தமிழகத்தில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு… அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
28 September 2023, 5:53 pm

தமிழகத்தில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு… அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!!!

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று தூத்துக்குடியில் மருத்துவ ஆய்வுகளை செய்து வருகிறார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து தமிழகத்தில் தற்போது உள்ள டெங்கு காய்ச்சல் நிலவரம், அதன் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசினார்.

அவர் கூறுகையில், ஒவ்வொரு வருடமும் பருவமழை காலத்தின் போது, டெங்கு காய்ச்சல் என்பது பொதுமக்கள் மத்தியில் பரவி வருகிறது. இந்த டெங்கு காய்ச்சல் உருவாவதற்கு முக்கிய காரணம் ஏடிஎஸ் கொசு ஆகும்.
இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. சுகாதாரத்துறை ஊழியர்கள் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த டெங்கு பாதிப்பானது கடந்த 2012இல் 13000 பேர் டெங்குவால் பாதிப்படைந்தனர். அப்போது 26 உயிரிழப்புகள் நேர்ந்தன. அதே போல, 2017 காலகட்டத்தில் 23000 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். அதில் 65 பேர் உயிரிழந்தனர். ஆண்டுதோறும் இந்த டெங்கு பாதிப்பானது 6000, 7000 என உள்ளது.

ஆனால் , கடந்த ஆண்டும் சரி, இந்தாண்டும் சரி டெங்கு பாதிப்பு என தமிழக அரசின் தீவிர நடவடிக்கை காரணமாக வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை 4,454 பேர் டெங்குவால் பாதிப்படைந்துள்ளனர்.

அதில் தற்போது 390 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 3 உயிரிழப்புகள் டெங்குவால் ஏற்பட்டுள்ளது என தமிழகத்தில் டெங்கு நிலவரம் பற்றி அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

அடுத்து மருத்துவ துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவது பற்றி பேசுகையில், தமிழகத்தில் 1021 மருத்துவ பணியிடங்கள், 983 மருந்தக ஊழியர், 1066 சுகாதார ஆய்வாளர்கள் பணியிடங்கள் உள்ளன.
இதில் கொரோனா காலத்தில் பணியாற்றிய களப்பணியாளர்களுக்கு கூடுதல் 5 மதிப்பெண் கொடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதேபோல, சிறப்பு மதிப்பெண் கொடுக்க கூடாது என சில மருத்துவர்கள் நீதிமன்றத்தை முறையிட்டார்கள் அவர்களுக்கு சாதகமாகவும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட்டதால், தற்போது மருத்துவ பணிகளுக்கு ஆட்களை நிரப்புவதில் சிறு சிக்கல் ஏற்பட்டுள்ளது. விரைவில் இந்த பிரச்னை தீர்க்கப்படும்.

நேற்று, 10205 பேருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு பணிகக்கான ஆணைகளை வழங்கினார். அதில் 571 பேர் சுகாதாரதுறையினை சேர்ந்தவர்கள். அதே போல மீண்டும் சுகாதாரத்துறை காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மருத்துவத்துறையில் 30 சதவீத காலிப்பணியிடங்கள் காலியாக உள்ளன. நீதிமன்ற தீர்ப்பு விவகாரம் சரி செய்யப்பட்டதும் உடனடியாக மருத்துவத்துறை காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 408

    0

    0