குஜராத்தின் வெற்றியை கொண்டாடிய மும்பை வீரர்கள்.. மீண்டும் RCB-யின் கையை விட்டுப்போன மகுடம்.. அப்செட்டான கோலி!!

Author: Babu Lakshmanan
22 May 2023, 9:59 am

குஜராத்திற்கு எதிரான போட்டியில் பெங்களூரூ அணி தோல்வியடைந்ததன் மூலம், மும்பை அணி பிளே ஆஃப்பிற்கு முன்னேறியது.

சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், பெங்களூரூ – குஜராத் அணிகள் மோதின. பிளே ஆஃப்பிற்கு தகுதி பெற வேண்டுமானால், இந்தப் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற சூழலில் பெங்களூரூ அணி விளையாடியது.

முதலில் பேட் செய்த பெங்களூரூ அணிக்கு கோலி – டூபிளசிஸ் இணை வழக்கம் போல அபார தொடக்கத்தை கொடுத்தது. டூபிளசிஸ் (28), மேக்ஸ்வெல் (11), லோம்ரோர் (1), பிரேஸ்வெல் (26), தினேஷ் கார்த்திக் (0) என விக்கெட்டுக்களை இழந்தாலும், கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் சதம் அடித்து அசத்தினார். இதன்மூலம், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக சதம் (7) அடித்த வீரர் என்ற பெருமையை கோலி பெற்றார். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரூ அணி 197 ரன்கள் குவித்தது.

கடினமான இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணிக்கு தொடக்க வீரர் சஹா (12) ஏமாற்றம் கொடுத்தார். இதன்பிறகு, இம்பேக்ட் வீரராக களமிறங்கிய விஜய் சங்கர் மற்றும் கில் இணை சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தது. இருவரும் 2வது விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் ரன்களை சேர்த்தனர். விஜய் சங்கர் (53), ஷனாகா(0), மில்லர் (6) ஆட்டமிழந்தாலும், கில் தனது வேலையை கனகச்சிதமாக செய்து முடித்தார். கடைசி ஓவரில் 5 பந்துகள் மீதம் வைத்து, அணி வெற்றியை பெறச் செய்ததுடன், சிக்சர் அடித்து சதம் விளாசினார்.

இந்த தோல்வியின் மூலம், பெங்களூரூ அணி ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது. அதேவேளையில், மும்பை அணி பிளே ஆஃப்பிற்கு தகுதி பெற்றது.

இதனிடையே, குஜராத் – பெங்களூரூ அணியின் போட்டியை ஓட்டலில் பார்த்துக் கொண்டிருந்த மும்பை இந்தியன்ஸ் வீரர்கள், கில் அடித்த சிக்சரை பார்த்து மகிழ்ச்சியில் கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

  • siruthai siva direct new film after kanguva flop தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?