திமுகவினரால் தாக்கப்பட்ட வருமான வரித்துறை அதிகாரி காயத்ரி…? முன்பு தமிழகத்திற்கு பெருமை சேர்த்த வீராங்கனை..? யார் இவர்..?

Author: Babu Lakshmanan
26 May 2023, 9:48 pm

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்களில் காலை முதல் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, அமைச்சருக்குச் சொந்தமாகச் சென்னை, கோயம்புத்தூர், கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருக்கும் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அது மட்டுமல்லாமல், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் என்பவரது கரூர் வீடு மற்றும் அலுவலகங்களில் 10க்கும் மேற்பட்ட வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொள்கின்றனர்.

இந்த சோதனைக்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், கரூர் ராமகிருஷ்ணபுரத்திலுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரரான அசோக்குமார் வீட்டில் சோதனை செய்ய சென்ற அதிகாரிகள் மீதும், அவர்களின் வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இந்தக் களேபரத்தில் பெண் அதிகாரி காயத்ரியை திமுகவினர் தாக்கியதாகவும், தகாத வார்த்தைகளில் திட்டியதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் தி.மு.க-வினர், அதிகாரிகள் தங்களைத் தாக்கியதாகக் குற்றம்சாட்டியிருக்கின்றனர். இதில் காயமடைந்ததாக சொல்லப்படும் காயத்ரி உள்ளிட்ட நான்கு அதிகாரிகளும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, தி.மு.க.வினரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண் அதிகாரி காயத்ரியின் பின்னணி தற்போது வைரலாகி வருகிறது. அவர் தமிழகத்திற்காக தடகளத்தில் பல்வேறு சாதனைகளைப் படைத்து பெருமை சேர்த்திருப்பது தெரிய வந்துள்ளது.

ஏழ்மையான குடும்பப் பின்னணியைக்கொண்ட காயத்ரி அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். பள்ளியில் படிக்கும் காலத்திலேயே தடகளப் போட்டிகளில் ஆர்வத்துடன் திகழ்ந்த இவர், 16 வயதினருக்கான தடை தாண்டுதலில் தங்கமும், 2016ம் ஆண்டு நடந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 100 மீட்டர் தடை தாண்டுதலில் தங்கமும் வென்று பெருமை சேர்த்துள்ளார்.

அதேபோல, புனேவில் 2008ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் இளையோர் விளையாட்டுப் போட்டியில் 100 மீட்டர் தடை தாண்டுல், மும்முறைத் தாண்டுதல் உள்ளிட்ட விளையாட்டுகளில் வெள்ளிப் பதக்கம் வாங்கி அசத்தியுள்ளார். 100 மீட்டர் தடை தாண்டுதல் போட்டியில் 13:59 விநாடிகளிலும், மும்முறைத் தாண்டுதல் போட்டியில் 13:48 விநாடிகளும் இவரது சிறந்த ஓட்டமாகும்.

இப்படி தடகளத்தில் பேர் போன காயத்ரி வருமான வரித்துறை அதிகாரியாக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். தற்போது, விளையாட்டுப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், திமுகவினரால் தாக்கப்பட்டதால் மீண்டும் கவனம் பெற்றுள்ளார்.

  • sivakarthikeyan movie cameraman ravi k chandran had chest pain திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி; சிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்கில் நடந்த திடீர் சம்பவம்!