இன்னும் ஏன் டிஸ்சார்ஜ் ஆகவில்லை…?செந்தில் பாலாஜிக்கு புதிய நெருக்கடி.. தீவிரம் காட்டும் அமலாக்கத்துறை….!

Author: Babu Lakshmanan
1 July 2023, 7:23 pm

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு காரணமாக அரசு போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக 40க்கும் மேற்பட்டோரிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி
ஒரு கோடியே 64 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கூறப்பட்ட வழக்கை அமலாக்கத் துறை தீவிரமாக விசாரித்து வருகிறது.

இது 2011 முதல் 2015 ம் ஆண்டு வரை அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக அவர் பதவி வகித்தபோது, நடைபெற்றதாக கூறப்படும் லஞ்ச வழக்கு. 2018 ம் ஆண்டு முதல் இந்த வழக்கு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் 2021ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அப்படியே மந்த நிலைக்கு போய்விட்டது.

இந்த நிலையில்தான் கடந்த மே மாதம் 16ம்தேதி மத்திய அமலாக்கத் துறையும், சென்னை மத்திய குற்ற பிரிவு போலீசும் இந்த வழக்கை மீண்டும் ஆரம்பத்தில் இருந்து விசாரிக்க எந்த தடையும் இல்லை என்று சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கு விசாரணைக்காக ஆஜராகும்படி செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை இரண்டு முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதனையடுத்து கடந்த மாதம் 13ம் தேதி சென்னையில் உள்ள அவருடைய வீட்டுக்கே சென்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

என்றபோதிலும் அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சரியான பதிலை அளிக்கவில்லை என்பதுடன் விசாரணைக்கு ஒத்துழைப்பும் தரவில்லை என்று கூறி 17
மணி நேரத்துக்கு பின் மறுநாள் செந்தில் பாலாஜி கைதும் செய்யப்பட்டார்.

மேலும் விசாரணைக்காக அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்களது அலுவலகத்திற்கு வாகனத்தில் அழைத்து சென்றபோது தனக்கு நெஞ்சுவலி இருப்பதாக கூறியதை தொடர்ந்து சென்னை ஓமாந்தரார் அரசு மருத்துவமனையில் கடந்த 14ம் தேதி அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு செந்தில் பாலாஜியை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு இதய ரத்த குழாய்களில் மூன்று இடங்களில் அடைப்பு இருப்பதாகவும் இதனால் அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து செந்தில்பாலாஜியின் விருப்பத்தின் பேரில் ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கடந்த 21ம் தேதி அதிகாலை இதயத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது நான்கு இடங்களில் இருந்த அடைப்பு அகற்றப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

இதற்கிடையே சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அவரை முதலில் ஜூன் 28 வரையிலும் பின்னர் இரண்டாவது முறையாக ஜூலை 12ம் தேதி வரையிலும் நீதிமன்ற காவலை நீட்டித்தது.

இந்த நிலையில்தான், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் ஆளுநர் ரவி இதை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் இரண்டு நாட்களுக்கு முன்பு அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்குவதாக ஆளுநர் அதிரடியாக அறிவித்தார். இதற்கு முதலமைச்சரும், அவருடைய சக அமைச்சர்களும் கொந்தளித்தனர். அமைச்சரை நீக்குவதற்கு ஆளுநருக்கு அதிகாரமே இல்லை என்று கடும் கண்டனமும் தெரிவித்தனர்.

அடுத்த சில மணி நேரங்களிலேயே, அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்த உத்தரவை நிறுத்தி வைத்த ஆளுநர் ரவி, இந்த விவகாரத்தில் அட்டர்னி ஜெனரலின் கருத்தை கேட்ட பிறகு எனது முடிவை தெரிவிக்கிறேன் என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதமும் அனுப்பினார்.

அதற்கு முன்பாக முதலமைச்சருக்கு அவர் அனுப்பிய 5 பக்க கடிதம் ஒன்றில் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குமாறு நான் வைத்த வேண்டுகோளை நீங்கள் ஏன் பரிசீலிக்கவில்லை என்று சரமாரியாக கேள்விகளையும் எழுப்பியிருந்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து ஆளுநர் ரவிக்கு ஸ்டாலின் பதில் கடிதம் அனுப்பினாலும் கூட அது ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய செந்தில் பாலாஜியை நான் ஒருபோதும் கைவிட மாட்டேன், அவருக்கு எப்போதும் ஆதரவாகத்தான் இருப்பேன் என்று கூறுவதைப் போல உள்ளது என்ற கேலியான விமர்சனமும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

இது ஒருபுறம் இருக்க, இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட செந்தில் பாலாஜியின் உடல் நலம் இப்போது எப்படி இருக்கிறது என்பது பற்றிய தகவல் புகைப்பட ஆதாரத்துடன் இன்னும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்படாதது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. இது மருத்துவ உலகினரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

ஏனென்றால் நெஞ்சு வலிப்பதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக முதலமைச்சர் ஸ்டாலின் சென்று பார்த்த புகைப்படம் அடுத்த சில நிமிடங்களிலேயே அத்தனை ஊடகங்களுக்கும் அளிக்கப்பட்டது.

ஆனால் அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடந்து 10 நாட்களுக்கும் மேலாகி விட்ட நிலையில் அவர் இப்போது எப்படி இருக்கிறார், நடக்கிறாரா?…என்பதை காட்டும் விதமாக எந்த புகைப்படமும் இதுவரை வெளியிடப்படவில்லை.

இது குறித்து பிரபல மருத்துவரும், விளையாட்டுத்துறை வர்ணணையாளரும், சமூக நல ஆர்வலருமான டாக்டர் சுமந்த் சி ராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு சந்தேகத்தை கிளப்பி இருக்கிறார். அது அனைத்து துறை மருத்துவர்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றாகவே இருக்கிறது.

அந்தப் பதிவில், சுமந்த் சி ராமன் கூறும்போது, “சிக்கலற்ற இதய அறுவை சிகிச்சைசெய்து கொண்ட நோயாளிகள் பொதுவாக அறுவை சிகிச்சைக்குப் பிறகு 7 அல்லது 8 நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டு விடுவார்கள். ஆனால் செந்தில் பாலாஜி அறுவை சிகிச்சைக்கு முடிந்து 10 நாளுக்கும் மேலாகி விட்டது. அவர் மருத்துவமனையில் இருந்து எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்?”என்று ஒரு கேள்வியை எழுப்பி இருக்கிறார்.

அவருடைய இந்த பதிவை பிரபல நடிகையும், சமூக செயற்பாட்டாளருமான கஸ்தூரியும் ரீ ட்விட் செய்துள்ளார்.

இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் டாக்டர் சுமந்த் சி ராமன் கூறுவதை பார்த்தால் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் இருந்த அடைப்பு என்பது அபாயம் இல்லாத ஒன்றுபோல்தான் தெரிகிறது. ஏனென்றால் இந்த அறுவை சிகிச்சை சிக்கலற்றது என்று அவர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

இன்னொன்று 47 வயதாகும் செந்தில் பாலாஜி தினமும் ஒரு மணி நேரத்திற்கும் குறையாமல் நடைப்பயிற்சி செல்பவர் என்பதால் நல்ல திடகாத்திரமான நிலையில் இருந்த அவர் அறுவை சிகிச்சை முடிந்து நான்கைந்து நாட்களிலேயே உடல் நலத்தில் துரித முன்னேற்றம் கண்டிருக்கும் வாய்ப்புகளே அதிகம்.

“அதேநேரம் இதுபோன்ற கேள்விகள் பொதுவெளியில் பரபரப்பாக பேசப்படுவதால் இனி செந்தில் பாலாஜியின் உடல் நலம் குறித்த தகவலை தனியார் மருத்துவமனை நிர்வாகம் புகைப்படங்களுடன் அன்றாடம் வெளியிட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஏனென்றால் நீதிமன்ற காவலில் உள்ள நிலையில் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டால் அமலக்கத்துறை உடனடியாக தங்களது காவலில் எடுத்து விசாரிப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கி விடும். அதை தவிர்ப்பதற்காகவே அவருடைய உடல் நலம் மெல்ல மெல்ல தேறி வருகிறது. அவர் நன்கு குணமடைய இன்னும் ஓரிரு மாதங்கள் ஆகலாம். என்ற அறிவிப்பு இனி வெளிவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

ஆனால் செந்தில் பாலாஜி மீதான சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கு சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி நடந்து வருவதால் அவரை இன்னும் இரண்டு வாரங்களில் தங்கள் விசாரணை வளையத்திற்குள் மீண்டும் கொண்டு வருவதற்கான அத்தனை முயற்சிகளிலும் அமலாக்கத்துறை ஈடுபடும் என்பது நிச்சயம்.

ஏனென்றால் அவருடைய உடல் நலம் பற்றி முழுமையாக எந்தத் தகவலையும் புகைப்படங்களுடன் இதுவரை மருத்துவமனை நிர்வாகம் சார்பிலோ, தமிழக அரசின் தரப்பிலோ வெளியிடப்படவில்லை என்பதை அமலாக்கத்துறை சந்தேகக் கண் கொண்டுதான் பார்க்கிறது” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 493

    0

    0