அடுத்தடுத்து பேச்சுவார்த்தை தோல்வி ; 5வது நாளாக தொடரும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம்..!!

Author: Babu Lakshmanan
31 December 2022, 10:07 am
Quick Share

சென்னை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் 5வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

சமவேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தற்போதைய திமுக அரசு தங்களின் கோரிக்கை குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காததால், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகனார் வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 27ம் தேதி முதல் உண்ணாவிரதப்போராட்டத்தை தொடங்கி இருக்கின்றனர்.

இதையடுத்து, போராட்டக்காரர்களுடன் தொடக்கக்கல்வி இயக்குனர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனால் இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காக்கர் லா உஷா, போராட்டம் நடத்தும் இடைநிலை ஆசிரியர்களின் பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 30 நிமிடம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை.

இதையடுத்து, போராட்டம் தொடரும் என்று இடைநிலை ஆசிரியர்கள் பதிவு மூப்பு இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராபர்ட் தெரிவித்துள்ளார். முதல் அமைச்சரை சந்திக்கும்வரை போராட்டம் தொடரும் என்றும், முதல் அமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில், 5வது நாளாக ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 542

    0

    0