நீட் தேர்வில் ஆள்மாறாட்டமா? முன்கூட்டியே கசிந்த வினாத்தாள்? நடந்தது என்ன? குவியும் கண்டனம்!
Author: Udayachandran RadhaKrishnan6 May 2024, 4:08 pm
நீட் தேர்வில் ஆள்மாறாட்டமா? முன்கூட்டியே கசிந்த வினாத்தாள்? நடந்தது என்ன? குவியும் கண்டனம்!
நாடு முழுதும், 557 நகரங்களில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களில், நேற்று (மே 06) 24 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் சவாய் மதோபூர் என்ற இடத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் நடந்த நீட் தேர்வில் மாணவர்கள் தேர்வு முடியும் முன்னரே வினாத்தாளுடன் வெளியேறினர்.
அதனைத் தொடர்ந்து சுமார் 4 மணி அளவில் கேள்வித்தாள்கள் சமூக ஊடகங்களில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில்,‛‛ராஜஸ்தானில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக பரப்பப்படும் தகவலில் உண்மையில்லை. தேர்வு முடிவதற்கு முன்பே வலுக்கட்டாயமாக வெளியேறிய மாணவர்கள் வினாத்தாளை இணையத்தில் பரப்பினர்.
மேலும் படிக்க: குடிநீர் பஞ்சம்.. தென்னை மரங்களை காப்பாற்ற லாரிகளில் நீர் வாங்கும் விவசாயிகள்.. எஸ்பி வேலுமணி ஆட்சியரிடம் புகார்!
மாலை 4 மணியளவில் தான் வினாத்தாள் பரப்பப்பட்டது. அதற்கு முன்பே தேர்வுகள் துவங்கிவிட்டன” என தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த புகாரில் 2 மருத்துவ மாணவர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவர் அபிஷேக் சர்மா, மருத்துவ மாணவர்களான அமித் ஜாட், ரவிகாந்த மற்றும் சூரஜ் குமார், ராகுல் குர்ஜார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூடுதல் எஸ்.பி அகிலேஷ் குமார் தெரிவித்தார்.
ஏற்கனவே வினாத்தாள் கசிந்ததாக கூறப்பட்ட நிலையில், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்தது அம்பலமாகியுள்ளது. இந்நிலையில் நீட் தேர்வு முறைகேடு குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “நீட் தேர்வு வினாத்தாள் கசிவு என்ற செய்தி 23 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் கனவுகளுக்குச் செய்யும் துரோகம் ஆகும்.
12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேர வேண்டும் என்று கனவு காணும் மாணவர்களாக இருந்தாலும் சரி, அரசு வேலைக்காக போராடும் நம்பிக்கைக்குரிய இளைஞர்களாக இருந்தாலும் சரி, மோடி அரசு அனைவருக்கும் சாபமாகி விட்டது. கடந்த 10 ஆண்டுகளாக பாஜக அரசின் கையாலாகாத்தனத்தை பார்த்து கொண்டிருக்கும் ஒவ்வொரு இளைஞரும் அவரது குடும்பத்தினரும், இப்போது பேசுவதற்கும் ஆட்சியை நடத்துவதற்கும் வித்தியாசம் இருப்பதைப் புரிந்து கொண்டுள்ளனர்.
கடுமையான சட்டங்களை இயற்றுவதன் மூலம் இளைஞர்களை வினாத்தாள் கசிவிலிருந்து விடுவிக்க காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. மாணவர்களுக்கு ஆரோக்கியமான மற்றும் வெளிப்படையான சூழல் உருவாக்குவோம் என்பது எங்கள் உத்தரவாதம் என்று தெரிவித்துள்ளார்.