‘தேதியை சொல்லுங்க’.. மீண்டும் பேச்சுவார்த்தை தோல்வி.. போராட்டம் தொடரும் என இடைநிலை ஆசிரியர்கள் அறிவிப்பு

Author: Babu Lakshmanan
29 December 2022, 1:37 pm

சென்னை : சென்னையில் 3வது நாளாக போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

சமவேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தற்போதைய திமுக அரசு தங்களின் கோரிக்கை குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காததால், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகனார் வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 27ம் தேதி முதல் உண்ணாவிரதப்போராட்டத்தை தொடங்கி இருக்கின்றனர்.

இதையடுத்து, போராட்டக்காரர்களுடன் தொடக்கக்கல்வி இயக்குனர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனால் தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களில் 40 ஆசிரியர்களுக்கு மேலாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காக்கர் லா உஷா, போராட்டம் நடத்தும் இடைநிலை ஆசிரியர்களின் பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். அதன்படி, சங்கத்தின் பொதுச்செயலாளர் ராபர்ட் தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் தலைமை செயலகத்திற்கு பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், இந்தப் பேச்சுவார்த்தையிலும் எந்தவித உடன்பாடும் எட்டவில்லை. இதனால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த சங்கத்தின் பொதுச்செயலாளர் ராபர்ட், “திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். ஆனால், அதனை எப்போது நிறைவேற்றுவீர்கள் என்பது தான் இங்கு பிரச்சனை. 13 ஆண்டுகள் இப்படியே சென்றுவிட்டன. தூய்மைப் பணியாளர்கள் வாங்கும் அளவுக்கு கூட இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் இல்லை. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. நாளை அமைச்சர்கள் சந்தித்து பேசுவதாக தெரிவித்துள்ளனர். மீண்டும் போராட்டம் தொடரும்,” எனக் கூறினார்.

  • suriya act in venky atluri movie soon before vaadivaasal மீண்டும் ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்கும் சூர்யா? அதுவும் இந்த டைரக்டர் படத்துலயா?