தோற்றால் பதவி போய்டும்,CM ஸ்டாலின் திடீர் எச்சரிக்கை! பீதியில் திமுக அமைச்சர்கள்?…

Author: Udayachandran RadhaKrishnan
26 January 2024, 9:29 pm

தோற்றால் பதவி போய்டும்,CM ஸ்டாலின் திடீர் எச்சரிக்கை! பீதியில் திமுக அமைச்சர்கள்?…

இரு தினங்களுக்கு முன்பு நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில்,
நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வது, முதலமைச்சரின் ஸ்பெயின் நாட்டு பயணம் போன்றவை குறித்து விரிவாக பேசப்பட்டது என்றே முதலில் தகவல்கள் வெளியானது.

வரும் 28ம் தேதி ஸ்பெயினுக்கு புறப்பட்டு செல்லும் ஸ்டாலின் பிப்ரவரி 7ம் தேதிதான் சென்னை திரும்புவார் என்பதால் இடைப்பட்ட
10 நாட்களில் சட்ட ஒழுங்கு தொடங்கி பல்வேறு பணிகளை கவனிக்க வேண்டும். அதற்கு மிகுந்த நம்பிக்கையான ஒருவர் தேவை. அதனால் மகனும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதியை பொறுப்பு முதலமைச்சராக நியமித்துவிட்டு செல்ல அவர் முடிவு செய்திருப்பது தொடர்பாக இதில் பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இந்த விஷயங்கள் தவிர அரசியல் ரீதியாக முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சரவை கூட்டத்தில் நீண்ட ஆலோசனை நடத்தியதும் தற்போது தெரிய வந்துள்ளது. குறிப்பாக நாடாளுமன்ற தேர்தலில் அமைச்சர்கள் எவ்வாறு களப்பணி ஆற்றவேண்டும் என்பது பற்றி அவர் விரிவாகவே பேசியிருக்கிறார்.

அப்போது முதலமைச்சர் மிகுந்த கண்டிப்பும், கறாரும் காட்டியதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

அவர் கூறும்போது,”நாடாளுமன்ற தேர்தலில் கட்சி தொண்டர்களையும், கூட்டணியையும் ஒருங்கிணைத்து வெற்றியை அறுவடை செய்ய வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் நானே போட்டியிடுவதாக நினைத்து நீங்கள் தேர்தல் பணியாற்றவேண்டும். வெற்றி நழுவினால், அமைச்சர் பதவியும் நழுவும். தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் நமக்கு வெற்றி முக்கியம். புதுச்சேரியிலும் நமது கூட்டணி வெற்றி பெற்று நாற்பதும் நமதே என்றாகிட வேண்டும்.

தீர்க்க முடியாத பிரச்னை எதுவென்றாலும் கட்சியின் தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு வரவேண்டும். மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள், தொகுதியில் இருக்கும் கட்சியின் சாதக மற்றும் பாதக அம்சங்கள் குறித்து, தேர்தல் குழுவிடம் ஆலோசிக்கவேண்டும். அமைச்சர்களின் மாவட்டம் மற்றும் பொறுப்பு மாவட்டத்தின் வெற்றித் தோல்விக்கும் அமைச்சர்களே பொறுப்பேற்க வேண்டும்” என்று ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்து இருப்பதாக தெரிகிறது.

திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் இப்படி பேசி இருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏனென்றால் சீனியர் அமைச்சர்களான துரைமுருகன்,
கே என் நேரு,எ வ வேலு, சாத்தூர் ராமச்சந்திரன், ராஜ கண்ணப்பன்,
செஞ்சி மஸ்தான் மற்றும் பொன்முடி போன்றோர் பொதுவெளியில் நடந்து கொள்ளும் விதம் குறித்து கடந்த இரண்டரை ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் ஏராளமான வீடியோ பதிவுகள் வெளியாகி கடுமையான விமர்சனத்தையும் திமுக அரசு எதிர் கொள்ள நேர்ந்தது.

அப்போதெல்லாம் இதை ஸ்டாலின் கண்டு கொண்டதாக தெரியவில்லை. ஒரே ஒருமுறை மட்டும், அதாவது சென்னையில் 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த திமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசும்போது, “அதிக மழை பெய்தாலும் சரி, மழை பெய்யாவிட்டாலும் சரி என்னைத்தான் குறை சொல்வார்கள். பல் முனை தாக்குதல்களுக்கு பதில் சொல்ல கடமைப் பட்டவன் நான். ஒரு பக்கம் திமுக தலைவர் மறு பக்கம், தமிழக முதலமைச்சர். மத்தளத்திற்கு இரண்டும் பக்கமும் அடி என்பது போல் உள்ளது எனது நிலைமை.

இத்தகைய சூழலில் நாள்தோறும் காலையில் நம்மவர்கள் யாரும் எந்த புது பிரச்சினையையும் உருவாக்கி இருக்கக்கூடாதே என்ற நினைப்புடன்தான் கண் விழிக்கிறேன். இது சில நேரங்களில் என்னை தூங்கவிடாமல் ஆக்கியும் விடுகிறது. என்னை மேலும் துன்பப்படுத்தும் வகையில் மூத்தவர்களும், அமைச்சர்களுமே நடந்து கொண்டால் நான் யாரிடம் போய் கூறுவது.

இது முக்கியமான கால கட்டம். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி கொண்டுள்ளது. எனவே யாரும் மெத்தனமாக இருக்க கூடாது..40 தொகுதிகளையும் நாம் கைப்பற்ற வேண்டும்” என்று எச்சரித்து இருந்தார்.

ஆனால் அதன் பிறகும் துரைமுருகன், கே என் நேரு, எ.வ.வேலு, பொன்முடி போன்றவர்கள் பொதுவெளியில் கேலியாக பேசுவதை நிறுத்தவில்லை.

இதை மனதில் வைத்தும், கட்சியின் மாவட்ட மற்றும் உள்ளூர் நிர்வாகிகளிடம் அனுசரித்து செல்லும் போக்கு அமைச்சர்களிடம் அறவே இல்லை என்பதை கேள்விப்பட்டும்தான் நாடாளுமன்றத் தேர்தலில் நமது கூட்டணி வேட்பாளர்களுக்கு நீங்கள் வெற்றியைத் தேடித் தரவில்லை என்றால் உங்களது அமைச்சர் பதவிகள் பறிக்கப்படும் என்று ஸ்டாலின் மீண்டும் ஒருமுறை எச்சரிக்கை விடுத்து இருப்பதாகவே தோன்றுகிறது.

இதேபோல் இன்னொரு காரணமும் கூறுகிறார்கள். சமீபத்தில் திமுக இளைஞரணி தரப்பில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் ரகசிய சர்வேயில் 14 தொகுதிகளில் திமுகவுக்கு பலத்த சவாலை அதிமுக, பாஜக கட்சிகள் அளிக்கும் என்றும் இதில் 10 சிட்டிங் எம்பிக்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் தோல்விதான் கிட்டும் என்றும் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட 12 தொகுதிகளில் திமுகவுக்கான வெற்றி வாய்ப்பு இழுபறி நிலையில்தான் காணப்படுகிறது என்கிறார்கள்.

இதனால்தான் உங்களது மாவட்டங்களில் நமது கூட்டணி வேட்பாளர்கள் யாராவது தோற்றால் உங்களின் அமைச்சர் பதவி பறிக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கடுமை காட்டி இருக்கலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

அதேநேரம் முதல் முறையாக சமூக ஊடகங்களால் தனிப்பட்ட முறையில்
ஸ்டாலின் கிண்டலுக்கு உள்ளாகியும் இருக்கிறார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேச பிரபுவை ஒரு கும்பல் வெட்டி படுகாயப்படுத்திய கொடூர நிகழ்வு பற்றி
முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவம் மிகவும் கண்டனத்திற்குரியது. இதனை ஒரு சிறப்பு நிகழ்வாக
கருதி மருத்துவ சிகிச்சையில் பெறும் அவருக்கு பத்திரிகையாளர் நல வாரியத்தில் இருந்து மூன்று லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்கவும் உத்தரவிட்டு இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் தமிழக காவல்துறை முதலமைச்சர் ஸ்டாலின் வசம்தான் உள்ளது. அப்படி இருக்கும்போது இந்த தாக்குதல் சம்பவம் கண்டனத்திற்குரியது என்று கூறி இருப்பது, அவரே அவருக்கு கண்டனம் தெரிவித்து இருப்பது போல அமைந்துள்ளது என்ற கேலியான விமர்சனத்திற்கும் உள்ளாகி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் ஒரு கொடூரமான தாக்குதல் சம்பவத்தை ஒரு சிறப்பு நிகழ்வு என்று முதலமைச்சர் கூறுவது எப்படி சரியாக இருக்கும்? என்ற இன்னொரு கிடுக்குப் பிடி கேள்வியும் சமூக நல ஆர்வலர்களாக எழுப்பப்படுகிறது.

மாநிலத்தின் முதலமைச்சராக உள்ள, அதுவும் காவல்துறையை தனது முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஸ்டாலின் இந்த தாக்குதல் சம்பவம் வேதனைக்கு உரியது என்றுதான் குறிப்பிட்டு இருக்கவேண்டும். அதேபோல சிறப்பு நிகழ்வு என்பதை கொடூர நிகழ்வு எனக் குறிப்பிட்டு இருக்கலாம். அதுதான் பொருத்தமானதாவும் இருக்கும். முதலமைச்சர், தான் ஊடகங்களுக்காக எழுதிய அறிக்கையை அனுப்பும் முன்பு ஒருமுறை கூர்ந்து கவனித்து படித்து இருந்தால் இப்போது அவர் மீது எழுந்திருக்கும் தேவையற்ற விமர்சனங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும். அல்லது அவருடைய தனி உதவியாளராவது அந்த அறிக்கையை நன்றாக படித்து
இந்த தவறுகளை சுட்டிக் காண்பித்து தவிர்த்திருக்கலாம்.

திமுக அமைச்சர்கள்தான், அவ்வப்போது ஏதாவது ஏடாகூடமாக பேசி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது வழக்கம். ஆனால் இப்போது முதலமைச்சரே அதில் சிக்கிக் கொண்டுள்ளார் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். அதுவும் சரிதான்!

  • Vijay Wishes To Atlee and Baby John Team என் தம்பிக்காக… வாழ்த்திய விஜய் : அட்லீ முதல் வருண் வரை!
  • Views: - 365

    0

    0