எந்த சின்னத்தில் தேர்தலை சந்திப்பது?… திக்கு முக்காடும் நடிகர் கமல்!
Author: Udayachandran RadhaKrishnan22 February 2024, 9:20 pm
எந்த சின்னத்தில் தேர்தலை சந்திப்பது?… திக்கு முக்காடும் நடிகர் கமல்!
நடிகர் கமல்ஹாசன், சினிமா கிளைமாக்ஸ் காட்சிகளில் எத்தகைய சோதனைகள் வந்தாலும் அதையெல்லாம் துவம்சம் செய்து வில்லன்களை வீழ்த்தும் காட்சிகளில் தூள் கிளப்புபவர் என்பது திரைப்பட ரசிகர்களுக்கு நன்கு தெரியும்.
அதேநேரம் அவரது அரசியல் வாழ்க்கையிலோ இதற்கு முன்பு எப்போதும் சந்திக்காத அளவிற்கு அவருக்கு பல்வேறு நெருக்கடிகள். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது? எந்த தொகுதியில் போட்டியிடுவது? எந்த சின்னத்தில் களம் இறங்குவது? என்னும் பல கேள்விகள் ஒரே நேரத்தில் எழுந்து நடிகர் கமலை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியும் விட்டுள்ளது.
இதற்கு முக்கிய காரணம், திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடவேண்டும் என்ற விருப்பத்தை அவருடைய மக்கள் நீதி மய்யம் வெளிப்படையாக அறிவித்ததுதான். இதனால் திமுகவின் தொகுதி பங்கீட்டு குழு தன்னை உடனடியாக அழைத்துப் பேசி கோவை,தென் சென்னை தொகுதிகளை ஒதுக்கிவிடும் என்று கமல் கணக்கு போட்டார்.
ஆனால் திமுகவோ அவரைக் கண்டு கொள்ளவே இல்லை. மாறாக திமுக சின்னத்தில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் சம்மதித்தால் கமலுக்கு, அவர் கேட்கும் இரண்டு தொகுதிகளையும் ஒதுக்குகிறோம் என்று மறைமுகமாக நிபந்தனை விதித்தது. இதை அவர் ஏற்காவிட்டால் காங்கிரசுக்கு ஒதுக்கும் தொகுதிகளில் ஒன்றை கூடுதலாக தருகிறோம். ராகுல் காந்தியிடம் அதை கமல் உறுதி செய்து தேர்தலை சந்திக்கட்டும்
என கறாராகவும் கூறிவிட்டது என்கிறார்கள்.
இதனால் காங்கிரசிடம் ஓரிரு தொகுதிகளை பெற்றுக் கொண்டு தலைமை தேர்தல் ஆணையத்திடம் போராடி வாங்கிய டார்ச் லைட் சின்னத்தில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடலாம் என்று கமல் ஆசைப்பட்டார். ஆனால் காங்கிரசுக்கு திமுக எத்தனை தொகுதிகளை ஒதுக்கப் போகிறது என்பதற்கான விடையே இன்னும் தெளிவாக கிடைக்கவில்லை. ஐந்து அல்லது ஆறு சீட்டுகள்தான் ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இதில் கமல்ஹாசனுக்கு ஒரு தொகுதியை கொடுத்து விட்டால் நமது நிலைமை இன்னும் மோசம் ஆகிவிடும் என்று தமிழக காங்கிரஸ் நினைத்ததோ, என்னவோ தெரியவில்லை. நீங்கள் கை சின்னத்தில் போட்டியிடுவதாக இருந்தால் உங்களுக்கு ஒரு தொகுதியை கண்டிப்பாக ஒதுக்கி தருகிறோம் என்று கூறிவிட்டது. இதனால் கமல் எந்த சின்னத்தில் போட்டியிடுவார்? என்ற கேள்வியும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இதற்கான விடையை மக்கள் நீதி மய்யத்தின் ஏழாம் ஆண்டு தொடக்க விழாவில் கமல் வெளிப்படுத்துவார் என்று நினைத்தால் எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
ஏனென்றால், 2018-ம் ஆண்டு மக்கள் நீதி மய்யத்தை அவர் தொடங்கியபோது அவருடைய கட்சி ஊழலுக்கு எதிராக போராடுவதில் மிகவும் தீவிரமாக செயல்படும். தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாற்றாகவும் அமையும் என்று முழக்கமிட்டு இருந்தார். இதற்காக ஒரு டிவி பெட்டி மீது டார்ச் லைட்டை கோபத்துடன் வீசி உடைப்பது போல ஒரு விளம்பரத்தில் நடித்து பரபரப்பையும் ஏற்படுத்தினார்.
ஆனால் இப்போதோ திமுக ஆதரவு என்கிற ஒரே நிலைப்பாட்டில் நடிகர் கமல் இருப்பது அப்பட்டமாக தெரிகிறது. மேலும் கட்சித் தொண்டர்கள் மத்தியில் கமல் பேசும் போது அவரிடம் கடும் கோபமும் வெளிப்பட்டது.
“அரசியல் களத்திற்கு நான் கோபத்தில் வந்தவன் அல்ல. சோகத்தில் வந்தவன். நீங்கள் சினிமாவில் நடிக்கப் போய் விடுகிறீர்களே முழு நேர அரசியல்வாதி கிடையாதே?என்று கேட்கின்றனர். முழு நேர அரசியல்வாதி என்று எவனும் இல்லை. முழு நேர அப்பனும் கிடையாது.முழு நேர கணவனும் கிடையாது. முழு நேரப் பிள்ளையும் கிடையாது. சினிமாவில் மக்கள் கொடுத்த அன்பிற்கு வட்டியை திரும்ப கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் அரசியலுக்கு வந்திருக்கிறேன்.
தேர்தலில் ஒரு வேட்பாளர் 95 லட்ச ரூபாய் செலவு செய்யலாம் என்று தேர்வு கமிஷன் சொல்கிறது. அப்படி செலவு செய்தால் கோவை தெற்கு தொகுதி நிலைதான் ஏற்படும். அந்தத் தொகுதியில் நான் ஆயிரத்து 778 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தேன். அங்கே 90 ஆயிரம் பேர் ஓட்டு போடவில்லை. நாடு முழுவதும் இப்படி 40 சதவீதம் பேர் ஓட்டு போடுவதே கிடையாது. 95 லட்ச ரூபாய் மட்டும் தேர்தலில் செலவு செய்தால் நேர்மையானவர்கள் வெற்றி பெற முடியாது.
நாட்டைப் படை எடுக்கும் எதிரிகள் போல் டெல்லியில் விவசாயிகள் வரவேற்கப்படுகிறார்கள். விவசாயிகளை வரவேற்க சாலைகளில் ஆணிகளை பதித்து வைத்துள்ளனர். தமிழகத்தில் விவசாயிகளை மதித்துக் கொண்டிருக்கிறோம். இந்த வித்தியாசம் அண்ணா காலத்திலிருந்தே தெரிந்து கொண்டே இருக்கிறது.
தெற்கு தேய்ந்தாலும் பரவாயில்லை என்று நினைக்கும் அரசு மத்தியில் உள்ளது. அது தவறு.
எல்லாவற்றிற்கும் சமமான உரிமை இருக்கவேண்டும். நாடே அப்படித்தான் இருக்கவேண்டும். ஏழ்மை நிரந்தரம் கிடையாது. ஓட்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் நீங்கள் வாங்கினால் நீங்கள் இழக்கப் போவது 50 லட்சம் ரூபாய்” என்று மனம் குமுறி இருக்கிறார்.
நடிகர் கமல் முதல் முறையாக அனைவருக்கும் புரியும் படியாக தெளிவாக பேசி இருக்கிறார் என்பதுதான் இதில் ஹைலைட். என்றபோதிலும் அவர் கூறும் கருத்துகளில் பல முரண்பாடுகள் இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.
யாரும் முழு நேர அரசியல்வாதி கிடையாது என்கிறார், அது ஓரளவுக்கு ஏற்புடைய ஒன்றுதான். ஏனென்றால் அவருடைய வாதத்தின்படி பகுதி நேரமாகத்தான் அனைவருமே அரசியலில் ஈடுபடுகிறார்கள் என்று அர்த்தம் ஆகிறது. ஆனால் நடிகர் கமல்ஹாசனோ கடந்த ஆறு ஆண்டுகளில் பகுதி நேர அரசியல்வாதியாக கூட செயல்படவில்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை. ஒன்று சினிமா சூட்டிங்கில் பிஷியாக இருப்பார். அல்லது பிக் பாஸ் வீட்டுக்குள் இரண்டு மாதங்கள் முடங்கி கிடப்பார்.
ஊழலுக்கு எதிரான அவருடைய அரசியல் ஆர்வத்தை கண்டு வியப்படைந்த கோவை டாக்டர் மகேந்திரன், சமூக ஆர்வலர் பத்மப்பிரியா இருவரும் 2021 தமிழக தேர்தல் முடிந்த பிறகு மக்கள் நீதி மய்யத்தில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டு திமுகவில் இணைத்துக் கொண்டனர். இதற்கு முக்கிய காரணம் நடிகர் கமல் பகுதிநேர அரசியல்வாதியாக கூட செயல்படவில்லை என்பதும், ஊழலை எதிர்த்து அவரால் அரசியல் செய்யவே முடியாது என்பதும்தான். இதை கமல் இதுவரை உணர்ந்து கொண்டதாக தெரியவில்லை.
டெல்லியில் விவசாயிகளுக்கு எதிரான போராட்டத்தை முறியடிக்க மத்திய பாஜக அரசு கடுமையான நடவடிக்கை எடுப்பதாக கமல் மிகுந்த கவலைப்படுகிறார். அதேநேரம்
தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மேல்மா பகுதியில் சிப்காட் விரிவாக்கத்திற்காக விவசாய நிலம் கையகப்படுத்துவதை கண்டித்து திமுக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய 7 விவசாயிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டபோது கமல் அவருக்காக குரல் கொடுக்கவே இல்லை. அப்போது அவர் எங்கே இருந்தார் என்பதும் தெரியவில்லை. இத்தனைக்கும்
7 விவசாயிகள் மீது ஒரே நேரத்தில் குண்டர் சட்டம் பாய்ந்தது, தமிழகத்தில் அதுதான் முதல் முறை.
சென்னை அருகே பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களை திமுக அரசு கையகப்படுத்தக் கூடாது என்ற கோரிக்கையை முன் வைத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதாவது கமலுக்கு தெரியுமா? தெரியாதா? என்ற கேள்வியும் எழுகிறது.
அதேபோல 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக அதிமுக ஆட்சியில் இருந்த போது தனது குரலை ஓங்கி ஒலித்த நடிகர் கமல் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு அப்படியே பெட்டிப் பாம்பாக அடங்கி போய்விட்டார் என்பது அனைவருக்கும் நன்றாகவே தெரியும்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்களின் குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட கொடிய நிகழ்வு நடந்து ஒரு வருடங்களுக்கு மேலாகியும் மக்கள் நீதி மய்யம் எந்த குரலும் கொடுக்கவில்லை.
சேலம் மாவட்டம் திருமலைகிரி கிராமத்தில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அம்மன் கோவிலில் சாமி கும்பிட சென்ற பட்டியலின வகுப்பு இளைஞர் ஒருவர் சமூக நீதி பேசும் திமுக ஒன்றிய செயலாளர் ஒருவரால் ஆபாசமாக பேசி விரட்டியடிக்கப்பட்ட வீடியோ காட்சி வைரலாகி தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த காட்சி கமலின் கண்களில் பட்டதா என்பதும் தெரியவில்லை.
அதேபோல நாங்குநேரியில் நள்ளிரவில் வீடு புகுந்து பட்டியலின மாணவன், அவனது தங்கை இருவரையும் சாதிய வன்மம் கொண்ட மாணவர் கும்பல் ஒன்று வெட்டிச் சாய்த்து படுகாயப்படுத்தியது. இதையும் மக்கள் நீதி மய்யம் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.
விசிக தலைவர் திருமாவளவன் போல ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாவலன் என்று தன்னையும் அடையாளப்படுத்திக் கொள்ளும் நடிகர் கமல் இது போன்ற விவகாரங்களில் இதுவரை மௌனமே காக்கிறார். அதேநேரம் எங்கள் கட்சி கடந்த ஆறு ஆண்டுகளாக ஆக்டிவ் அரசியலில் தான் ஈடுபட்டு வருகிறது என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறார்.
ஆனால் கோவை தெற்கு தொகுதியில் பாஜக தலைவர் வானதி சீனிவாசனிடம் தோல்வி கண்டது மட்டும் இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் நடிகர் கமலின் மனதை விட்டு அகழாமல் அப்படியே இன்னும் பசுமையாக பதிந்து இருக்கிறது.
தேர்தல் கமிஷன் 95 லட்ச ரூபாய் செலவு செய்ய அனுமதிக்கிறது. ஆனால் அதைவிட அரசியல் கட்சிகள் பல மடங்கு அதிகமாக செலவு செய்கின்றன என்று அவர் மறைமுகமாக குற்றம் சாட்டுகிறார். அதுமட்டுமின்றி கோவை தெற்கு தொகுதியில் 90 ஆயிரம் பேர் ஓட்டு போடவில்லை. அதுவும் தனது தோல்விக்கு ஒரு காரணம் என்று இப்போது சொல்கிறார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்காக திமுக 300 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்ததாக கூறப்படுவது குறித்து கமலுக்குத் தெரியாதா, என்ன?…
ஒருவேளை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதியில் நடிகர் கமல் போட்டியிட்டு தோல்வி கண்டால் மீண்டும் இதுபோன்ற குற்றச்சாட்டை அவர் கூறுவார் என்பது நிச்சயம். அதனால் தமிழகத்தில் மட்டும் அல்ல அவர் நாடு முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வாக்காளர்களிடம் 100 சதவீத ஓட்டுப் பதிவு நடப்பதற்கான முயற்சிகளை தீவிரமாக மேற்கொள்ளவேண்டும்.
ஏனென்றால் ராகுல் காந்திக்கு மிகுந்த நெருக்கம் என்பதாலும், நாடு முழுவதும் அறியப்பட்ட பல மொழிகள் பேசும் ஆற்றல் பெற்ற பிரபல நடிகர் என்பதாலும் கமலை காங்கிரஸ் கட்சி வடமாநிலங்களில் தேர்தல் பிரச்சாரத்திற்காக அழைப்பதற்கான வாய்ப்புகள் நிறையவே உண்டு. எனவே இந்த நல்ல சந்தர்ப்பத்தை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நழுவ விட்டுவிடக் கூடாது” என்பதே சமூக நல ஆர்வலர்களின் விருப்பமாக உள்ளது.
நடிகர் கமல் இதை ஏற்றுக் கொள்வாரா? என்பதற்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும்!