சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு என்றால் நீதிமன்றமே தலையிடலாம்.. தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் பரபர உத்தரவு!!!
Author: Udayachandran RadhaKrishnan6 February 2024, 9:46 pm
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு என்றால் நீதிமன்றமே தலையிடலாம்.. தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் பரபர உத்தரவு!!!
சென்னை வேளச்சேரி ஏரியில் கழிவுநீர் கலப்பு மற்றும் ஆக்கிரமிப்பு குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த செய்திகளின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்த தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், நெடுஞ்சாலைத்துறை போன்ற பல்வேறு அரசு நிறுவனங்களுக்கு, எந்த அதிகாரத்தின் கீழ் ஏரி பகுதிகள் வழங்கப்பட்டன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு, நீர்வளத்துறைக்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த உத்தரவில், நீர்நிலைகளுக்கு முன்னுரிமை அளித்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.
வேளச்சேரி ஏரி பகுதியை வீட்டுவசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், நெடுஞ்சாலைத்துறை போன்ற அரசு நிறுவனங்களுக்கு வழங்க, கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அரசாணைகளை பார்த்து ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்தோம். தமிழக அரசின் வருவாய், பேரிடர் மேலாண்மை துறை செயலர், தங்களின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை விளக்கி, விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இது, அரசின் கொள்கை முடிவாக இருக்கலாம். எக்காரணத்தை முன்னிட்டும் நீர்நிலைகளை வேறு பயன்பாட்டுக்கு அனுமதிக்கக் கூடாது என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
எனவே, அரசின் கொள்கை முடிவாக இருந்தாலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்றால், அதில் நீதிமன்றங்கள் எப்போதும் தலையிடலாம் என உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கின் அடுத்த விசாரணை, வரும் 21ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
0
0