‘இசைஞானியுடன் கைகோர்த்த அம்பேத்கர், மோடி’: மதம்,சாதி,மொழி கடந்து இசை நம்மை ஒன்றிணைக்கும்…மதுரையில் பரபரப்பு போஸ்டர்…!!
Author: Rajesh21 April 2022, 7:54 pm
மதுரை: அம்பேத்கர் மற்றும் மோடி இருவரது கரங்களையும் பற்றிக்கொண்டு இளையராஜா நிற்பது போன்ற பாஜகவின் போஸ்டர் வைரலாகி வருகிறது.
சென்னையில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் மோடியும் அம்பேத்கரும் சீர்திருத்தவாதியின் சிந்தனையும் செயல்வீரரின் நடவடிக்கையும் என்ற தலைப்பில் புத்தகம் வெளிவிடப்பட்டது.
இந்த புத்தகத்தில் இசைஞானி இளையராஜா, மோடியின் ஆட்சியின் பல திட்டங்கள் அம்பேத்காரின் சிந்தனையின் அடிப்படையாக கொண்டவை எனவும், பெண்களின் வளர்ச்சியை மையப்படுத்தி நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களை கண்டு அம்பேத்கரே பெருமைபட்டிருப்பார்.
குறிப்பாக மோடியும் அம்பேத்கரும் இருவரும் இந்தியாவிற்காக பல கனவுகளை கண்டவர்கள் என தனது முன்னுரையில் எழுதியுள்ளார். மேலும் மோடியின் தலைமையிலான ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி பயணமும் அம்பேத்காரின் லட்சிய பயணமும் ஒன்றை ஒன்று சந்திக்கும் புள்ளியை பற்றி இந்த நூல் கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இசைஞானி இளையராஜாவின் கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பேசும் பொருளாகியுள்ளது. அவரது கருத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு கட்சியினர் மற்றும் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை மாநகர் முழுவதும் மோடி, அம்பேத்கர் இருவரது கரங்களையும் இளையராஜா பற்றிக்கொண்டு நிற்பது போன்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. மதுரை பாஜக சார்பில் ஒட்டப்பட்டுள்ள அந்தப் போஸ்டரில் “மதம், சாதி, மொழி கடந்து இசை நம்மை ஒன்றிணைக்கும் இளையராஜாவும் கூட,” என கருத்து பதிவிடப்பட்டுள்ளது.
இந்தப் போஸ்டர் தற்போது மதுரை மாநகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.