மீறினால் சட்டப்படி நடவடிக்கை.. எச்சரிக்கை கொடுத்த என்எல்சி : அதிர்ச்சியில் நெய்வேலி விவசாயிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
27 August 2023, 8:01 pm

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்.எல்.சி. இந்தியா நிறுவனம், சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்ட நிலையில், விவசாயிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க என்.எல்.சி. நிர்வாகம் ஒப்புக்கொண்டது.

இதனிடையே பரவனாற்று பாதையில் மொத்தம் உள்ள 12 கிலோ மீட்டர் நீளத்தில், 10.5 கிலோ மீட்டர் நீளத்திற்கான ஆற்றுப்பாதை அமைக்கும் பணி ஏற்கனவே முடிக்கப்பட்டிருந்த நிலையில், மீதமுள்ள 1.5 கிலோ மீட்டர் பகுதியில் பாதை அமைக்கும் பணியை என்.எல்.சி. நிறுவனம் கடந்த மாதம் 26-ந்தேதி தொடங்கியது.

அப்போது அங்கிருந்த விவசாய நிலங்களில் விளைபயிர்கள் அழிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்த போது, விவசாய பயிர்களை அழித்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், என்.எல்.சி. இந்தியா நிறுவனம் பல ஆண்டுகளுக்கு முன்பே நிலங்களை கையகப்படுத்திய நிலையில் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பினர்.

கையகப்படுத்திய நிலங்களில் வேலி அமைக்கப்பட்டதா? எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டதா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அழிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டதோடு, விளை நிலங்களில் பயிர் செய்துள்ள விவசாயிகள் செப்டம்பர் 15-ந்தேதிக்குள் அறுவடையை முடித்து என்.எல்.சி. நிறுவனத்திடம் நிலங்களை ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் என்.எல்.சி. நிறுவனம் கையகப்படுத்திய நிலங்களில், அறுவடை முடிந்த இடங்களில் தற்போது எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த எச்சரிக்கை பலகைகளில், ‘இந்த இடம் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமானது, அத்துமீறி நுழைபவர்கள் தண்டிக்கப்படுவார்கள்’ என்று எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!