செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கொடுத்தா சிறையில் உள்ள 70% கைதிகளும் ஆஸ்பத்திரிக்குதான் போவாங்க.. துஷார் மேத்தா எதிர்ப்பு!
Author: Udayachandran RadhaKrishnan28 November 2023, 1:49 pm
செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கொடுத்தா சிறையில் உள்ள 70% கைதிகளும் ஆஸ்பத்திரிக்குதான் போவாங்க.. துஷார் மேத்தா எதிர்ப்பு!
அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அவர் மீது புகார் எழுந்ததை அடுத்து அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.
இந்த நிலையில் அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என கூறி கடந்த ஜூன் 14 ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவர் ஜாமீன் கேட்ட நிலையில் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதையடுத்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்திருந்தார். செந்தில் பாலாஜியின் தம்பி தலைமறைவாக உள்ளதால் அவரை ஜாமீனில் விட்டால் சாட்சியகங்கள் அழிக்கப்படும் என அமலாக்கத் துறை வாதத்தை ஏற்று நீதிபதி ஜெயசந்திரன் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டார். இதை எதிர்த்து செந்தில் பாலாஜி மேல் முறையீடு செய்தார். இதனிடையே அவருக்கு கடந்த 22 ஆம் தேதி 11 ஆவது முறையாக நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 20 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் சார்பில் ஆஜரான முகுல் ரோத்தகி, செந்தில் பாலாஜியின் மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பித்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கு 28ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி இன்று உச்சநீதிமன்றத்தில் சதீஷ் சந்திரா, திரிவேதி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது ரோத்தகி தனது வாதத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டால் இந்த இடத்தில்தான் சிகிச்சை பெற வேண்டும் என்றெல்லாம் எந்த சட்டமும் சொல்லவில்லை.
அவருக்கு 6 மாதங்களுக்கு முன்புதான் பைபஸ் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது என்றார். அப்போது நீதிபதி திரிவேதி குறுக்கிட்டு இன்று பைபாஸ் அறுவை சிகிச்சை எல்லாம் குடல் வால் அறுவை சிகிச்சையை போல் சாதாரணமாகிவிட்டன என்றார்.
அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா, செந்தில் பாலாஜிக்கு உடல்நலம் குறைப்பாட்டை வைத்து ஜாமீன் கொடுத்தால், சிறையில் 70 சதவீதம் கைதிகளுக்கும் உடல்நலம் பாதிக்கப்படும். அவர்களுக்கும் ஜாமீன் கொடுத்துவிட முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.