மன்னிப்பு கேட்டீர்களா? இந்திய மருத்துவ சங்க அதிகாரியிடம் அதிரடி காட்டிய உச்ச நீதிமன்றம்…!!
Author: Sudha7 August 2024, 10:50 am
யோகா குரு ராம்தேவின், ‘பதஞ்சலி’ நிறுவனம் தவறான விளம்பரங்களை வெளியிட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. உச்ச நீதிமன்ற கண்டிப்பை தொடர்ந்து, ராம்தேவ் மற்றும் பதஞ்சலி நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோர் மன்னிப்புக் கேட்டனர்.
இது தொடர்பாக, பி.டி.ஐ.செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் ஆர்.வி.அசோகன், இந்திய மருத்துவ சங்கத்தை உச்ச நீதிமன்றம் விமர்சித்தது துரதிர்ஷ்டவசமானது’ என, கருத்துத் தெரிவித்தார். இந்த செய்தி பல்வேறு நாளிதழ்களில் வெளியானது.
வழக்கு விசாரணையின் போது, நீதிமன்றத்தை ஆர்.வி.அசோகன் விமர்சித்ததற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து தன் பேச்சுக்கு நீதிமன்றத்தில் அவர் மன்னிப்பு கேட்டார்.
ஆயினும் தனிப்பட்ட முறையில் நாளிதழ்களில் அசோகன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அவரது சொந்த நிதியை பயன்படுத்த வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையே, ஆர்.வி.அசோகனின் மன்னிப்பு செய்தி பல்வேறு நாளிதழ்களில் வெளியிடப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில், தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று, நீதிபதிகள் ஹிமா கோஹ்லி, சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது அமர்வு கூறியதாவது: ஐ.எம்.ஏ., தலைவர் ஆர்.வி.அசோகனின் நேர்காணல் இடம்பெற்ற அனைத்து நாளிதழ்களிலும் மன்னிப்பு செய்தி வெளியாகி இருக்க வேண்டும். ஆர்.வி.அசோகனின் நேர்காணல் வெளியான அனைத்து நாளிதழ்களிலும் மன்னிப்பு செய்தி வெளியிடப்பட்டதா? இவ்வாறு அமர்வு கேள்வி எழுப்பியது.
இதற்கு பதிலளித்த ஐ.எம்.ஏ., தரப்பு வழக்கறிஞர், ‘இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். இதையடுத்து வழக்கை வரும் 27ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.