I.N.D.I.A.-வின் பிரதமர் வேட்பாளர் யார்…? திமுகவின் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டுமா..?
Author: Babu Lakshmanan22 July 2023, 9:14 pm
பெங்களூருவில் கடந்த 17, 18ம் தேதிகளில் நடந்த எதிர்க்கட்சிகளின் இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டத்துக்கு பின்பு திமுக, மார்க்சிஸ்ட், சமாஜ்வாடி, ஆம் ஆத்மி, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகளின் தலைவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுவது, வெளிப்படையாகவே தெரிகிறது.
அதிலும் குறிப்பாக, இந்த கூட்டத்தில் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக டெல்லியை விட்டு அதிகம் வெளியேறாத காங்கிரஸ் தலைவர் சோனியா கலந்து கொண்டது, அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியமாகவும் பார்க்கப்பட்டது.
அவருடைய முகத்திலும் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டும் ஓடியது.
ஏனென்றால் ஜூன் மாதம் 23ம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் 16 எதிர்க்கட்சிகள் மட்டுமே கலந்து கொண்டன. ஆனால் பெங்களூரு கூட்டத்தில் இந்த எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துவிட்டது, இதற்கு முக்கியமான தொரு காரணமாக இருக்கலாம்.
மேலும் பாட்னா கூட்டத்தில் எதிர்க்கட்சிகளிடையே ஒருமித்த முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. மாறாக, பெங்களூருவில் கட்சிகளுக்கிடையே உள்ள பிரச்சனைகளைத் தீர்க்க 11 பேர் கொண்ட துணைக் குழு அமைக்கவும், இந்த குழுவில் யார் யார் இடம் பெறுவார்கள் என்பது குறித்து மும்பையில் ஆகஸ்ட் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இரண்டாம் நாள் கூட்டத்தில் பிரதமர் வேட்பாளருக்கான போட்டியில் தங்களுக்கு கொஞ்சமும் ஆர்வம் இல்லை என்பதை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே போட்டும் உடைத்தார்.
அவர் பேசுகையில், “ஆட்சி அதிகாரத்தை பிடிக்கவேண்டும்; பிரதமர் பதவியை பெறவேண்டும் என்பது காங்கிரசின் நோக்கம் அல்ல. ஜனநாயகம், அரசியல் சாசனம், மதச் சார்பின்மை, சமூக நீதி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் லட்சியம்” என்று குறிப்பிட்டார்.
கார்கேவின் இந்த அறிவிப்பு, சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகளை நிம்மதி பெருமூச்சு விட வைத்தது.
பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்து முடிந்து நான்கைந்து நாட்கள் ஆகிவிட்ட நிலையில் மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கொல்கத்தா நகரில் பேசும்போது, அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைப்பது போல ஒரு பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
“அடுத்தாண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் மோடி தலைமையிலான பாஜகவை வீழ்த்துவதற்காக, 26 கட்சிகள் இணைந்து, ‘இந்தியா’ என்ற பெயரில் கூட்டணி அமைத்து இருக்கிறோம். ‘பாரதம் வெல்லும்’ என்பதே எங்கள் கூட்டணியின் ஒரே முழக்கம்.
கூட்டணியில் உள்ள பெரும்பாலான தலைவர்கள், எந்த பதவி மீதும் எங்களுக்கு ஆசையில்லை என்பதை தெளிவாக தெரிவித்து விட்டனர். பாஜகவை தோற்கடித்து, நாட்டில் அமைதியை நிலைநாட்டுவது மட்டுமே எங்கள் குறிக்கோள் என்றும் அவர்கள் உறுதிபட கூறிவிட்டனர். அதேபோல் எனக்கும் பிரதமர் பதவி மீது ஆசையில்லை; ஆர்வமும் இல்லை” என்று அதிரடி காட்டியுள்ளார்.
இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் 2024 தேர்தலுக்கு முன்பாக, அத்தனை எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணைந்து, பாஜகவை எதிர்த்து களம் இறங்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் பிரதமர் பதவியை குறிவைத்து கடந்த ஆண்டே தேசிய அரசியலில் காய்களை நகர்த்த ஆரம்பித்தவர்தான், மம்தா.
அப்படி இருந்தும் இப்போது அவர், ஏன் அந்தர் பல்டி அடித்தார் என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது. ஒருவேளை மோடியை எதிர்த்து தோல்வி கண்டால் அது தனது கட்சியின் இமேஜை அடியோடு சரித்து விடலாம் என்று நினைத்து கூட இந்த முடிவை அவர் எடுத்திருக்கலாம்.
அதேநேரம் அடுத்தடுத்து மல்லிகார்ஜுனா கார்கே, மம்தா இருவரும் பிரதமர் வேட்பாளராக நிற்க விரும்பவில்லை என்று பகிரங்கமாக அறிவித்திருப்பது சமாஜ்வாடி, ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகளின் தலைவர்களுக்கும் ஒரு வாய்ப்பை உருவாக்கி கொடுத்திருக்கிறது என்றே சொல்லவேண்டும்.
ஆனால் அகிலேஷ் யாதவ், சரத் பவார், கெஜ்ரிவால், நிதிஷ் குமார், சீதாராம் யெச்சூரி ஆகிய ஐந்து தலைவர்களும், எப்படி இருந்தாலும் மற்ற எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் படிப்படியாக போட்டி களத்தில் இருந்து வெளியேறி தங்களுக்கு பிரதமர் வேட்பாளர் போட்டிக்கான வாய்ப்பை ஏற்படுத்தி தந்து விடுவார்கள், அதுவரை நாம் பொறுத்திருப்போம் என்று அமைதி காத்து வருவதுபோல் தெரிகிறது.
அதேநேரம் தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, ஜார்க்கண்ட்
முக்தி மோர்ச்சா, ராஷ்ட்ரிய லோக் தளம், முஸ்லிம் லீக், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போன்ற சிறிய கட்சிகளின் தலைவர்களின் எண்ணமோ வேறு விதமாக உள்ளதாக கூறப்படுகிறது.
எதிர்க்கட்சிகள் சார்பில் யாரும் பிரதமர் வேட்பாளராக போட்டியிட முன் வராத நிலையில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலினை
நிறுத்தினால் தேசிய அளவில் பாஜகவுக்கு பலத்த அடியை கொடுக்க முடியும் என்று கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் நம்புகின்றனர்.
இது மாதிரியான இக்கட்டான சூழல் ஏற்பட்டால் அந்த நேரத்தில் சோனியா, மம்தா, சரத்பவார், கெஜ்ரிவால், அகிலேஷ் யாதவ், லாலு பிரசாத் போன்ற முக்கிய தலைவர்களின் ஆதரவும் ஸ்டாலினுக்கு கிடைக்க பிரகாசமான வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.
“எதிர்க்கட்சிகள் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை பிரதமர் வேட்பாளராக நிறுத்த விரும்புவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன” என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.
“ஏனென்றால் மற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் அத்தனை பேருமே மோடி தலைமையிலான பாஜக அரசை வீழ்த்தவேண்டும் என்ற பொதுவான ஒரு கருத்தையே வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால் திமுக தலைவரான ஸ்டாலினோ 2024 தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதைவிட யார் வெற்றி பெற்று விடக்கூடாது என்பதுதான் முக்கியமானது என்று கடந்த சில மாதங்களாகவே கூறி வருகிறார். அதாவது மோடி தலைமையிலான பாஜக அரசு மீண்டும் அமைந்து விடக்கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக அவர் இப்படி பேசுகிறார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
அவருடைய இந்த அணுகுமுறை அத்தனை எதிர்க்கட்சிகளுக்கும்
பிடித்துப் போய்விட்டது.
அதேபோல்தான் தமிழகத்தில் நடக்கும் திராவிட மாடல் ஆட்சி நாட்டிற்கே சிறந்த வழிகாட்டி என்று திமுக ஆட்சியின் பெருமையைப் பற்றி அவர் கூறுவதில் இருந்தே அத்தகையதொரு ஆட்சியை தேசிய அளவிலும் முன்னிலைப்படுத்த விரும்புகிறார், அதற்காக நாமும் தோள் கொடுப்போமே என்று ஸ்டாலினை எதிர்க் கட்சிகள் ஆதரிக்கவும் செய்யலாம்.
ஒருவேளை 2024 தேர்தலில் எதிர்க்கட்சிகள் கூட்டணி வெற்றி பெற்று பிரதமராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டால் தேசிய மற்றும் எல்லையோர நாடுகளின் விவகாரங்களை தீர்த்து வைப்பதில் அவர் மிகுந்த ஆர்வம் காட்டுவார் என்பது நிச்சயம். அது மட்டுமல்ல தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வாய்ப்புகளும் அதிகம்.
குறிப்பாக தமிழகத்திற்கு கடந்த 50 ஆண்டுகளாக பெரும் தலைவலியாக உள்ள காவிரி நதி நீர் பங்கீடு, முல்லைப் பெரியாறு அணை விவகாரம் ஆகியவற்றுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்று நம்பலாம். அதேபோல இலங்கைக்கு 1974ல் தானமாக வழங்கிய கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவர்களின் வாழ்வில் விளக்கு ஏற்றவும் செய்யலாம்.
இப்படி பல்வேறு நன்மைகள் ஸ்டாலின் தலைமையிலான மத்திய அரசு மூலம் தமிழகத்திற்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. 1996ம் ஆண்டு மத்தியில் திமுக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உருவானபோது திமுக தலைவர் கருணாநிதி எனது உயரம் எனக்கு தெரியும் என்று கூறி அதைத் தட்டி கழித்து விட்டார். ஆனால் அவருடைய மகனான ஸ்டாலின் அப்படியெல்லாம் எளிதில் ஒதுங்கிக் கொண்டு விடமாட்டார்” என்று நம்பிக்கையுடன் அந்த அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
எது எப்படியோ எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார்? என்ற கேள்விக்கு விடை கிடைத்து விட்டது போலவே தெரிகிறது!