அதிமுகவுடன் கூட்டணி அமைக்க தமிழக வெற்றிக் கழகத்திற்கு அழைப்பு? ட்விஸ்ட் வைத்த ஜெயக்குமார்!

Author: Udayachandran RadhaKrishnan
23 June 2024, 1:50 pm

தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய்க்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

இப்படி போட்டி போட்டு பிறந்த நாள் வாழ்த்து கூறியதால் அடுத்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வுடன் விஜய் கூட்டணி சேருவாரா? என்று ஜெயக்குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் கூறியதாவது:-விஜய்யும் பொதுச்சேவையில் தன்னை ஈடுபடுத்தி இருக்கிறார்.

அவருக்கு வாழ்த்து தெரிவித்தது அரசியல் பண்பாட்டின் அடிப்படையில் தான். வாழ்த்து சொன்னதை வைத்து கூட்டணிக்கு அழைத்ததாக அர்த்தம் இல்லை. ஆனால் அரசியலில் நிரந்தர நண்பனும் கிடையாது.

நிரந்தர எதிரியும் கிடையாது. தேர்தல் நேரத்தில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். கூட்டணிகளை கட்சி தலைமைதான் தேர்தல் நேரத்தில் முடிவு செய்யும்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள் இந்த ஆட்சியின் அவலத்தை காட்டுகிறது. கள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் இந்த அரசு அக்கறை காட்டவில்லை. தவறு செய்தவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்குவோம் என்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

ஏற்கனவே விழுப்புரத்திலும், செங்கல்பட்டிலும் கள்ளச்சாராய சாவுகள் ஏற்பட்ட போதும் இதே டயலாக்கைதான் சொன்னார்கள். ஆனால் அடக்க முடியவில்லை. அதற்கு பதிலாக குற்றவாளிகளும், சமூக விரோதிகளும் தான் இந்த அரசை அடக்கி வைத்துள்ளார்கள்.

தவறுகளை சுட்டிக்காட்டும் எதிர்கட்சிகள் மீது இரும்புக்கரத்தை நீட்டுவதும், ஆனால் சாராய வியாபாரிகள் மீது கரும்பு கரத்தை நீட்டுவதும்தான் இந்த ஆட்சியில் நடக்கிறது.

அ.தி.மு.க. ஆட்சியின் போது மு.க.ஸ்டாலின் வாயில் கருப்பு துணிகட்டி, கருப்பு உடையும் அணிந்த படி குடும்பத்தோடு மதுக்கடையை மூடுவோம் என்று கோஷம் எழுப்பினார். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு டாஸ்மாக்கை ஒழிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தி.மு.க.வை பொறுத்தவரை சொல்வது ஒன்று செய்வது மற்றொன்றாகத்தான் இருக்கும். தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் எதையும் நிறைவேற்றவில்லை. கள்ளச்சாராய சாவுகளுக்கு அதிகாரிகள் மீது பழிபோட்டு சஸ்பெண்டு செய்துள்ளார்கள். இந்த ஆட்சியை அடுத்து வரும் தேர்தலில் மக்கள் சஸ்பெண்டு செய்வார்கள் என கூறினார்.

  • ajith kumar video after accident viral on internet ஐயோ நம்ம அஜித்குமாரா இது? விபத்தில் சிக்கிய பின் வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோ…