சந்தி சிரிக்கும் சாராயக்கடை சந்து : திமுக அரசுக்கு புதிய தலைவலி!
Author: Udayachandran RadhaKrishnan24 May 2023, 8:20 pm
விழுப்புரம், செங்கல்பட்டு, தஞ்சாவூர் மாவட்டங்களில் கள்ள சாராயம் மற்றும் விஷ மது குடித்த 85க்கும் மேற்பட்டோரில் 25 பேர் பலியான துயரம் தமிழக மக்களின் மனதில் மிக ஆழமாக பதிந்துவிட்ட ஒன்றாகும்.
கள்ளச்சாராய மரணங்கள்
இதனால் முதலமைச்சர் ஸ்டாலினும், மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும் கடுமையான விமர்சனத்திற்கும் உள்ளானார்கள். கள்ளச்சாராயம் தமிழகத்தில் ஆறு போல பெருக்கெடுத்து ஓடுகிறது, ஆனால் அதைக் கட்டுப்படுத்த முடியாமல் திமுக அரசு திணறுகிறது என்று பொதுமக்களே கோபத்துடன் கொந்தளிக்கும் அளவிற்கு நிலைமை மோசமாகியும் போனது.
அதிமுக, பாஜக போன்ற எதிர்க் கட்சிகளோ தமிழகத்தில் மொத்தமுள்ள 6000 டாஸ்மாக் மது பார்களில் 2000 பார்கள் மட்டுமே அரசு உரிமம் பெற்று நடத்தப்படுகிறது. எஞ்சிய 4 ஆயிரம் பார்களும் சட்டவிரோதமாக திமுக நிர்வாகிகளால் நடத்தப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு கிடைக்க வேண்டிய சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஆண்டுதோறும் திமுக தலைவர்களின் குடும்பங்களுக்கு செல்கிறது என்ற குற்றச்சாட்டை முன் வைத்ததுடன் அரசு அனுமதி பெறாமல் நடத்தப்படும் பார்களை உடனடியாக இழுத்து மூடவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியும் வந்தன.ஆனால் இதை முதலமைச்சர் ஸ்டாலின் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.
லேட்டாக விழித்துக் கொண்ட திமுக
இந்த நிலையில்தான் விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நடந்த கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு பின்பு, 10 நாட்கள் கழித்து திமுக அரசு இப்போது திடீரென விழித்துக் கொண்டுள்ளது.
அதுவும் தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் டாஸ்மாக் திறப்பதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பாகவே திறக்கப்பட்டதாக கூறப்படும் அரசு அனுமதி பெற்ற
பாரில் விஷ மது அருந்திய இருவர் பரிதாபமாக உயிரிழந்த பின்புதான் இந்த உறக்க நிலையே நீங்கி இருப்பதுபோல் தெரிகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி திடீர் உத்தரவு
முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டு வருவதற்காக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு பயணமான நிலையில் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மாவட்ட அளவிலான அனைத்து கலால்
துறை துணை மற்றும் உதவி கமிஷனர்களுடன் ஒரு ஆய்வுக் கூட்டத்தை மிக அண்மையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடத்தினார்.
அதில் டாஸ்மாக் கடைகள், மதுபார்கள் செயல்படுவதற்கு அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் திறக்கப்படுகிறதா? மூடப்படுகிறதா? என்றும் மது இல்லா நாட்கள் மற்றும் அரசு மதுபான கடைகளை மூட உத்தரவிட்டுள்ள நாட்களில் கடைகள் மூடப்படுகிறதா? என்பதை கள ஆய்வுகள் மூலம் உறுதி செய்ய வேண்டும் என்றும் செந்தில் பாலாஜி உத்தரவிட்டார்.
அதேபோல கடலோர மாவட்டங்கள் மற்றும் மாநில எல்லையோர மாவட்டங்களில் தொடர்புடைய மாவட்ட கலால் அதிகாரிகள் காவல்துறையினருடன் ஒருங்கிணைந்து காவல் சோதனை சாவடிகளை அமைத்து தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வெளி மாநில மதுபானம் மற்றும் கள்ளச்சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள எடுக்கவேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
கலால் அதிகாரிகளுக்கு கறார் உத்தரவு
இதைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அத்தனை டாஸ்மாக் மது கடைகளுக்கும் அந்தந்த மாவட்ட மேலாளர்கள் மூலம் எச்சரிக்கை விடுத்து ஒரு சுற்றறிக்கையும் அனுப்பி வைக்கப்பட்டது.
அதில்” டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் பார்கள் அரசு நிர்ணயித்த பகல் 12 மணியிலிருந்து இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும்..அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர கடைகள் செயல்படக்கூடாது என்பதை மேற்பார்வையாளர்கள் உறுதி செய்யவேண்டும். டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் உரிமம் இல்லாத சட்டவிரோத மதுபார்கள் செயல்படவும் அனுமதிக்க கூடாது. மதுபானங்களை யாருக்கும் மொத்தமாக விற்பனை செய்யக் கூடாது” என்று கூறப்பட்டிருக்கிறது.
ஒரே மாவட்டத்தில் 75 சட்டவிரோத மதுபார்கள்
அதேபோல டாஸ்மாக் கடைகளில் ஒரு மதுபாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வைத்து விற்பனை செய்வதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாகவும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவு பிறப்பித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
இந்த நிலையில்தான் திருவள்ளூர் மாவட்டத்தில திருத்தணி, கும்மிடிப்பூண்டி
நகரங்களிலும் அதனைச் சுற்றியுள்ள கிராம பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகளுக்கு அருகே சட்ட விரோதமாக 75 மதுபார்கள் செயல்படுவது போலீசாரால்
கண்டறியப்பட்டு அவை அனைத்துக்கும் உடனடியாக சீல் வைக்கப்பட்டது.
இதில் சில இடங்களில் சந்து பொந்து போன்ற இடங்களை கூட விட்டு வைக்கவில்லை. அரசின் அனுமதி பெறாமல் அங்கும் மது பார்களை நடத்தி வந்துள்ளனர், என்பதுதான் கொடுமை.
சர்ச்சையான சயனைடு மரணம்
விழுப்புரம்,செங்கல்பட்டு கள்ளச்சாராய உயிர்ப் பலி சம்பவங்களுக்கு பிறகு உடனடியாக தமிழக மதுவிலக்கு துறைக்கு இதுபோன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் தஞ்சாவூர் அரசு பாரில் இருவர் உயிரிழந்த துயரம் நிகழ்ந்திருக்காது. அவர்கள் மதுவில் சயனைடு விஷம் கலந்து குடித்தார்களா? இல்லையா? என்ற கேள்விக்கும் இடமே இல்லாமல் போயிருக்கும்.
இப்போது அரசு தரப்பில் கூறுவது போல அவர்கள் இருவரும் குடும்ப பிரச்சினை காரணமாக மதுவில் சயனைடு கலந்து சாப்பிட்டார்களா? அப்படியென்றால் அவர்கள் இருவருக்கும் ஒரே நேரத்தில் எங்கிருந்து சயனைடு கிடைத்தது?
எதற்காக அவர்களது குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டது? என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கும் போலீசார் திணற வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்காது” என்று சமூக நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
“திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் ஒரே நாளில் சட்டவிரோதமாக இயங்கி வந்த 75 மதுபார்களுக்கு, சீல் வைக்கப்பட்டு இருப்பதன் மூலம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் கள்ளச்சாராயமும் போலி மதுவும் காவல் துறையினரின் ஆதரவுடன் அமோகமாக விற்பனை ஆகிறது. திமுக நிர்வாகிகளும் அவர்களுடைய ஆதரவாளர்களும் மாநிலம் முழுவதும் நடத்தி வருவதாக கூறப்படும் 4000க்கும் மேற்பட்ட சட்டவிரோத மதுபார்களை போலீசார் கண்டு கொள்வதே இல்லை என்ற குற்றச்சாட்டை அப்படியே ஏற்றுக்கொள்ளும் நிலையும் உருவாகிவிட்டது.
அப்போ 37 மாவட்டங்களில்?..
ஏனென்றால் ஒரேயொரு மாவட்டத்தில் மட்டுமே அரசு அனுமதி பெறாமல் 75 மதுபார்கள் செயல்பட்டு வந்திருக்கிறது என்றால் மாநிலத்தில் மற்ற 37 மாவட்டங்களில் சட்டவிரோத மதுபார்கள் 2500க்கும் மேல் இருக்குமோ என்ற சந்தேகமும் எழுகிறது.
அனுமதி பெறாத இந்தப் பார்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வந்திருக்கலாம் என்று யூகித்தால் குறைந்தபட்சம் அரசுக்கு கிடைக்க வேண்டிய சுமார்
பத்தாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் வாய்ப்பு உண்டு.
அதேநேரம், திருவள்ளூர் மாவட்டத்தில் எடுக்கப்பட்டது போன்ற அதிரடி நடவடிக்கைகளை மாநிலம் முழுவதும் இனி போலீசார் எடுப்பார்களா? என்பது சந்தேகம்தான்.
தப்பி ஓட இதுவும் காரணம்
ஏனென்றால் வெளி மாநில எல்லையையொட்டி அமைந்துள்ள கோவை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருப்பத்தூர் வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் தமிழக அரசின் அனுமதி பெறாமல் டாஸ்மாக் மது பார்களை நடத்தி வந்தவர்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கையை பார்த்து தங்களது பார்களை இந்நேரம் இழுத்து மூடி விட்டு தப்பி ஓடி இருப்பார்கள் என்பது நிச்சயம்.
ஏற்கனவே விழுப்புரம், செங்கல்பட்டு சம்பவங்களுக்குப் பிறகு கள்ளச்சாராயம், போலி மதுபானம் விற்பனை செய்வோர், சாராயம் காய்ச்சுவோரில்
பெரும்பாலானவர்கள் தலைமறைவாகிவிட்ட நிலையில் உரிமம் பெறாமல் மதுபார் நடத்தியவர்களும் தப்பிக்க இதுவும் ஒரு காரணம் ஆகிவிட்டது.
அதனால் தமிழகம் முழுவதும் சொல்லி வைத்தாற் போல ஒரே நேரத்தில் போலீசார் இந்த வேட்டையில் இறங்கி இருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடந்ததாக தெரியவில்லை. எனவே மாநிலம் முழுவதும் உள்ள காவல்துறை உயர் அதிகாரிகளிடம் இதில் ஒருங்கிணைந்த செயல்பாடு இல்லை என்பது உறுதியாகிறது.
சர்ச்சையான சாராயக்கடை சந்து வீதி
இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு புறம், இன்னொரு வேடிக்கையான தகவலும் வெளியாகி இருக்கிறது.
திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சியில் இருபதாவது வார்டு பகுதியில் உள்ள ஒரு தெருவுக்கு சாராயக்கடை சந்து என்ற பெயர் இருப்பதும் மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்ட தெருக்காட்டி பலகையில் அந்தப் பெயரே பயன்படுத்தப்பட்டு வருவதும்
தெரிய வந்துள்ளது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இந்தப் பெயர் அரசு பதிவேட்டிலும் அப்படியே இடம் பெற்று இருப்பதுதான்.
இத்தனைக்கும் திமுகவின் மூத்த அமைச்சர் கே என் நேரு பிறந்த நெய்குளம் கிராமமும், அமைச்சர் அன்பில் மகேஷின் பூர்வீக கிராமமான அன்பிலும் லால்குடி தாலுகாவிற்குள்தான் வருகிறது.
அவர்கள் பிறந்த மாவட்டத்திலேயே இந்த சாராயக்கடை சந்து இருப்பது குறித்த செய்தி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியும் வருகிறது. நீங்கள் நல்ல சாராயத்தை ஒழிக்கிறீர்களோ, கள்ள சாராயத்தை ஒழிக்கிறீர்களோ தெரியாது, 50 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ள இந்த சாராயக்கடை சந்தை முதலில் அகற்றுங்கள்! என்று நெட்டிசன்கள் கலாய்த்தும் வருகின்றனர்!
இதையும் திமுக அரசு கவனத்தில் கொள்ளவேண்டும். ஏனென்றால் எதிர்கால சந்ததியினர் சாராயம் என்பது தமிழகத்தில் சர்வ சாதாரணம் போல என்று கருதிவிடும் நிலை ஏற்பட்டு விடக்கூடாது” என்று அந்த அரசியல் நோக்கர்கள் கவலையோடு கூறுகின்றனர்.
0
0