கணக்கில் வராத ரூ.3000 கோடி.. தமிழகத்தை உலுக்கிய சார் பதிவாளர் அலுவலகங்கள்.. வருமான வரித்துறை கிடுக்குப்பிடி..!!
Author: Babu Lakshmanan5 July 2023, 4:57 pm
திருச்சி ; திருச்சி மற்றும் சென்னையில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் விடிய விடிய சோதனையில், ரூ.3000 கோடி கணக்கில் வராமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருச்சி உறையூர் அடுத்துள்ள மருதாண்டா குறிச்சி பகுதியில் செயல்பட்டு வரும் சார்பதிவாளர் அலுவலகத்தில் திருச்சி, மதுரை, சேலம், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 15க்கு மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் 4 வாகனத்தில் வந்து நேற்று முதல் விடிய விடிய 20 மணி நேரத்திற்கு மேலாக துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் சோதனை மேற்கொண்டனர்.
கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இது நாள் வரை சுமார் 30 லட்சத்திற்கு மேலாக யாரெல்லாம் பத்திரப்பதிவு செய்துள்ளனர். அப்படி பத்திரப் பதிவு செய்தவர்கள் சரியான முறையில் பத்திரபதிவு செய்துள்ளார்களா..? உரிய வருமான வரி கட்டி உள்ளார்களா…? என்பதான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், 50 லட்சத்திற்கு மேல் மேல் பதிவு செய்தவர்கள் குறைந்த அளவுகளுக்கு கணக்கு காட்டி உள்ளார்களா..? என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.
இதேபோல, திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் முடிவில் கணினி மற்றும் பதிவில் உள்ள தகவல்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர். நேற்று தொடங்கிய இந்த ஆய்வு இன்று காலை 8 மணி அளவில் நிறைவு பெற்றது.
இந்த நிலையில், சென்னை, திருச்சி சார்பதிவாளர் அலுவலகங்களில் நடந்த வருமான வரி சோதனையில் ரூ.3000 கோடிக்கு மேல் கணக்கு காட்டாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் ரூ.2,000 கோடியும், திருச்சி உறையூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1,000 கோடி பத்திர பதிவுகளுக்கு கணக்கு காட்டப்படவில்லை என தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.