மேயர் பதவிக்காக மிரட்டும் காங்., : ‘ரூட்’டை மாற்றும் திமுக.. அனல் பறக்கும் அரசியல் களம்!!
Author: Udayachandran RadhaKrishnan27 February 2022, 1:39 pm
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் சேர்ந்து 49 சதவீத ஓட்டுகளைப் பெற்று, மொத்தமுள்ள 12 ஆயிரத்து 838 வார்டுகளில் சுமார் 8000 இடங்களைக் கைப்பற்றியுள்ளன.
மேயர், துணை மேயர் பதவிகள்
சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட 21 மாநகராட்சிகளிலும் திமுக பெரும்பான்மை பெற்று அத்தனை மேயர் பதவிகளையும் தன் வசப்படுத்திக் கொள்ளும் நிலையில் இருக்கிறது.
ஒவ்வொரு மாநகராட்சியிலும் திமுகவில் செல்வாக்கு பெற்ற ஏராளமானோர் கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள். அவர்களில் பலர் ஒரே மாநகராட்சியில் மேயர், துணை மேயர் பதவிகளைக் கைப்பற்ற அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் மூலம் காய்களை நகர்த்தியும் வருகின்றனர்.
திணறி வரும் திமுக
இதேபோல் நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை தேர்வு செய்வதிலும் வெற்றி பெற்ற திமுகவினரிடையே கடும் போட்டி நிலவுகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தலைவர் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் நடத்தப்பட்டு இருந்தால் இந்த சூழல் உருவாகி இருக்காது. இதனால் பதவி எதுவும் கிடைக்காத தம் கட்சியினரை எப்படி சமாளிப்பது என்று திமுக தலைமை திணறி வருகிறது.
காங்கிரஸ் வைத்த செக்
இந்த நிலையில்தான் தமிழக காங்கிரஸ் திமுகவின் வயிற்றில் புளியை கரைக்கும் விதமாக நாகர்கோவில், கடலூர், திருச்சி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 5 மாநகராட்சிகளின் மேயர் பதவிகளை தங்களுக்கு ஒதுக்குமாறு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதேபோல சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சிவகாசி, கரூர் உள்ளிட்ட மாநகராட்சிகளில் துணை மேயர் பதவிகளையும் 15-க்கு மேற்பட்ட நகராட்சித் தலைவர்கள் பதவிகளையும் திமுக தலைமையிடம் காங்கிரஸ் கேட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
விசிக வைத்த கோரிக்கை
ஆனால் முன்கூட்டியே இந்த தகவலை தெரிந்து கொண்ட திமுக தலைமை சுதாரித்துக் கொண்டது. அதற்கு முக்கிய காரணம் விசிக தலைவர் திருமாவளவன். அவர் அண்மையில் கடலூர் மேயர் பதவி, மற்ற 20 மாநகராட்சிகளில் 9 துணை மேயர் பதவிகளை விசிகவுக்கு ஒதுக்கவேண்டும் என்று கோரி திமுக தலைமையிடம் ஒரு பெரிய பட்டியலை அளித்திருந்ததுதான்.
இதைத்தொடர்ந்து காங்கிரஸ் விசிக அளிக்கும் நெருக்கடியை சமாளிக்க திமுக தலைமை ஒரு திட்டத்தை வகுத்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
3 துணை மேயர்கள்?
திமுகவில் முக்கிய பதவிகளை கைப்பற்ற கடும் போட்டி நிலவும் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு உள்ளிட்ட மாநகராட்சிகளில் இரண்டு அல்லது மூன்று துணை மேயர்களை நியமிக்கலாம் என்ற முடிவுக்கு அறிவாலயம் வந்திருப்பதாக தெரிகிறது.
மாநகராட்சிகளை பொறுத்தவரை மாமன்ற குழு, மண்டல குழுக்கள் முக்கியமானவை. இவற்றில் நிர்வாக வசதிக்காக நியமன குழு, நிதி மற்றும் வரிசீராய்வு குழு, கணக்கு குழு, பணிகள் குழு, நகரமைப்பு குழு, சுகாதாரக்குழு, கல்விக் குழு என்னும் குழுக்களும் உண்டு.
இவற்றில் குழுத்தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் உறுப்பினராக இருப்பார்கள். இந்த குழுக்கள், பெயரளவுக்கு மட்டுமே செயல்படும் என்றபோதிலும் துணை மேயர், மண்டலத் தலைவர் பதவிகளுக்கு அடுத்ததாக, கவுரவ பதவியாக, குழு தலைவர் பதவி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனால் இந்தப் பதவிகளில் ஏதாவது ஒன்றை காங்கிரஸ் விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்துவிட்டு மேயர், துணை மேயர் பதவிகளை திமுகவே வைத்துக்கொள்வது என்று திட்டம் தீட்டப்பட்டு இருப்பதாக பேசப்படுகிறது.
திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த காங்கிரஸ்!!
இந்நிலையில்தான் சென்னையில் செய்தியாளர்களிடம், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசும்போது திமுகவுக்கு கடும் அதிர்ச்சியளிக்கும் விதமாக ஒரு தகவலை குறிப்பிட்டார்.
“சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் 20 இடங்களை வாங்கி 4 இடங்களில் வெற்றி பெற்ற பாஜகவுக்கு, 3-வது இடம் குறித்து உரிமை கோருவதில் உண்மை இருக்கவேண்டும். தமிழகத்தில் பாஜக மூன்றாவது கட்சியாக அல்ல, 30-வது கட்சியாக இருந்தாலும் அதுகுறித்து எங்களுக்கு கவலை இல்லை.
ஆளும் கட்சியாக காங்கிரஸ் மாறும்
தமிழகத்தில் காங்கிரஸ் ஆளும் கட்சியாக ஒரு நாள் மாறும். வருகிற 28-ம் தேதி தமிழகம் வரும் ராகுல் காந்தி, ஸ்டாலின் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ நூலின் முதல் பாகத்தை வெளியிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த விழாவுக்கு பின்பு நகர்ப்புற உள்ளாட்சியில் தேர்வான உறுப்பினர்களுக்கு அவர்களின் கடமைகள் பற்றி ராகுல் எடுத்துரைப்பார்” என்று தெரிவித்தார்.
திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து கொண்டே, தமிழகத்தில் ஒரு நாள் ஆளும் கட்சியாக காங்கிரஸ் மாறும் என்று கே.எஸ்.அழகிரி அதிரடியாக கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.
அது மட்டுமின்றி திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலினுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
காங்கிரஸ் கோரிக்கை நியாயமானது
இதுகுறித்து அரசியல் நோக்கர்கள் கூறும்போது “திமுக கூட்டணியில் காங்கிரஸ் 21 மாநகராட்சிகளில் 73 வார்டுகள் உட்பட மொத்தம் 592 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
தமிழகத்தில் கடந்த காலத்தில் 6 மாநகராட்சிகள் இருந்தபோதே 1996-ல் தமாகாவுக்கும், 2006-ல் காங்கிரஸ் கட்சிக்கும் 2 மேயர் பதவிகளை திமுக வழங்கியதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறுகின்றனர். தற்போது 21 மாநகராட்சிகள் உள்ளதால் 5 மாநகராட்சிகளின் மேயர் பதவிகளை காங்கிரஸ் எதிர்பார்க்கிறது.
அக்கட்சியின் கோணத்தில் பார்த்தால் இது நியாயமான ஒன்றுதான். ஏனென்றால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இல்லாமல் போயிருந்தால் திமுகவுக்கு இத்தகைய பெரும் வெற்றி கிடைத்திருக்குமா என்பது கேள்விக்குறிதான். அதனால்தான் சத்யமூர்த்தி பவனில் நடந்த காங்கிரஸ் உயர் மட்ட ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் 5 மேயர் பதவிகளை கேட்பது என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
திமுகவுக்கு மறைமுக மிரட்டல்
எதிர்பார்க்கும் மாநகராட்சிகளில் மேயர், துணை மேயர் பதவிகளை கொடுக்காமல் தங்களை திமுக ஏமாற்றி விடக்கூடாது என்பதற்காக திமுக தலைமையை மறைமுகமாக மிரட்டும் விதத்தில் கே எஸ் அழகிரி தமிழகத்தில் ஒரு நாள் காங்கிரஸ் ஆட்சி மலரும் என பேசியிருக்கிறார் என்றே கருதத் தோன்றுகிறது.
ஆனாலும் அவர் எதிர்பார்க்கும் அளவிற்கு மேயர், துணை மேயர் பதவிகளை திமுக
வாரி வழங்குமா?…என்பது சந்தேகம்தான். ஏனென்றால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போதே தமிழக காங்கிரஸ் விரும்பிக் கேட்ட வார்டுகளை திமுக
ஒதுக்கவில்லை.
சமாளிக்கும் திமுக
அதனால் மாநகராட்சிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட துணைமேயர் பதவிகளை உருவாக்கி அதில் ஒன்றிரண்டு பதவிகளை காங்கிரசுக்கும், விசிகவுக்கும் திமுக ஒதுக்கீடு செய்யலாம். அல்லது மண்டல குழுக்களின் தலைவர் பதவியை அவர்களுக்கு கொடுத்து சமாளிக்கவும் வாய்ப்பு இருக்கிறது” என்று அந்த அரசியல் நோக்கர்கள் தெரிவித்தனர்.
கூட்டணிக் கட்சிகளின் கோரிக்கை மீது திமுக என்ன முடிவு எடுக்கப் போகிறது? என்பதை அறிந்து கொள்ள இன்னும் ஓரிரு நாட்கள் பொறுத்திருக்கவேண்டும்!