நீட் தேர்வுக்கு தமிழகத்தில் அதிகரிக்கும் ஆதரவு! அதிர்ச்சியில் திமுக அரசு!
தமிழகத்தில் ஆண்டுதோறும் நீட் தேர்வை எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளாக படிப்படியாக அதிகரித்து வருகிறது. அதேபோல தேர்ச்சி பெறுவோரின் எண்ணிக்கையும் வேகம் எடுத்து இருப்பது தமிழக மாணவர்கள் எத்தகைய சவாலான போட்டித் தேர்வுகளையும் கண்டு அஞ்சுபவர்கள் அல்ல என்ற எதார்த்த உண்மையை வெளிப்படுத்துவதாகவும் அமைந்து உள்ளது.
இது, தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று முழக்கமிட்டு மாணவர்களை குழப்பி வரும் சில அரசியல் கட்சிகளிடையே பெரும் அதிர்வலையையும் ஏற்படுத்தி இருப்பதும் நிஜம்!
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப்படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நடத்தப்படும்
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் 2020-21ம் ஆண்டு நீட் தேர்வை எழுத சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் மாணவ மாணவிகள் விண்ணப்பித்ததில் சரியாக ஒரு லட்சம் பேர் தேர்வை எழுதினர். 2021-22-ல் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் ஒரு லட்சத்து 8 ஆயிரம் பேர் ஆர்வமுடன் தேர்வை எழுதினர்.
2022-23ம் ஆண்டு ஒரு லட்சத்து 43 ஆயிரம் பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இவர்களில் ஒரு லட்சத்து 32 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வை எழுதியதில்
67 ஆயிரத்து 787 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 51.28 ஆகும்.
இதேபோல் தமிழகத்தில் கடந்த 2023-24ம் ஆண்டு சுமார் ஒரு லட்சத்து 49 ஆயிரம் பேர் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 1 லட்சத்து 44 ஆயிரத்து 516 பேர் தேர்வை எழுதி 78 ஆயிரத்து 693 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 54 சதவீத தேர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அரசு பள்ளிகளில் படித்த 12 ஆயிரத்து 997 மாணவ, மாணவிகள் நீட் தேர்வை எழுதினார்கள். இதில் 3,982 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 31 சதவீத தேர்ச்சி ஆகும். மேலும் முந்தைய ஆண்டை விட 4 சதவீதம் பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றனர்.
இது தவிர சென்ற ஆண்டு தேசிய அளவில் முதலிடத்தை தமிழகத்தை சேர்ந்த பிரபஞ்சன் என்ற மாணவர் 720க்கு 720 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார். தரவரிசையில் முதல் 50 இடங்களில் 6 இடங்களையும் தமிழக மாணவர்களே பெற்றனர்.
இது வரலாற்று சாதனையாகும்.
அதேபோல் 7.5 ததவீத உள் ஒதுக்கீட்டுக்கு முன்பு கடந்த 2018-ம் ஆண்டு தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 5 பேர் மட்டுமே எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பில் சேர்ந்தனர். 2019-ம் ஆண்டு 6 பேருக்குத்தான் சீட் கிடைத்தது.
ஆனால் முந்தைய அதிமுக அரசு கொண்டு வந்த 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மூலம் 2021-22ம் ஆண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு 550 பேருக்கு மருத்துவ மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் சேர வாய்ப்பு கிடைத்தது. கடந்த மூன்று ஆண்டுகளில் படிப்படியாக உயர்ந்து இது 600 என்ற அளவிற்கு அதிகரித்து உள்ளது.
மேலும் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் கட்டப்பட்டு 2022 ம் ஆண்டு திமுக ஆட்சியில் பிரதமர் மோடி திறந்து வைத்த 11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1300க்கும் மேற்பட்ட இடங்களில் அரசு பள்ளி மாணவர்கள் கூடுதலாக 150 பேர் வரை எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவம் சேர்ந்து படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் கடந்த மூன்று வருடங்களில் மட்டும் 2000 அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு காரணமாக மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் இன்று நடந்த நீட் தேர்வை எழுதுவதற்கு நாடு முழுவதும் 24 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 210 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
“இப்படி ஆண்டுக்கு ஆண்டு தமிழகத்தில் நீட் தேர்வை எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை 7 முதல் பத்தாயிரம் வரை அதிகரித்து வருவது நல்லதொரு அறிகுறியாகும்” என்று கல்வியியல் அறிஞர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
“தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீடு கொண்ட சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் 6226 எம்பிபிஎஸ். இடங்களும், பல் மருத்துவ கல்லூரிகளில் 1767 இடங்களும் உள்ளன. இது மருத்துவம் படிக்க விரும்பும் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மிகவும் மகிழ்ச்சி தரும் விஷயமாக இருக்கிறது. இதனால் நீட் தேர்வில் ஓரளவு நல்ல கட் ஆப் மதிப்பெண் எடுத்தால் கூட போதும், தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளில் நிச்சயம் தங்களுக்கு சீட் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை வலுவாக வேரூன்றி விட்டது.
அதனால்தான் ஆண்டுதோறும் நீட் தேர்வை எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் படிப்படியாக அதிகரித்து வருகிறது. அத்தேர்வு ரத்து ஆகுமா? ஆகாதா?… என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் பிளஸ் டூ பாட புத்தகங்களின் அடிப்படையில் கேள்விகள் ட்விஸ்ட் செய்து கேட்கப்படுவதால் தினமும் 6 மணி நேரம் பாடத்தை கூர்ந்து கவனித்து படித்தாலே போதும், மருத்துவ படிப்பில் சேருவதற்கு தேவையான கட் ஆப் மதிப்பெண்களை பெற்று விட முடியும் என்ற தன்னம்பிக்கையும் அவர்களிடம் பிறந்துள்ளது.
குறிப்பாக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு அவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வர்ப்பிரசாதமாக அமைந்துவிட்டது. இதனால் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை விட நம்மாலும் நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றுவிட முடியும் என்று நம்புகிறார்கள். எனவே இதை அரசியலோடு கலந்து விடாமல் நீட் தேர்வு எழுத விரும்பும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு கூடுதல் சிறப்பு பயிற்சி வகுப்புகளை இன்னும் அதிகமாக்கி பெரிய அளவில் அவர்களைத் தயார் படுத்த வேண்டும்” என்று அந்த கல்விவியல் அறிஞர்கள் வலியுறுத்துகின்றனர்.
அரசியல் சட்ட வல்லுநர்களின் பார்வையோ இதில் வேறு மாதிரியாக உள்ளது. “மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்படும் என்று கூறப்பட்டாலும் கூட அது சாத்தியப்படுமா என்பது மிகப்பெரிய கேள்விதான். ஏனென்றால் 2017ம் ஆண்டு, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரும் வழக்கில்தான், அப்படி ஒரு மாநிலத்திற்கு என்று மட்டும் தனிப்பட்ட முறையில் சிறப்பு சலுகை எதுவும் அளிக்க முடியாது. எனவே நீட் தேர்வு சட்டப்படி செல்லும் என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு வழங்கியது.
ஒருவேளை மத்தியில் இண்டியா கூட்டணியின் ஆட்சி அமைய நேர்ந்தாலும் கூட தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து உடனடியாக விலக்கு கிடைத்து விடும் என்று உறுதியாக கூற முடியாது. யாராவது இதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்றால் தீர்ப்பு சாதகமாக வருமா? என்பதும் கேள்விக்குறிதான். இது போன்ற குழப்பமான நிலையை மருத்துவம் பயில விரும்பும் தமிழக மாணவர்கள் நன்கு புரிந்துகொண்டு விட்டனர்.
மேலும் நீட் தேர்வை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக ரத்து செய்வோம் அந்த ரகசியம் எங்களுக்கு மட்டுமே தெரியும் என்று 2021ம் ஆண்டு தமிழக தேர்தலில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி பிளஸ் டூ மாணவர்களுக்கு வாக்குறுதியும் அளித்தார். ஆனால் அந்த ரகசியம் என்ன என்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை.
அதனால் மாணவர்களுக்கு திமுக அளித்த நீட் தேர்வு ரத்து என்ற வாக்குறுதி கானல் நீர் போலவே ஆகிவிட்டது. அதை இனியும் நம்பிக் கொண்டிருந்தால் கதைக்கு உதவாது என்பதால்தான் கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகத்தில் நீட் தேர்வை எழுத விரும்பும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ- மாணவிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் கணிசமாக அதிகரித்து வருகிறது. இதுதான் எதார்த்தமான உண்மை” என்று
அந்த அரசியல் சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இவர்கள் சொல்வதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது!
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.