அரசே மது விற்கும் போது கள்ளச்சாராயம் எப்படி..? காவலர்களை பணிநீக்கம் செய்து தப்பிக்க முடியாது ; பதில் சொல்லியே ஆகனும் ; பாஜக செக்!!

Author: Babu Lakshmanan
15 May 2023, 5:36 pm

தமிழகத்தில் கள்ளச்சாராயத்திற்கு 12 பேர் பலியாகியிருப்பது பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தை அடுத்து, கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள மீனவ கிராமமான எக்கியார் குப்பத்தில், கள்ளச்சாராயம் குடித்ததில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. 30-க்கும் அதிகமானோர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். அதுபோல, செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூரை அடுத்த, பெருங்கரணை பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 4 பேர் பலியாகியுள்ளனர்.

தமிழ்நாட்டில் ஒரே நாளில், கள்ளச்சாராயத்திற்கு 11 பேர் பலியாகியிருப்பது பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமலில் இல்லை. தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனம் நடத்தும் மதுக்கடைகள் எங்கும் நிறைந்திருக்கின்றன. இதனால் தமிழ்நாட்டில் மதுப்பழக்கம் அதிகமாகி ஏராளமான சீரழிவுகள் ஏற்படுகின்றன. விபத்துகளும் அதிகரிக்கின்றன. வளர்ச்சி அடைந்த மாநிலம் என்று நாம் பெருமைப்பட்டுக் கொள்ளும் தமிழ்நாட்டில் தான் இளம் விதவைகள் அதிகம் இருக்கின்றனர். இதற்கு அரசே மதுக் கடைகளையும், மதுபான பார்களையும் நடத்துவது தான் காரணம். இவற்றையெல்லாம் எடுத்துக்கூறி முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று தி.மு.க. அரசை வலியுறுத்தினால், மதுவிலக்கை அமல்படுத்தினால் கள்ளச்சாராயம் அதிகமாகிவிடும். என்று எப்போதும் ஒரு காரணத்தை கூறுவார்கள்.

ஆனால், இப்போது மதுவிலக்கு அமலில் இல்லாத நிலையில், எங்கும் தாராளமாக மது கிடைக்கும் நிலையில், ஒரே நாளில் இரு இடங்களில் கள்ளச்சாராயம் குடித்து 11 பேர் பலியாகி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதற்கு தமிழ்நாட்டை ஆளும் தி.மு.க. அரசும், காவல்துறையும் தான் பொறுப்பேற்க வேண்டும். ஒரு சில காவல்துறை அதிகாரிகளை மட்டும் தற்காலிக பணி நீக்கம் செய்து தப்பித்து விடலாம் என நினைப்பது தவறு. காவல்துறைக்கு பொறுப்பு வைக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

அரசே மது பானங்களை விற்கும் நிலையில், கலாச்சாராயம் காச்சி, விற்கப்படுவது ஏன்? டாஸ்மாக் மது கடைகளில் வாங்காமல், கள்ளச்சாராயம் வாங்குவது ஏன் என்பதற்கான காரணங்களை தமிழக அரசு கண்டறிய வேண்டும். இதற்கு வறுமை மிகமிக முக்கிய காரணம். எனவே கிராமங்களில் வறுமையை போக்க தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சில சுயநல சக்திகள், அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு, அதிகாரத்தில் இருப்பவர்களின் துணையுடன் கள்ளசாராயம் காய்ச்சுவது போன்ற சட்ட விரோத, சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

கள்ளச்சாராயம் காய்ச்சும் சமூக விரோதிகளையும் அவர்களின் பின்னணியில் இருக்கும் அரசியல், அதிகார பலம் கொண்டவர்களை கண்டறிந்து இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். கள்ளச்சாராயம் தொடர்பான வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து, தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் இல்லாத வேலையை உருவாக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் வளர்ச்சி, தமிழ்நாடு மக்களின் அமைதியான வாழ்க்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டு படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் மதுவிலக்கு துறை தான், டாஸ்மாக் மது கடைகளையும் நடத்துகிறது. அத்துறையின் அமைச்சரான செந்தில் பாலாஜி அவர்கள், டாஸ்மாக் மது கடைகளில் விற்பனையை அதிகப்படுத்துவதில் செலுத்தும் கவனத்தை, கள்ளச்சாராயம் இல்லாத நிலையை உருவாக்குவதிலும் காட்டியிருக்க வேண்டும். மதுவிலக்குத் துறையின் அலட்சியம் பொறுப்பின்மையும் தான் கள்ளச்சாராய விற்பனைக்கு காரணம். எனவே கள்ளச்சாராயத்தை அடியோடு ஒழிக்க மதுவிலக்கு துறை கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், என வலியுறுத்தியுள்ளார்.

  • malavika mohanan shared the bad experience when she was 19 year old in mumbai local train ஓடும் ரயிலில் நடந்த கொடூரம்! பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான மாளவிகா மோகனன்? அடக்கடவுளே!