பதை தமிழக நிதியமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் சொல்லும் விசித்திரக் கதைகளை, வேறு வழியில்லாமல் உங்கள் கட்சியினர் நம்பலாம். ஆனால் நீங்கள் என்ன கதை சொன்னாலும் நம்புவதற்கு, நம் தமிழக மக்கள் ஒன்றும் திமுகவினர் அல்ல; அவர்களின் புத்திசாலித்தனத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றும் தமிழக நிதியமைச்சரை மிக பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம், என்றும் பாஜக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

முன்னதாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சர்ச்சை ஆடியோ குறித்து அளித்த விளக்கத்தில், என்னை பொது சமூகத்தில் வில்லன் போல் சித்தரிக்கிறார்கள்.

அவர்கள் தங்களின் தோற்றத்தை மாற்றிக்கொள்ள விரும்புகிறார்கள். என்னை இந்த அரசுக்கு எதிரான ஒரு தனிப்பட்ட போராளி போல் அவர்கள் சித்தரிக்க காட்டிக்கொள்ள முயற்சி செய்கிறார்கள்.

நான் இந்த பொது வாழ்க்கையில் என்ன செய்தேனோ அதெல்லாம் என் தலைவர்.. திமுக தலைவர்.. முதல்வர் ஸ்டாலின் காரணமாக மட்டுமே. எங்களை பிரிக்க நடக்கும் சதிகள் எதுவும் வெற்றிபெறாது. இதனால் இந்த ஆடியோவிற்கு விளக்கம் அளிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறேன்.

இந்த தவறான, பொய்யான வீடியோவை அரசியல் தொடர்பற்ற சிலரும், ஊடகங்களும் விவாதித்து வருகின்றன. தற்போது பரவி வரும் ஆடியோ முழுக்க முழுக்க பொய்யானது.

எளிதில் அணுகக்கூடிய மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புனையப்பட்ட அல்லது இயந்திரத்தால் உருவாக்கப்பட்ட ஆடியோ கிளிப்களை உருவாக்கும் திறன் தற்போது உலகம் முழுக்க உள்ளது.

இதன் மூலம் வரும் நாட்கள் மற்றும் மாதங்களில் அதிக தீங்கிழைக்கும் உள்ளடக்கத்துடன் அதிகமான ஆடியோ மற்றும் வீடியோ கிளிப்கள் வெளியானாலும் அதை கண்டு நாம் ஆச்சரியப்பட கூடாது.

இந்த பொய்யான ஆடியோவை கிளிக் பைட் செய்தியாக வெளியிட வேண்டாம். இந்த சமீபத்திய ஆடியோக்கள் பற்றிய என்னுடைய ஒரே கடைசி அறிக்கை இதுதான். இனிமேல் இது போன்ற பொய்யான அவதூறுகளை நான் புறக்கணிப்பேன்.

இத்தகைய அவதூறுகள் என்னுடைய சகிப்புத்தன்மை மிஞ்சும் அளவிற்கு இருந்தால், நான் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். வழக்குத் தொடர, அதை விசாரிக்க பல மாதங்கள் ஆகும் என்பதை நான் உணர்ந்தாலும், அத்தகைய நடவடிக்கைகள் சிலருக்கு விளம்பரத்தை கொடுக்கும் என்பதால் அதை செய்ய மாட்டேன், என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டு உள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 401

    0

    0